கவர்னரை ராஜினாமா செய்ய சொல்லாதது ஏன்?: கேட்கிறார் மம்தா
12 வைகாசி 2024 ஞாயிறு 16:11 | பார்வைகள் : 1715
மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் இருந்தும், பிரதமர் மோடி ஏன் அவரை ராஜினாமா செய்ய சொல்லவில்லை என முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் அம்தங்கா என்ற இடத்தில் தேர்தல் பேரணியில் மம்தா பானர்ஜி பேசியதாவது: சந்தேஷ்காலி சம்பவம் குறித்து இன்னும் பா.ஜ.,வினர் பொய்களை கூறி வருவதால் பிரதமர் மோடி வெட்கப்பட வேண்டும். சந்தேஷ்காலியில் பெண்களுக்கு எதிராக எந்த குற்ற சம்பவங்களும் நடக்கவில்லை. மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீது பாலியல் புகார்கள் இருந்தும், பிரதமர் மோடி ஏன் அவரை ராஜினாமா செய்ய சொல்லவில்லை.
பாலியல் பலாத்காரம்
ராஜ்பவன் ஊழியர் ஒருவர் கவர்னர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு எதிராக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பா.ஜ.,வின் உண்மையான பெண் விரோதப் போக்கைக் காட்டுகிறது. இதுவரை கவர்னரை ராஜினாமா செய்யும் படி பிரதமர் ஏன் கேட்கவில்லை?. இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.
ஆனந்த போஸ் மீது, கவர்னர் மாளிகையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் பெண் ஒருவர் சமீபத்தில் பாலியல் புகார் அளித்ததில் இருந்து பதவியை ராஜிமானா செய்யுமாறு ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.