Paristamil Navigation Paristamil advert login

இலங்கைக்கு நச்சுக் கழிவுகளை இறக்குமதி செய்பவர்கள் யார்....?

இலங்கைக்கு நச்சுக் கழிவுகளை இறக்குமதி செய்பவர்கள் யார்....?

8 சித்திரை 2024 திங்கள் 09:44 | பார்வைகள் : 1336


மார்ச் 26 ஆம் திகதி அமெரிக்காவின் பால்டிமோர் நகரின் பிரான்சிஸ் ஸ்கொட் கீ  பாலத்தை  மோதித் தகர்த்த டாலி என்ற சிங்கபூர் நாட்டு கப்பல், எரிபொருட்களையும் அதோடு  அபாயகரமான நச்சுப் பொருட்களையும் இலங்கைக்கு  ஏற்றி வந்தமை குறித்து அமெரிக்க ஊடகங்கள் பரவலாக செய்திகளை வெளியிட்டுள்ளன. 

ஆனால் இலங்கையில் ஒரு சில அச்சு ஊடகங்களைத் தவிர வேறு எந்த ஊடகங்களும் இது குறித்து கேள்வி எழுப்பவில்லை. 

அமெரிக்க ஊடகங்களின் செய்திகளை இலங்கையின் சில ஆங்கில பத்திரிகைகள் தலைப்புச் செய்தியாக பிரசுரித்திருந்தன. 

அதன் பிறகே இது குறித்து பாராளுமன்றத்திலும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.  அது வரையில் அரசாங்கத்தரப்பிலிருந்து கூட  இந்த சம்பவம் குறித்து எவரும் வாய்திறக்கவில்லை.

அண்மைக்காலமாக இலங்கை கடற்பரப்பில் வரும் கப்பல்கள்   ஏதாவதொரு சர்ச்சைகளை சுமந்தே  வருகின்றன. 

2020 ஆம் ஆண்டு குவைத்திலிருந்து, இந்தியாவின் ஒடிசா    நோக்கி பயணித்துக்கொண்டிருந்த  கிரேக்க நாட்டுக்கு சொந்தமான  கனியவள எண்ணெய் வணிக கப்பலான நியூடயமண்ட் ,  பானம - சங்கமன்கண்டியிலிருந்து 38 கடல் மைல் தொலைவில் தீ பிடித்து எரிந்தது. 

இதன் காரணமாக அப்பகுதி கடல் வளம் பெரிதும் மாசை எதிர்நோக்கியது. 

அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு சிங்கபூருக்கு சொந்தமான பேர்ள்  எக்ஸ்பிரஸ் என்ற கப்பல் நீர்கொழும்பு கடற்பகுதியில் தீ பற்றி எரிந்தது. 

கப்பலில் இருந்த எண்ணெய் மற்றும் செறிந்த நைத்ரிக் அமிலத்தால் இலங்கையின் கடற்பரப்பு மிக மோசமான சுற்றுச்சூழல் பாதிப்புக்கு முகங்கொடுத்தது.

வணிகக் கப்பல்களை விட சீனா மற்றும் இந்தியாவின் இராணுவ கப்பல்கள் இலங்கை கடற்பரப்புக்குள் வந்தாலும் இருநாடுகளிலிருந்தும் இலங்கைக்கே எச்சரிக்கை செய்திகள் அனுப்பப்படுகின்றன. 

வணிக நோக்கங்களுக்காக இந்திய பெருங்கடல் வழியாக பயணித்த கப்பல்கள் இலங்கைத் தீவில் தடம் பதித்து சென்றமை மற்றும் இயற்கை துறைமுகமான திருகோணமலையில் கப்பல்கள் மூலம் வணிக செயற்பாடுகள் இடம்பெற்றமை குறித்த குறிப்புகள் 8 ஆம்  நூற்றாண்டுகளுக்கு முன்பே காணப்படுகின்றன. 

போர்த்துகேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலத்தில்  கப்பல்கள் மூலமாகவே இலங்கையிலிருந்து வணிகச் செயற்பாடுகள் பெருமளவில் முன்னெடுக்கப்பட்டன. 

