Essonne : பாடசாலைக்கு ஆயுதத்துடன் வந்த மாணவன் கைது!
31 பங்குனி 2024 ஞாயிறு 13:07 | பார்வைகள் : 4197
பாடசாலைக்கு ஆயுதத்துடன் வருகை தந்த 15 வயதுடைய மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மார்ச் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இச்சம்பவம் Brunoy (Essonne) நகரில் இடம்பெற்றுள்ளது.
அங்குள்ள Collège Albert Camus பாடசாலை வளாகத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவன், 12 செ.மீ நீளமுடைய கத்தி ஒன்றை தனது பைக்குள் வைத்து பாடசாலைக்கு எடுத்து வந்திருந்த நிலையில், அது சக மாணவர்களால் அடையாளம் காணப்பட்டு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது.
பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குறித்த மாணவன் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது.
குறித்த மாணவன் Yemen நாட்டில் பிறந்த பிரெஞ்சு குடியுரிமை கொண்டவர் எனவும், எந்த பயங்கரவாத பின்னணியும் அம்மாணவனுக்கு இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தை அடுத்து பாடசாலை மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும், அவர்களுக்கு அங்கு உளநல சிகிச்சை மையம் ஆரம்பிக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.