அரபு கிளப் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற அல் நஸர்
13 ஆவணி 2023 ஞாயிறு 09:26 | பார்வைகள் : 3217
அரபு கிளப் சாம்பியன்ஷிப் தொடரில் 1-2 என்ற கோல் கணக்கில் அல் நஸர் அணி வெற்றி பெற்றுள்ளது.
அரபு கிளப் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டி ரியாத்தில் உள்ள கிங் பஹத் சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நஸர் அணி(Al Nassr), அல் ஹிலால்(Al Hilal) அணியை எதிர்கொண்டது.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காமல் சரிசமமான நிலையில் இருந்தனர்.
இறுதிப் போட்டி என்பதால் வழக்கத்தை விட போட்டி கூடுதல் விறுவிறுப்புடன் நடைபெற்றது, இரு அணிகளும் மாறி மாறி கோல்களை அடிக்க தொடர்ந்து போராடினார்கள்.
இந்நிலையில் அல் ஹிலால் அணி வீரர் மைக்கேல், போட்டியின் முதல் கோலை 51 வது நிமிடத்தில் அடித்து ஆட்டத்தின் தன்மையை மேலும் பரபரப்பு அடைய செய்தார்.
இதையடுத்து பதில் கோலை அடிக்க அல் நஸர் அணி தொடர்ந்து போராடி வந்தது.
இறுதியில் ஆட்டத்தின் 74 வது நிமிடத்தில் அல் நஸர் அணியின் கேப்டன் மற்றும் நம்பிக்கை நட்சத்திரமான ரொனால்டோ கோல் ஒன்றை அடித்து போட்டியை மீண்டும் சமநிலைக்கு கொண்டு வந்தார்.
நேரம் செல்ல செல்ல போட்டி விறுவிறுப்படைந்தது, இருப்பினும் 90 நிமிட முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தனர், எனவே கூடுதல் நேரமாக 30 நிமிடம் ஆட்டத்தில் சேர்க்கப்பட்டது.
இதனிடையே ஆட்டத்தின் 98வது நிமிடத்தில் ரொனால்டோ மீண்டும் ஒரு கோல் அடித்து அல் நஸர் அணியை முன்னிலைக்கு கொண்டு சென்றார்.
அல் நஸர் அணியின் முன்னிலையை அல் ஹிலால் அணியால் ஆட்டத்தின் இறுதி வரை சமநிலை செய்ய முடியாததால் 2023 ம் ஆண்டுக்கான அரபு கிளப் சாம்பியன்ஷிப் தொடரின் வெற்றிக் கோப்பையை அல் நஸர் தட்டிச் சென்றுள்ளது.
போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அல் நஸர் கிளப் அணியில் சேர்ந்த பிறகு இந்த அணி வெல்லும் முதல் கோப்பை இதுவாகும்.
அத்துடன் அல் ஹிலால் அணியை கடந்த 2021ம் ஆண்டு டிசம்பருக்கு பிறகு அல் நஸர் அணி முதல் முறையாக வீழ்த்தி இருப்பதுடன், அரபு கிளப் சாம்பியன்ஷிப் கோப்பையையும் அல் நஸர் கைப்பற்றியுள்ளது.