எனினும் அண்மைக்காலமாக இலங்கைக்கு  வரும் கப்பல்கள்  அபாயகரமான நச்சு கழிவுப் பொருட்களை கொண்டு வருவபையாக  உள்ளன. 2017 ஆம் ஆண்டிலிருந்து இந்த சர்ச்சைகள் தொடர்கின்றன. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுமதியின்றி ஐரோப்பிய நாடுகளிலிருந்து மீள்சுழற்சி என்ற பெயரில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட கழிவுகள், பல கொள்கலன்களில் கட்­டு­நா­யக்க ஏற்­று­மதி ஒழுங்­கு­ப­டுத்தல் வலயத்தில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்ட விவகாரம் பாராளுமன்றம் வரை கொண்டு செல்லப்பட்டது. 

உரிய அனுமதியின்றி இவை கொண்டு வரப்பட்டுள்ளன என சுங்க திணைக்களம் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரிகள் ஊடகவியலாளர் சந்திப்பின் மூலம் தகவல்களை வெளிப்படுத்தினாலும் அது குறித்து அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.  

குறித்த கொள்கலன்களை இறக்குமதி செய்த  நிறுவனத்துக்கு எதிராக எவரும் சட்ட நடவடிக்கைகளுக்கும் செல்லவில்லை. அது குறித்து விசாரணை செய்யவும் இல்லை. இதன் பின்னணியில் அரசியல் தலையீடுகள் இருந்திருக்கலாம். சில நேரங்களில் மீள் சுழற்சிக்கென  குறித்த கழிவுகளை இறக்குமதி செய்ததே ஒரு அரசியல்வாதியாகக் கூட இருக்கலாம். 

உல­க­ளவில் மருத்­துவக் கழி­வுகள், இலத்­தி­ர­னியல் கழி­வுகள், அணுக்­க­ழி­வுகள் உள்­ளிட்ட பெரு­ம­ள­வான கழி­வுகளை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளே இறக்குமதி செய்கின்றன.    இவை பல மில்­லி­யன்­க­ளுக்கு விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றன. ஆனால் இதன் பின்­ன­ணி­யி­லுள்ள ஆபத்துகளை நாடு இன்னும் அறியாதுள்ளது.  

இதேவேளை பால்டிமோர் – பிரான்சிஸ் ஸ்கொட் கீ  பாலத்தை மோதி தகர்த்த டாலி என்ற சரக்குக் கப்பலில் 764 தொன் அபாயகரமான பொருட்கள் இருந்ததாக அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த கப்பலில் மொத்தம் 4,700 கொள்கலன்கள் இருந்துள்ளன. 

அதில் 56 கொள்கலன்களில் அரிக்கும் மற்றும் எரியக் கூடிய பொருட்கள், லித்தியம்– அயன் மின்கலங்கள் உட்பட  ஒன்பது அபாயகரமான பொருட்கள்  இருந்ததாக அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்புச் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் மிகுதி 4,644 கொள்கலன்களில் என்ன இருக்கின்றது என்பது குறித்து அறிய கப்பலின் ஆவணங்கள் குறித்த பகுப்பாய்வு இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த தகவல்கள் வெளிப்பட்டவுடன்  இவ்விவகாரத்தை  கடந்த 2 ஆம் திகதி பாராளுமன்றில் கேள்விக்குட்படுத்தினார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச. அபாயகரமான பொருட்களை ஏற்றிக்கொண்டு இலங்கைக்கு வரும் கப்பலுக்கு யார் அனுமதி வழங்கியது இதன் நடைமுறைகள் என்ன என அவர் அரசாங்கத்திடம் கேள்வியை முன்வைத்திருந்தார். 

