Paristamil Navigation Paristamil advert login

பா.ஜ.,வுக்கு 300க்கு மேல் கிடைக்கும் தெற்கு மற்றும் கிழக்கில் வலுவடையும்

பா.ஜ.,வுக்கு 300க்கு மேல் கிடைக்கும் தெற்கு மற்றும் கிழக்கில் வலுவடையும்

8 சித்திரை 2024 திங்கள் 01:07 | பார்வைகள் : 1851


வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் மற்றும் கிழக்கு மாநிலங்களில் அந்த கட்சி வலுவடையும்,'' என, தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர் கணித்துள்ளார்.

லோக்சபாவுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. பா.ஜ., - தி.மு.க., உட்பட பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்த அனுபவம் உள்ள தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர், இந்தத் தேர்தல் குறித்து தன் கணிப்புகளை தெரிவித்துள்ளார்.


மூன்றாவது முறை


அவர் கூறியுள்ளதாவது: வரும் தேர்தலில், பா.ஜ., 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். அதே நேரத்தில் அவர்களுடைய இலக்கான, 370 என்பதை எட்டுவது சற்று சிரமமே. தொடர்ந்து மூன்றாவது முறையாக பா.ஜ., அமைவதில் எந்த சிக்கலும் இருக்காது. அதே நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ., வெற்றி கொள்ள முடியாதவர்கள் கிடையாது.

ஒரு காலத்தில் காங்கிரஸ் இதுபோன்று வலுவாக இருந்து, தற்போது மோசமான நிலைக்கு வந்துள்ளதை நாம் பார்த்துள்ளோம்.

பா.ஜ.,வின் வெற்றி பயணத்தை தடுத்து நிறுத்தக் கூடிய வாய்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்தது. ஆனால், சோம்பல் மற்றும் சரியான திட்டமிடாததால், அந்த வாய்ப்பை இழந்து, பா.ஜ.,வுக்கு வாய்ப்பை தந்துள்ளன.

வரும் தேர்தலில், தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்கள் மற்றும் ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய கிழக்கில் உள்ள மாநிலங்களில், பா.ஜ., வலுவடையும்.

இதுவரை இந்த மாநிலங்களில் பெரிய சக்தியாக இல்லாமல் இருந்த நிலையில், தற்போது, பா.ஜ., பெரிய எழுச்சியை பெறும். இதற்கு காரணம், அந்தக் கட்சி சரியாக திட்டமிட்டு, தன் இருப்பை தொடர்ந்து வலுப்படுத்தி கொண்டுள்ளது.

தமிழகத்துக்கு, பிரதமர் மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை முறை வந்துள்ளார்.

அக்கட்சி மூத்த தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் எத்தனை முறை வந்தனர் என்பதை பார்க்க வேண்டும். நிச்சயம் தமிழகத்தில், பா.ஜ.,வுக்கு இரட்டை இலக்க ஓட்டு சதவீதம் கிடைக்கும்.


வாய்ப்பு


தெலுங்கானாவில் முதல் அல்லது இரண்டாவது இடத்தைப் பிடிக்கும். ஒடிசா சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்கவும் பா.ஜ.,வுக்கு வாய்ப்பு உள்ளது. அதுபோல, மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணமுல் காங்கிரசைவிட, பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெறும்.

தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், தமிழகம், ஆந்திரா, பீஹார், கேரளாவில், மொத்தம், 204 தொகுதிகள் உள்ளன. இங்கு, 2014ல், 29 மற்றும் 2019ல் 47 இடங்களில் பா.ஜ., வென்றது. தற்போது அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறும்.

லோக்சபா தேர்தலில், வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில், 100 இடங்களில், காங்கிரஸ் வெற்றி பெற்றால் மட்டுமே, பா.ஜ.,வுக்கு சவால் விடுக்க முடியும். ஆனால், அதற்கான வாய்ப்பு இல்லை. அந்த பிராந்தியங்களில் பா.ஜ., வலுவாக உள்ளது.

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் தொடர்ந்து பயணம் செய்து, கட்சியை நிலைநிறுத்தினர். ஆனால், காங்கிரஸ் என்ன செய்தது. தங்களுடைய குடும்பத்துக்கு சொந்தமான தொகுதிகள் உள்ள உத்தர பிரதேசத்துக்கு கூட அவர்கள் அடிக்கடி செல்லவில்லை.

மணிப்பூர், மேகாலயாவுக்கு சென்று என்ன பயன். உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீஹாருக்கு சென்றிருக்க வேண்டும். அமேதி, ரேபரேலியில் வெற்றி பெறாமல், கேரளாவின் வயநாட்டில் வென்று என்ன பிரயோஜனம்.


சரியான போட்டி இல்லை


தன் சொந்த மாநிலமான குஜராத்தில் போட்டியிடாமல், உத்தர பிரதேசத்தில் மோடி நிற்பதற்கு காரணம் இதுதான். பல கட்சிகள் இணைந்து இண்டியா கூட்டணியை உருவாக்கின. ஆனால், இதனால் எந்த பயனும் இல்லை. ஏற்கனவே, பல மாநிலங்களில், 350க்கும் மேற்பட்ட தொகுதிகளில், இந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள், பா.ஜ.,வுக்கு எதிராக உள்ளன.

காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், தேசியவாத காங்., திரிணமுல் காங்., ஆகியவை, தங்களுடைய சொந்த மாநிலத்திலேயே, பா.ஜ.,வுக்கு சரியான போட்டியை தர முடியவில்லை. கூட்டணி சேர்ந்தால் மட்டும் வெற்றி கிட்டுமா.

மேலும் அந்தக் கூட்டணிக்கு என, பொதுவான முகம், கொள்கை, நோக்கங்கள் இல்லாதது, அதில் உள்ள கட்சிகளுக்கு இடையே நெருக்கத்தையோ, இணக்கத்தையோ ஏற்படுத்தவில்லை.

பா.ஜ.,வுக்கு வலுவான போட்டியை கொடுக்கும் வாய்ப்பை, எதிர்க்கட்சிகள் இழந்துவிட்டன. சரியாக பயன்படுத்த தவறிவிட்டன.

கிரிக்கெட் விளையாட்டில், நீங்கள் தொடர்ந்து கேட்ச் பிடிக்கத் தவறினால், எந்த ஒரு நல்ல பேட்ஸ்மேனும் அதைப் பயன்படுத்தி சதமடித்து விடுவார். இதுதான், தேசிய அரசியலிலும் நடந்து வருகிறது.

அரசியல் நோக்கராக என்னுடைய கவலை, மூன்றாவது முறையாக ஆட்சி அமைந்தவுடன், என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதே. ஏற்கனவே, மிகப் பெரிய முடிவுகளை எடுக்கப் போவதாக மோடி கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்