ஹீரோவாக மாறிய தயாரிப்பாளர்..!
11 வைகாசி 2024 சனி 10:00 | பார்வைகள் : 2119
கடந்த 2015 ஆம் ஆண்டு பிரம்மா இயக்கத்தில் உருவான ’குற்றம் கடிதல்’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது என்பதும் இந்த படத்திற்கு தமிழில் சிறந்த படத்திற்கான விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’குற்றம் கடிதல்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கும் நிலையில் முதல் பாகத்தை தயாரித்த தயாரிப்பாளர் சதீஷ்குமார் நாயகனாக மாறியுள்ளார். இந்த படத்தில் அவர் 60 வயது ஆசிரியராக நடிப்பதாகவும் ஓய்வு பெறும் சமயத்தில் ஜனாதிபதி கரங்களால் நல்லாசிரியர் விருது வாங்கும் நேரத்தில் ஏற்படும் ஒரு திடுக்கிடும் திருப்பம் தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தை பார்த்திபன் நடித்த ’புதுமைப்பித்தன்’ கார்த்திக் நடித்த ’லவ்லி’ படங்களை இயக்கிய ஜீவா இயக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு டிகே இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்து தயாரிப்பாளரும் நடிகருமான சதீஷ்குமார் கூறியபோது ’இந்த படத்தின் கதை தன்னை கவர்ந்ததாகவும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாகி வருவதாகவும், இன்றைய சமுதாயத்திற்கு தேவையான ஒரு கருத்தை சொல்லும் படம் என்பதால் நிச்சயம் இந்த படம் நல்ல வெற்றி பெறுவதோடு தேசிய விருதையும் வெல்லும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஜேஎஸ்கே ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் என்ற பெயரில் ’ஆரோகணம்’ ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ’பரதேசி’ ’ரம்மி’ ’புரியாத புதிர்’ உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள சதீஷ்குமார், ’தரமணி’ ’பேரன்பு’ ’அநீதி’ உள்பட சில படங்களில் இவர் நடித்திருந்தாலும் தற்போது அவர் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.