பேராசிரியர் சரித்த ஹேரத் எம்.பியும் இது குறித்து கேள்வியெழுப்பியிருந்தார். மறுநாள் 3 ஆம் திகதி இதற்கு பாராளுமன்றில் பதில் வழங்கிய சுற்றாடல் துறை இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர, இக்கப்பல் மத்திய சுற்றாடல் அதிகார சபையிடம் அனுமதியைப் பெறவில்லையென்றும் அக்கப்பலில் அபாயகரமான பொருட்கள் இருந்தமை விபத்துக்கு பின்னரே அறியக் கிடைத்ததாகவும் தெரிவித்தார்.  இது குறித்து விசாரணைகளை நடத்துவதற்கு சுற்றாடல் அதிகார சபை, சுங்கத்திணைக்களம் துறைமுகங்கள் அதிகார சபைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

ஆனால் குறித்த அபாயகரமான பொருட்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை யார் முன்னெடுத்திருப்பார்கள் என்ற விடயம் இதுவரையிலும் அரசாங்கத்துக்கு தெரியாமலிருக்க முடியாது. யாருடைய பெயரில் குறித்த ஆவணங்கள் உள்ளன என்ற விடயத்தை அறிந்து கொள்வது கடினமான விடயமல்ல. டாலி கப்பல் பாலத்தை மோதி விபத்துக்குள்ளானதால் தான் இந்த விடயங்கள் அனைத்தும் அம்பலமாகியுள்ளன. 

எனவே இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுமதியின்றி அபாயகரமான பொருட்களையும் கழிவுகளையும் ஏற்றிக்கொண்டு இலங்கைக்கு கப்பல்கள் வந்து போய் கொண்டு தான் இருக்கின்றன என்பது நிரூபணமாகியுள்ளது. தமது அனுமதியின்றி துறைமுகத்துக்கு வரும் கப்பல்கள் குறித்து துறைமுக அதிகார சபை மற்றும் சுங்கத் திணைக்களம் என்பன மெளனம் காக்கின்றன. 

இலங்கைக்கு இவ்வாறான நச்சுக்கழிவுகள் , அபாயகரமான பொருட்களை கொண்டு வருபவர்கள் யார்? ஏதாவதொரு நிறுவனத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு இந்த செயற்பாடுகளை யார் முன்னெடுக்கின்றார்கள்? தமது நாட்டு  கழிவுகளை இலங்கையில் கொண்டு வந்து சேர்ப்பதற்கும் பின்னர் அதை இலங்கையின் ஏதாவதொரு கடற்பரப்பிலோ அல்லது வேறு இடங்களிலோ   கொட்டுவதற்கும் மில்லியன் கணக்கில் பணம் பெறுபவர்கள் யார்? போன்ற கேள்விகளுக்கு பதில்கள் அவசியமாகவுள்ளன. 

மீள்சுழற்சிக்கு கொண்டு வரப்படும் பொருட்கள் என்ற பெயரில் அபாயகரமான கழிவுகளையும் கொள்கலன்கள் சுமந்து வருகின்றமை குறித்து எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். சில நாடுகளின் வைத்தியசாலை கழிவுகளில் அபாயகரமான மருந்து குப்பிகள், மனித உடல் அவயங்கள், சத்திர சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட கழிவுப்பொருட்களும் இருக்கின்றன. நாட்டின் ஆள் நடமாட்டமில்லாத பகுதிகளுக்கு இவை சூட்சுமமாக பரப்பப்பட்டால் குறித்த பிரதேச சூழலுக்கும் மக்களுக்கும் எத்தகைய    பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கூறத் தேவையில்லை.

கழிவகற்றல் செயன்முறைகள் மற்றும் கழிவு முகாமைத்துவம் போன்றவற்றில் இலங்கை தோல்வியடைந்த நாடாகவே உள்ளது. தலைநகர் பகுதிகளில் நாளொன்றுக்கு சேரும் சுமார் 700 தொன் வரையான கழிவுகளை மீள்சுழற்சி செய்யும் முறையான திட்டம் அரசாங்கத்திடம் இல்லை. 

நாட்டின் உள்ளூராட்சி சபைகளும் கூட இந்த கழிவகற்றல் செயற்பாடுகளில் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. இந்த நிலைமைகளில் வெளிநாடுகளின் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதற்கு இலங்கை துணைபோகின்றதா?

நன்றி வீரகேசரி
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்