தைவான் பாரிய நிலநடுக்கம்..! மாயமான கனேடியர் தொடர்பில் வெளியாகிய தகவல்
7 சித்திரை 2024 ஞாயிறு 10:36 | பார்வைகள் : 3133
தாய்வானின் கிழக்கு கடற்கரையோரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதன் பிறகு காணாமல் போன கனேடிய குடிமகன் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில் தைவானில் 7.2 ரிக்டர் என்ற அளவு நிலநடுக்கம் ஏற்பட்டு, பரவலாக சேதத்தை ஏற்படுத்தியதுடன், இதில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கித் தவித்தனர். குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாகவும், 1,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாறை சரிவுகள் மற்றும் பிற நிகழ்வுகள் காரணமாக 636 பேர் சிக்கித் தவித்து வருவதாகவும் அவர்களை மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கிழக்கு கடற்கரையோரத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு பிறகு காணாமல் போன கனேடிய குடிமகன் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கனடா உலக விவகாரங்கள் துறை அதிகாரிகள், காணாமல் போன குடிமகன் குறித்து உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், மகிழ்ச்சியான இந்த செய்தியை அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தாய்வானின் மத்திய அவசர நடவடிக்கை மையத்தை மேற்கோள் காட்டி, மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்ட முந்தைய அறிக்கைகளில், அந்த கனேடியர் தாரோகோ தேசிய பூங்காவில் உள்ள ஒரு ஹோட்டல் அருகே முகாமிட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து முன்னதாக மூன்று கனேடியர்கள் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாய்வானில் 5,500 க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட கனடியர்கள் வசித்து வருவதாக தாய்வான் வெளியுறவுத் துறை முன்னதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.