தமிழகத்துக்கு வெள்ள நிவாரணம் கோரி இன்று வழக்கு தாக்கல்: முதல்வர் தகவல்
3 சித்திரை 2024 புதன் 02:44 | பார்வைகள் : 2029
தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் கோரி, வழக்கு போடப்பட உள்ளது. நிதி பெறவும், உச்ச நீதிமன்ற கதவை தட்ட வேண்டியுள்ளது. இந்த நிலை மாறணும். மாநில கூட்டாட்சிக்கு தொடர்ந்து குரல் எழுப்புவோம்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
லோக்சபா தேர்தலில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர்களான, வேலுார் கதிர் ஆனந்த், அரக்கோணம் ஜெகத்ரட்சகன் ஆகியோருக்கு ஓட்டு கேட்டு, வேலுார் கோட்டை மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
வெள்ளம் வந்தா வர மாட்டார்; நிதி கேட்டால் தர மாட்டார். சிறப்பு திட்டம் கேட்டா செய்ய மாட்டார். இப்படி மக்களை ஏமாற்றி, தமிழகத்துக்கு எந்த நன்மையும் செய்து தராமல், துரோகம் செய்யும் 'பார்ட்டைம்' அரசியல்வாதியாக இருப்பவர்களை நீங்கள் புறக்கணிக்க வேண்டும்.
தேர்தல் முடிந்தவுடன் தமிழகம் பக்கமே வர மாட்டாங்க. உங்க கிட்ட நான் கேட்கிற ஓட்டு, இந்த நாட்டில் சர்வாதிகாரம் தலை துாக்கக் கூடாது; ஜனநாயகம் கேள்வி குறியாகி விடக்கூடாது; சமூக நீதி காற்றில் பறக்க கூடாது; மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் அறவே கூடாது என்பதற்காக தான்.
பழைய சம்பவங்களை கூறி, பொய்யை கூறி, தேர்தல் ஆதாயம் அடைய முயற்சிக்கிறார். அதற்கு தான் கச்சத்தீவு பிரச்னையை பேசுகிறார். இவை, அவர்களுக்கு எதிராகவே திரும்பிவிட்டது. எத்தனை முறை இலங்கை சென்றார். அப்போது இலங்கை அரசிடம் பேசினாரா; அப்போது எல்லாம் கச்சத்தீவு பற்றி பேசினாரா?
நேரு காலத்தில் நடந்தது ஞாபகம் இருக்கிறது. ஆனால், 2 ஆண்டுக்கு முன் நடந்தது ஞாபகம் இல்லை...
சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்திற்கு மோடி வந்தபோது, கச்சத்தீவை மீட்டெடுக்கணும் என கோரிக்கை வைத்தேன். அது, மோடிக்கு ஞாபகம் இருக்கா; அந்த மனுவை படிச்சு பார்த்தாரா?
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கடந்த, 2015ல் கொடுத்த தகவலில், கச்சத்தீவு பற்றி தெரிவித்தார். தேர்தல் வந்தவுடன் தகவலை மாற்றி கொடுத்தார். லோக்சபாவில், கேள்வி எழுப்பியபோது பதில் கூறவில்லை.
ஆர்.டி.ஐ., யில் உரிய பதில் கூறவில்லை. தற்போது ஆர்.டி.ஐ., மூலம் எப்படி தவறான தகவல் கொடுத்தார்கள்; பா.ஜ.,வை சேர்ந்த தனி நபருக்கு, வெளியுறவுத்துறை சார்பான தகவல் எப்படி கொடுத்தார்கள்.
நாளுக்கு நாள், பா.ஜ., மீது மக்களுக்கு கோபம் வருவதால், பல்டி அடிக்கின்றனர். சட்டத்தை வைத்து நீதிமன்றங்களை நாடுகிறோம்.
மாநிலங்களுக்கான நிதி முடக்குவது, கவர்னர்களை வைத்து மசோதாவை முடக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டுகின்றனர். அதற்கெல்லாம் உச்ச நீதிமன்றம் சென்று நிவாரணம் பெற்று வருகிறோம்.
தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் கோரி, இன்று காலை வழக்கு போடப்பட உள்ளது. நிதி பெறவும், உச்ச நீதிமன்ற கதவை தட்ட வேண்டியுள்ளது. இந்த நிலை மாறணும், மாநில கூட்டாட்சிக்கு தொடர்ந்து குரல் எழுப்புவோம். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், அமைச்சர்கள் துரைமுருகன், வேலு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.