Paristamil Navigation Paristamil advert login

தி.மு.க., இருக்கும் வரை பா.ஜ.,வின் எண்ணம் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின்

தி.மு.க., இருக்கும் வரை பா.ஜ.,வின் எண்ணம் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின்

6 சித்திரை 2024 சனி 01:47 | பார்வைகள் : 2179


தமிழகத்துக்கு நிவாரண நிதி கொடுக்காத மோடி, இன்னும் 4 முறை வரப் போகிறாராம். தமிழக மக்களிடம், 'இட்லி பிடிக்கும்.. பொங்கல் பிடிக்கும்' எனக் கூறினால் போதும் என நினைக்கிறார்" என, முதல்வர் ஸ்டாலின் விமர்சித்தார்.

தி.மு.க., கூட்டணியில் கடலூர், விழுப்புரம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

சமூக நீதிக் கொள்கையைப் பாதுகாக்க வேண்டிய தேர்தல் இது. இந்தியாவை பாதுகாக்க இண்டியா கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டிய தேர்தல் இது. நாட்டை மத, இன, மொழி அடிப்படையில் பிரித்து, இடஒதுக்கீட்டை ரத்து செய்ய அனைத்தையும் பா.ஜ., செய்தது.

'சாதிவாரி கணக்கெடுப்பு கூடாது' என பா.ஜ சொல்கிறது. அந்தக் கட்சிக்கு ராமதாஸ் பல்லக்கு தூக்குகிறார். பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து மோடியையும் அமித்ஷாவையும் புகழ்கிறார்.

மோடி ஆட்சிக்கு மதிப்பெண் போடுமாறு கேட்டபோது, 'சைபருக்கு கீழே ஒன்றும் இல்லை. இருந்தால் அதைக் கொடுப்பேன்' என ராமதாஸ் கூறினார். அவர்களுடன் தான் அவர் கூட்டணி வைத்திருக்கிறார். இந்த சந்தர்ப்பவாத கூட்டணி பற்றி அவரைவிட உங்களுக்கு நன்றாக தெரியும்.

இண்டியா கூட்டணி அரசு, சமூகநீதி அரசாக இருக்கும். அதில் நாங்கள் நிறைவேற்றும் சாதனைகளை தேர்தல் அறிக்கையாக கொடுத்திருக்கிறோம். நமது திட்டங்களை மற்ற மாநிலங்களில் பயன்படுத்துகின்றனர். இப்போது கனடா வரை காலை உணவுத்திட்டம் சென்றுள்ளது.

தமிழகத்தில 1.15 லட்சம் மகளிர் உரிமைத் தொகை சென்றுள்ளது. இதை தங்களின் குடும்பத்துக்கு தேவையான கல்வி, மருத்துவ உதவிக்கான ஆதாரமாக பெண்கள் பார்க்கின்றனர்.

ஆனால், ஆட்சியை குறை சொல்லி ஒருவர் பேசி வருகிறார். அவர் பெயர் பச்சைப் பொய் பழனிசாமி. தன்னுடைய எஜமானருக்கு போட்டியாக அவரும் உருட்டுகிறார். அவர் சொல்லித்தான் நான் ஆயிரம் ரூபாயைக் கொடுப்பதாக சொல்கிறார்.

இவர் காலி செய்த கஜானாவை சீர்படுத்தி திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். 'தி.மு.க., உரிமைத் தொகையை கொடுக்காது.. ஏமாற்றுவார்கள்' என்றார். இப்போது வெட்கமே இல்லாமல் பொய் பேசுகிறார். 'ஒரு மனுஷன் பொய் பேசலாம்... ஏக்கர் கணக்கில் பேசக் கூடாது' என்ற கவுண்டமணி காமெடிதான் நினைவுக்கு வருகிறது.

மோடி இந்தியாவை சீரழித்தார் என்றால் தமிழகத்தை பழனிசாமி சீரழித்தார். கொடநாடு கொலை. கொள்ளை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு, பொள்ளாச்சி பாலியல் கொடுமை, போதைப்பொருள்களை அனுமதித்தது என பழனிசாமி ஆட்சியில் தான் இவை அரங்கேறியது.

ஓர் அலங்கோலமான ஆட்சிக்கு அவரது ஆட்சி ஒரு உதாரணம். இதுவரை நடந்த தேர்தல்களில் தோற்றவர், இந்த தேர்தலிலும் தோற்றுப் போவார். பா.ஜ., உடன் கூட்டணி இல்லை என விழுந்து நடிக்கிறார். இவரது நடிப்பு மக்களிடம் ஒருபோதும் எடுபடாது. அ.தி.மு.க., தொண்டர்கள் கூட அவரை நம்பத் தயாராக இல்லை.

தமிழகத்துக்கு நிவாரண நிதி கொடுக்காத மோடி, இன்னும் 4 முறை வரப் போகிறாராம். தமிழக மக்களிடம், 'இட்லி பிடிக்கும்.. பொங்கல் பிடிக்கும்' எனக் கூறினால் போதும் என நினைக்கிறார்.

எத்தனை முறை வந்தாலும் தமிழகத்தை பா.ஜ.வால் கைப்பற்ற முடியாது. தி.மு.க., இருக்கும் வரை பா.ஜ.,வின் எண்ணம் பலிக்காது. தமிழகத்தின் பொற்காலம் என்பது தி.மு.க., ஆட்சியில் தான்.

தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியது தி.மு.க ஆட்சி. டில்லியிலும் இண்டியா கூட்டணி மூலமாக திராவிட மாடல் ஆட்சி எதிரொலிக்க வேண்டும். ஏனென்றால் பா.ஜ., வீட்டுக்கும் கேடு.. நாட்டுக்கும் கேடு.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்