Paristamil Navigation Paristamil advert login

காங்கிரசுக்கு மேலும் ரூ.1,745 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்

காங்கிரசுக்கு மேலும் ரூ.1,745 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்

1 சித்திரை 2024 திங்கள் 02:39 | பார்வைகள் : 2838


காங்கிரஸ் கட்சி கடந்த 2018-2019-ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததாக கூறி, அந்த கட்சியின் 4 வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது.

மேலும் அபராதமாக காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.135 கோடியை வருமான வரித்துறை எடுத்துக்கொண்டது. இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்தது. அதனை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதனிடையே கடந்த 2017-2018, 2018-2019, 2019-2020, 2020-2021 ஆண்டுகள் வரையிலான 4 நிதியாண்டுகளுக்கான காங்கிரசின் வருமானவரி கணக்குகளை வருமானவரித்துறை மறுமதிப்பீடு செய்யதது.

அதை தொடர்ந்து, மேற்கண்ட 4 ஆண்டுகளுக்கான வருமானவரி கணக்கில் நிலவும் முரண்பாடுகளுக்காக காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை ரூ.1,823 கோடியே 8 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இதில், ரூ.1,076 கோடியே 35 லட்சம் அபராதம் ஆகும். மீதி தொகை வட்டி ஆகும்.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை கடந்த 29-ந் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் 2014-15 முதல் 2016-17 வரையிலான 3 நிதியாண்டுகளுக்கான வருமானவரி கணக்கில் நிலவும் முரண்பாடுகளுக்காக காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை மேலும் ரூ.1,745 கோடி அபராதம் விதித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை நேற்று நோட்டீஸ் அனுப்பியது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தமாக ரூ.3,567 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வங்கி கணக்குகளில் இருந்து ரூ.135 கோடியை வருமானவரித்துறை எடுத்தது தொடர்பாக காங்கிரஸ் தொடர்ந்துள்ள வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் (இன்று) விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்