தொண்டு நிறுவன ஊழியர்கள் படுகொலை... இஸ்ரேல் விளக்கம்

6 சித்திரை 2024 சனி 10:36 | பார்வைகள் : 7309
ஹமாஸ் படைகளின் துப்பாக்கிதாரியை இலக்கு வைத்த நிலையில், தொண்டு நிறுவன ஊழியர்கள் சிக்கியதாக இஸ்ரேல் விசித்திர விளக்கமளித்துள்ளது.
குறித்த விவகாரம் சர்வதேச கவனத்தை ஈர்த்ததுடன், அந்த சம்பவம் மிக மோசமான தவறு என்றும் விதிகளை மீறிய செயல் என்றும் இஸ்ரேல் ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.
தொடர்புடைய தாக்குதலில் பிரித்தானியர் ஒருவர், அவுஸ்திரேலிய நாட்டவர், வடக்கு அமெரிக்க நாட்டவர், பாலஸ்தீனர் மற்றும் ஒரு போலந்து நாட்டவர் என கொல்லப்பட்டனர்.
சுமார் 4 நிமிடங்களில் மூன்று முறை வான் தாக்குதலை முன்னெடுத்திருந்தது இஸ்ரேல்.
இதுபோன்ற சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்பதை இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை என்று போலந்து வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விரிவான குற்றவியல் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளது.
இந்நிலையில், தாக்குதலுக்கு அனுமதி அளித்த இரு ராணுவ அதிகாரிகளை பொறுப்பில் இருந்து நீக்கியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
சைப்ரஸில் இருந்து 300 டன் உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலை உள்நாட்டில் உள்ள கிடங்கிற்கு இறக்குவதை மேற்பார்வையிட்ட நிலையிலேயே உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.
ஆனால் ஹமாஸ் துப்பாக்கிதாரியை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், அந்த துப்பாக்கிதாரிக்கு என்ன ஆனது என்பது குறித்து இஸ்ரேல் ராணுவம் விளக்கமளிக்க மறுத்துள்ளது.
இது மிகப்பெரிய தவறு என்றும் இனி அது நடக்காமல் பார்த்துக்கொள்வோம் என்றும் ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.