உக்ரைனுக்காக ஆயுதங்கள் தயாரிக்கும் மேற்கத்திய தொழிற்சாலைகள்
12 வைகாசி 2024 ஞாயிறு 09:06 | பார்வைகள் : 3185
கடந்த சில மாதங்களாக நடக்கும் சில சம்பவங்களை குறிப்பிட்டு, ரஷ்யாவின் சதி தொடர்பில் உளவுத்துறை தலைவர்கள் பிரித்தானியா மற்றும் உக்ரைன் நேச நாடுகளை எச்சரித்துள்ளனர்.
உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கும் மேற்கத்திய நாடுகளின் தொழிற்சாலைகள் மற்றும் ராணுவம் தொடர்பிலான கிடங்குகள் என திடீரென்று தீக்கிரையாகும் சம்பவங்கள் உளவு அமைப்புகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மட்டுமின்றி, கணினி அமைப்புகளின் மீதான தாக்குதல், ரயில் கவிழ்ப்பு, பயணிகள் விமான சேவையில் செயற்கைக்கோள் சமிக்ஞைகளை துண்டித்தல் உட்பட பல்வேறு சம்பவங்களை உளவு அமைப்புகள் பட்டியலிட்டுள்ளது.
இந்த நிலையிலேயே தொழிற்சாலைகள் தொடர்ந்து தீக்கிரையாக்கப்படுவது ரஷ்யாவுக்கு தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தை பிரித்தானிய உளவு அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
கொடுங்கோலர்கள் ஐரோப்பாவை தீக்கிரையாக்க முடிவு செய்துவிட்டார்களா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். பல எண்ணிக்கையிலான தீ விபத்துகள், நாம் வெறும் விபத்துகள் என கருதிய நிலையில், தற்போது அதன் பின்னணி விளங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, உக்ரைனுக்கு என ஆயுதங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மீது தீவிர வலதுசாரி குழுக்களை களமிறக்கி தாக்குதல் முன்னெடுக்கப்படுவதாகவும் அந்த பிரித்தானிய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் பிரித்தானிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் பேசுபொருளாக மாறியுள்ளது. கடந்த மாதம் பிரித்தானியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு நிறுவனமான BAE Systems-ல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குகிறது. பென்சில்வேனியாவில் அமைந்துள்ள General Dynamics தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிறுவனமும் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குகிறது.
பெர்லின் அருகே அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையில் இந்த மாத தொடக்கத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிறுவனமும் உக்ரைனுக்கு ஆயுதம் ஏற்றுமதி செய்கிறது. மட்டுமின்றி, உக்ரைனுக்கான ஆயுதங்கள் அனுப்பப்படும் போலந்தின் ரயில் சேவை தாக்குதலுக்கு இலக்கானது என பட்டியலிடுகின்றனர்.