கோதுமை அடை தோசை..
2 சித்திரை 2024 செவ்வாய் 08:59 | பார்வைகள் : 1700
கோதுமை அடையில் காய்கறிகள் சேர்த்து செய்யப்படுவதால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவாக இருக்கும். எனவே சுவையான அதே சமயத்தில் ஆரோக்கியம் நிறைந்த கோதுமை அடை தோசை எப்படி செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள் :
விளம்பரம்
கோதுமை மாவு - 1 கப்
ரவை - 2 ஸ்பூன்
பச்சரிசி மாவு - 2 ஸ்பூன்
கடலை பருப்பு - 1/2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கேரட் - 1
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 4 பல்
வர மிளகாய் - 4
கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள கோதுமை மாவு, பச்சரிசி மாவு, ரவை, சிறிதளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
பின்னர் மிக்ஸி ஜார் ஒன்றில் பூண்டு பல், இஞ்சி துண்டு, சீரகம் மற்றும் வரமிளகாய் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
பிறகு அதை தயார் செய்து வைத்துள்ள மாவு கலவையுடன் சேர்த்து நன்றாக கலந்து 5 - 10 நிமிடங்களுக்கு அப்படியே மூடி போட்டு ஊறவைத்து கொள்ளுங்கள்.
தற்போது கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் கடலை பருப்பு போட்டுக்கொள்ளுங்கள்.
இவை பொரிந்ததும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி மற்றும் கேரட் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.
அனைத்தும் நன்கு மென்மையாக வதங்கியவுடன் சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்கவும்.
தற்போது வதக்கிய அனைத்தையும் நாம் ஏற்கனவே ஊறவைத்த மாவு கலவையுடன் சேர்த்து நன்றாக கலந்து எடுத்து கொள்ளுங்கள்.
அடுத்து தோசை கல் ஒன்றை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் தடவி ஏற்கனவே கலந்து வைத்துள்ள மாவை அடையாக தட்டி கொள்ளுங்கள்.
ஒருபுறம் அடை தோசை பொன்னிறமாக வெந்ததும் அதனை திருப்பி போட்டு சிறிதளவு எண்ணெய் ஊற்றி சிவற விட்டு எடுத்தால் சுவையான கோதுமை அடை தோசை பரிமாற ரெடி.