Paristamil Navigation Paristamil advert login

இளையராஜா பயோபிக்கிலிருந்து விலகிய கமல்..

இளையராஜா பயோபிக்கிலிருந்து விலகிய கமல்..

31 பங்குனி 2024 ஞாயிறு 09:31 | பார்வைகள் : 5396


இசையமைப்பாளர் இளையராஜாவின் பயோபிக் அவரது பெயரில் உருவாகிறது. இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்கிறார். இந்தப் படத்தின் அறிமுக விழா சமீபத்தில் நடந்தது. இந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இளையராஜாவிடம் படத்தை இயக்க அருண் மாதேஸ்வரனை தனுஷ் பரிந்துரைத்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு முன்பு மாரி செல்வராஜ் உட்பட பல இயக்குநர்கள் பரிசீலனையில் இருந்தாலும் அருண் மாதேஸ்வரனை இளையராஜா டிக் அடித்திருக்கிறார்.

’ராக்கி’, ‘சாணிக்காயிதம்’, ‘கேப்டன் மில்லர்’ என அருண் மாதேஸ்வரன் இதற்கு முன்பு இயக்கிய படங்கள் எல்லாமே ரத்தம், வன்முறை கதைக்களங்களாக இருந்தது. இதனால், அருண் மாதேஸ்வரன் இளையராஜா படத்தை எப்படி இயக்குவாரோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இல்லாமல் இல்லை. படத்தின் அறிமுக விழாவுக்கு வந்த இயக்குநர் வெற்றிமாறன் உட்பட பல பிரபலங்களும் இதையே சூசகமாக “அருண் மாதேஸ்வரனுக்கு கிடைத்த கிஃப்ட் இந்தப் படம்” எனச் சொல்லி சென்றனர்.

ஆனால், படத்தின் திரைக்கதையை நடிகர் கமல்ஹாசன் எழுத இருப்பதாக அறிவித்தார். இது அருண் மாதேஸ்வரன் மீது சந்தேகம் கொண்ட ரசிகர்களுக்கு சற்றே ஆறுதல் தருவதாக இருந்தது. இப்போது பேரதிர்ச்சியாக படத்தில் இருந்து கமல்ஹாசன் விலகி இருப்பதாகத் தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது. படத்தின் இயக்குநர் தேர்வில் இருந்து அனைத்திலும் தனுஷின் தலையீடு அதிகமாக இருப்பதே கமலின் இந்த வெளியேற்றத்துக்குக் காரணம் என்கிறார்கள் சிலர்.

ஆனால், படத்தின் மீது நெகட்டிவிட்டி பரப்பவே இந்த மாதிரியான தகவல்கள் வெளியாகிறது எனவும், தனுஷ் கமல் மீது பெரும் மரியாதை வைத்திருப்பதால் கமல் நிச்சயம் திரைக்கதை எழுதுவார் என்றும் சொல்கின்றனர் சிலர். இளையராஜாவின் இசை பயணத்தில் மணி ரத்னம், ரஹ்மான், கங்கை அமரன், வைரமுத்து எனப் பலருடைய பங்கும் முக்கியம் என்பதால் அவர்கள் கதாபாத்திரத்திற்கான நடிகர்கள் தேர்வும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்