9 வயது சிறுமியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நபர்!
12 ஆவணி 2023 சனி 09:00 | பார்வைகள் : 6421
அமெரிக்காவின் சிகாகோ நகரின் போர்ட்கேஜ் பார்க் பகுதியில் தன் தந்தையுடன் வசித்து வந்தவர் சிறுமி ஸெரபி மெதினா (9).
அவர்களின் வீட்டின் தெருவின் எதிர் புறத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தவர் மைக்கேல் குட்மேன் (43).
இந்நிலையில் அந்த பகுதியில் குழந்தைகள் விளையாடுவதால் சத்தம் அதிகமாக இருப்பதாக குறை கூறியுள்ளார்.
குழந்தைகளால் அதிக சத்தம் வருவதாக அதிருப்தி அடைந்த குட்மேன், ஸெரபியின் மீதும் குற்றம் சாட்டி, ஸெரபியின் தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த சனிக்கிழமை இரவு சுமார் 09:30 மணியளவில் ஸெரபி, தனது வீட்டருகே குழந்தைகளுக்கான ஸ்கூட்டரை ஓட்டி விளையாடிக்கொண்டிருந்தார்.
அவருடன் அவரின் தந்தையும் இருந்தார்.
அப்போது ஒரு துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது.
ஸெரபியின் தந்தையின் உடனே ஸெரபியை வீட்டிற்கு உள்ளே போக சொல்லி அவசரப்படுத்தினார்.
உடனே ஸெரபியும் தனது குழந்தைகளுக்கான ஸ்கூட்டரில் தனது அபார்ட்மென்ட்டின் உள்ளே செல்ல முற்பட்டாள்.
அப்போது குட்மேன் கையில் ஒரு துப்பாக்கியுடன் தனது வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
இதனை கண்ட ஸெரபியின் தந்தை அவரை தடுத்து நிறுத்தி விசாரிக்க முற்பட்டார்.
ஆனால் அவரை அலட்சியப்படுத்திய குட்மேன் ஸெரபியை நோக்கியே வேகமாக நடந்தார்.
இதனையடுத்து விபரீதத்தை உணர்ந்த ஸெரபியின் தந்தை தன் மகளை காக்க அவளை நோக்கி ஓடினார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் செல்லும் முன்பாக குட்மேன் துப்பாக்கியை உயர்த்தி ஸெரபியின் தலையை நோக்கி சுட்டார்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த ஸெரபியின் தந்தை குட்மேனுடன் போராடியதில் துப்பாக்கி மீண்டும் வெடித்தது.
இதில் குட்மேன் கண்ணில் குண்டு பாய்ந்தது. குட்மேன் துப்பாக்கியால் சுட்டதில் ஸெரபி பரிதாபமாக உயிரிழந்தார்.
உடனே தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினரும், அவசர கால மீட்பு குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
சம்பவ பகுதியிலிருந்து 9 மிமீ துப்பாக்கி குண்டுக்கான மேற்பகுதியும் ஒரு துப்பாக்கியையும் புலனாய்வு அதிகாரிகள் கண்டெடுத்தனர்.
குட்மேனின் இல்லத்தின் சுவற்றிலும் ஒரு குண்டு பாய்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
காயமடைந்த குட்மேன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாட நிலையில் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார்.
இந்நிலையில் அவர் மீது பிணையில் வர முடியாத பிரிவில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.