Essonne : காவல்துறையினர் மீது சுற்றி வளைத்து தாக்குதல்!!
1 சித்திரை 2024 திங்கள் 07:59 | பார்வைகள் : 5681
போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்றை பிடிக்கச் சென்ற காவல்துறையினரை 30 பேர் வரையானவர்கள் இணைந்து தாக்கியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை Ris-Orangis (Essonne) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள கட்டிடம் ஒன்றில் வைத்து போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, குற்றத்தடுப்பு காவல்துறையினர் (brigade anticriminalité) குழு ஒன்று சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றது. அப்போது அவர்களை சூழ்ந்துகொண்ட பலர் காவல்துறையினரை தாக்கியுள்ளனர்.
30 பேர் வரை இணைந்து தாக்குதல் மேற்கொண்டதாகவும், இதில் இரு காவல்துறையினர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதை அடுத்து மேலதிக காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். ஐவர் கைது செய்யப்பட்டனர். பலர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரனைகள் இடம்பெற்று வருகிறது. தாக்குதலுக்கு இலக்கான காவல்துறையினருக்கு மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.