Paristamil Navigation Paristamil advert login

மாநகராட்சி லைசென்ஸ் பெறாமல் நாய் வளர்த்தால் ரூ.1,000 அபராதம்!

மாநகராட்சி லைசென்ஸ் பெறாமல் நாய் வளர்த்தால் ரூ.1,000 அபராதம்!

10 வைகாசி 2024 வெள்ளி 01:23 | பார்வைகள் : 1859


தமிழகத்தில், 23 இனங்களை சேர்ந்த நாய்களை வளர்க்க அரசு தடை விதித்துள்ளது. உரிமம் பெறாமல் நாய் வளர்த்தால், உரிமையாளருக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பூங்காவில், 5 வயது சிறுமியை இரண்டு, 'ராட் வீலர்' இன நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்த நாள், சூளைமேடு பகுதியில் வாக்கிங் சென்ற தம்பதியை நாய் கடித்தது. மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

சென்னை போன்று ஏனைய நகரங்களிலும், நாய்க்கடி சம்பவங்கள் நடந்துள்ளன. தெருநாய்களை தொடர்ந்து, வீட்டில் வளர்க்கும் நாய்களும் மனிதர்களை கடிப்பது அதிகரிப்பதால், மக்களிடம் பீதி ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு உயர்மட்டத்தில் இது குறித்து ஆலோசனை நடந்தது.

அதன் தொடர்ச்சியாக, தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவை குறித்து தமிழ்நாடு பிராணிகள் நல வாரிய உறுப்பினர் செயலர் அமிர்தஜோதி கூறியதாவது:

கால்நடை வல்லுனர்கள் குழு பரிந்துரைப்படி, 23 வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்கள், மிகவும் ஆக்ரோஷமானவை மற்றும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இனங்கள் என, அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை இறக்குமதி செய்யவும், இனப்பெருக்கம் செய்யவும், வளர்ப்பு பிராணியாக விற்கவும், வளர்க்கவும் தடை விதிக்கப்படுகிறது

தற்போது இவ்வகை நாய்களை வைத்திருப்போர், அவற்றுக்கு உடனடியாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். வெளியில் கூட்டி செல்லும் போது, இணைப்பு சங்கிலி மற்றும் வாய்க்கவசம் அணிவித்து இருக்க வேண்டும்

இவை நீங்கலாக, எந்த வகை வளர்ப்பு நாயாக இருந்தாலும், தரமான கழுத்துப்பட்டை அல்லது தோள்பட்டை அணிவித்து வெளியே அழைத்து செல்ல வேண்டும்.இவ்வாறு அமிர்தஜோதி கூறியுள்ளார்.

நாய் வளர்ப்போர் அதற்கு உரிமம் பெற வேண்டும் என, ஏற்கனவே விதிகள் உள்ளன. எனினும், மிக குறைந்த எண்ணிக்கையிலேயே உரிமத்துக்கான விண்ணப்பங்கள் வருகின்றன.

எனவே, உரிமம் பெறாமல் நாய் வளர்ப்போருக்கு, 1,000 ரூபாய் அபராதம் விதிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.முதல் கட்டமாக, சென்னையில் இந்த விதி அமல் செய்யப்படும். தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் செயல்படுத்தும் என்று, அதிகாரிகள் கூறினர்.

பல செல்வந்தர்கள், முக்கிய பிரமுகர்களுக்காக, ஆபத்தான நாய் இனங்களையும், அந்நிய உயர் ஜாதி நாய்களையும், இனப்பெருக்கம் செய்து விற்கும் தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். குதிரை விற்றால், 12 சதவீதம் ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. ஆனால், மற்ற கால்நடைகள் விற்பனைக்கு ஜி.எஸ்.டி., கிடையாது. வணிக ரீதியாக நாய்களை விற்க, 28 சதவீதம் ஜி.எஸ்.டி., விதிக்க வேண்டும். இதனால், உயர் ஜாதி நாய்களின் விலை அதிகரிக்கும். அவ்வளவு விலை கொடுத்து வாங்குபவர்கள் கூடுதல் கவனம் செலுத்தி வளர்க்க முன்வருவர். அதிக விலை கொடுத்து வெளிநாட்டு இனங்களை வாங்க இயலாதவர்கள், ஆதரவின்றி திரியும் தெரு நாய்களை தத்தெடுத்து வளர்க்க முன் வருவர். இதனால், இந்திய இன நாய்கள் பாதுகாக்கப்படும். மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும் குறையும்.

அரசு தடை செய்த 23 இனங்கள்

பிட்புல் டெரியர், அமெரிக்கன் ஸ்டப்போர்டுஷயர் டெரியர், பிலா ப்ரேசிலேரியா, டோகோ அர்ஜென்டினா, தோசா இனு, அமெரிக்கன் புல் டாக், போயர் போயல்,கன்கல், சென்ட்ரல் ஆசியன் ெஷபர்டு டாக், காக்கேஷியன் ெஷபர்டு டாக், சவுத் ரஷ்யன் ெஷபர்டு டாக், டோன்ஜாக்-சர்ப்ளேனினேக், ஜாப்பனிஸ் தோசா-அகிடா, மேஸ்டிப், ராட்வெய்லர், டெரியர், ரொடீசியன் ரிட்ஜ்பேக், உல்ப்டாக், கேனரியோ, அக்பாஷ், மாஸ்கோ கார்டு, கேன் கார்சோ, பேண்டாக்.


ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த வடுகம் ஆதிதிராவிடர் காலனி சாலையில், நேற்று காலை குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தனர். ஐந்து வயது தேஜேஸ்வரன், யாகவீர், 11 வயது பிரியதர்ஷினி ஆகியோரை அங்கே சுற்றித்திரிந்த வெறி நாய் கடித்துள்ளது. படுகாயம் அடைந்த மூன்று குழந்தைகளையும் மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே சொக்கநாதபட்டியில் பொதுமக்களை தெருநாய் ஒன்று கடித்ததில் ஆண், பெண், குழந்தைகள் என, 12 பேர் காயமடைந்தனர்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்