மெக்சிகோவின் தென் பகுதி கடற்கரையில் 8 சீன புலம்பெயர்ந்தவர்கள் உயிரிழப்பு
1 சித்திரை 2024 திங்கள் 11:17 | பார்வைகள் : 3981
மெக்சிகோவின் தென் பகுதியில் கடற்கரையில் எட்டு சீன குடிமக்கள் உயிரிழந்த சோகமான சம்பவம் நடைபெற்றுள்ளது.
அமெரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 8 சீன குடிமக்கள் மெக்சிகோவின் தென் பகுதி கடற்கரையில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
படகில் பயணம் செய்தவர்களில் ஏழு பெண்களும் ஒரு ஆணும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளனர்.
எல்லை கடந்து அமெரிக்கா செல்ல முயற்சிக்கும் நபர்களால் அடிக்கடி பயன்படுத்தப்படும் பாதையில் இந்த படகு கவிழ்ந்துள்ளது.
மெக்சிகோவின் சியாபாஸ்(Chiapas) மாநிலத்திலிருந்து (குவாத்திமாலா எல்லையை ஒட்டிய பகுதி) வியாழக்கிழமை புறப்பட்ட இந்த படகை ஓட்டியவர் மெக்சிகன் குடிமகன் என தகவல்கள் தெரிவிக்கின்றன. படகு ஓட்டியவரின் நிலை குறித்து இதுவரை தெளிவில்லை.
ஒக்சாகா(Oaxaca) மாநிலத்தின் பிளாயா விசென்டே(Playa Vicente) நகரில் உள்ள கடற்கரை அருகே இந்த உடல்கள் கண்டறியப்பட்டதாக ஒக்சாகா அரசு அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம், சிறந்த வாழ்க்கைக்காக ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளும் குடியேற்றத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் கொடுமையான யதார்த்தத்தை எடுத்துக்காட்டுகிறது.
பெரும்பாலும் மத்திய அமெரிக்காவிலிருந்து வரும் குடியேற்றத் தொழிலாளர்கள் பற்றிய புள்ளிவிவரங்கள் இருந்தாலும், சீனா, இந்தியா உள்ளிட்ட தொலைதூர நாடுகளிலிருந்து வரும் மக்கள் மெக்சிகோ வழியாக அமெரிக்க எல்லைக்கு செல்ல முயற்சிக்கும் போக்கு அதிகரித்து வருவதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
வன்முறை மற்றும் வறுமையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற ஆசையால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் இந்தப் பாதையில் பயணிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.