Paristamil Navigation Paristamil advert login

ஈரான், இஸ்ரேல் பதற்றத்துக்குள் வலிந்து சிக்கப்போகும் இலங்கை

 ஈரான், இஸ்ரேல் பதற்றத்துக்குள் வலிந்து சிக்கப்போகும் இலங்கை

14 வைகாசி 2024 செவ்வாய் 09:09 | பார்வைகள் : 387


ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உத்தியோக பூர்வமான விஜயத்தினை மேற்கொண்டு எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவிருக்கின்றார். தற்போது வரையில் அவரது பயண ஒழுங்கிலோ, அல்லது நிகழ்ச்சி நிரலிலோ எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அதேபோன்று, ஈரான் ஜனாதிபதியின் வருகைக்கு முன்னதாக, முன்னாயத்த நடவடிக்கைகளுக்காக அதிகாரிகள் மட்டக்குழுவினர் இலங்கையை வந்தடைந்துள்ளதாக இராஜதந்திரத் தரப்பினர் தெரிவிக்கின்றார்கள். 

குறிப்பாக, பாதுகாப்பு உள்ளிட்ட இதர ஏற்பாடுகளுக்காக இந்தக் குழுவினர் கொழும்பில் முகாமிட்டிருப்பதாகவும், ஈரான் ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் அவர்கள் பிரசன்னமாகியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் ஈரான் அரசின் உதவித் திட்டத்தின் கீழ் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் பதுளை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள நீர்ப்பாசனம் மற்றும் நீர்மின் சக்தி வளாகத்தை திறந்து வைப்பதற்காகவே அவர் வருகை தரவுள்ளார்.

அத்தோடு இலங்கை மற்றும் ஈரானுக்கு இடையிலான பொருளாதார தொடர்புகளை விரிவுபடுத்திக்கொள்வதில் இரு தரப்பும் ஆர்வம் செலுத்தியுள்ளமையால் கூட்டு பொருளாதார ஆணைக்குழுவொன்றை நிறுவுதல் உட்பட இருதரப்பு உடன்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், உமா ஓயாத் திட்டத்திற்கான  ஆரம்ப மதிப்பீடுகள் 1989ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் பிரகாரம் தல்கொல்ல ஓயாவின் குறுக்கே ஒரு அணையை அமைத்து சுரங்கப்பாதை ஊடாக நீரை மின்திட்டத்துக்கு அனுப்பப்படுகிறது.  

உமா ஓயாவின் துணை நதிகளான மாத்தட்டிலா ஓயாவுக்கு குறுக்கே மற்றொரு அணை கட்டப்பட்டு சுரங்கப்பாதை வழியாக உமா ஓயா மின் நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுவதே இலக்காக இருந்தது. எவ்வாறாயினும் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த திட்டத்தின் கட்டுமான பணிகள் அங்குராட்பணம் செய்யப்பட்டன. 

மொத்த திட்டச் செலவாக சுமார் 529 மில்லியன் டொலர்கள் என்று மதிப்பிடப்பட்ட நிலையில் அதில் 85சதவீதம் ஈரான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பக்க நிகழ்வாக ஈரான் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியபோதே அவருக்கான உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆகவே, ஈரான் ஜனாதிபதியின் இலங்கைக்கான விஜயமானது ஏலவே திட்டமிடப்பட்டதொன்றாகும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால், தற்போதைய சூழலில் ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயமானது இராஜதந்திரப் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, இஸ்ரேலில் ஈரானின் உயர் அதிகாரி ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் அவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.  அதன் பின்னர் சிரியாவின் தலைநகர் டமஸ்கஸில் பணியாற்றிய ஈரானிய ஜெனரலான ராசி முஸாவி, இஸ்ரேலின் வான் தாக்குதலினால் உயிரிழந்தார். இவ்வாறு ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவிய பனிப்போர் தற்போது நேரடியான மோதல் நிலைமைக்கு வந்துள்ளது. 

கடந்த ஏப்ரல் முதலாம் திகதி சிரியாவின் டமஸ்கஸ் நகரிலுள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் குண்டுத்தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதலில் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்பு படையணியின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இருவரும் ஐந்து ஆலோசகர்களும் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி ஈரானால் இஸ்ரேலின் டெலிஷ் நகருக்கு ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இஸ்ரேல் குறித்த தாக்குதலுக்கு பதிலடி வழங்கும் வகையில் ஈரான் மீது ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. அத்துடன், ஈரானின் இஸ்பஹான் நகரில் வெடிச்சம்பவங்கள் கேட்டதாகவும் அங்கு கடமையாற்றுகின்ற ஊடகவியலாளர்கள் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

எனினும், தமது நாட்டில் எந்தவொரு பகுதி மீதும் வான் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லையென ஈரானின் தேசிய சைபர் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளதோடு அந்தக் கட்டமைப்பு அவசரமான கூட்டமொன்றையும் நடத்தியுள்ளது.

இத்தகைய சூழலில் தான் ஈரான் ஜனாதிபதி ரைசி இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்கின்றார். அவருடைய வருகையானது உண்மையில் இலங்கைக்கு இரண்டு வகையில் நெருக்கடிகளை ஏற்படுத்தவதாக உள்ளது.

முதலாவதாக, தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயம் முக்கியமானதாகின்றது. இஸ்ரேல், ஈரான் அதிகாரிகள் உள்ளிட்டவர்களை இலக்கு வைத்து வேறெந்த நாடுகளின் எல்லைகளுக்குள்ளும் உட்புகுந்து ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள் ஊடாக தாக்குதல்களைச் செய்வதில் தயக்கம் காண்பிப்பதில்லை ஏற்பதற்கு கடந்த காலச் சம்பவங்கள் சான்றுபகிர்கின்றன.

அவ்விதமானதொரு சூழலில் இலங்கைக்கு ஈரானிய ஜனாதிபதியின் வருகையின் போது அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான கணிசமான பொறுப்பு இலங்கைக்கும் உள்ளது. இஸ்ரேல் போன்ற நாடுகள் பயன்படுத்துகின்ற நவீன ஆயுத தளவாடங்களுடன் ஒப்பிடுகையில், அவற்றுக்கு பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அப்பால் அவற்றை அடையாளம் காண்பதற்கான வல்லமைகள் இலங்கையிடம் இருக்கின்றதா என்கிற கேள்விகள் இருக்கின்றன.

ஆகவே, ஈரான் ஜனாதிபதி ரைசி இலங்கை வந்து திரும்பும் வரையில் தேசிய பாதுகாப்பையும், நட்புநாட்டின் தலைமையின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதில் இலங்கைக்கு மிகக்பெரும் நெருக்கடிகள் ஏற்படப்போகின்றன.

இரண்டாவதாக, சமகால நிலைமைகளை அடுத்து ஈரான் ஜனாதிபதி ரைசியுடன் இலங்கை நெருக்கமான உறவுகளை கொள்வதையோ, இருதரப்பு உடன்பாடுகளை மேலும் மேம்படுத்துவதையோ இஸ்ரேல் விரும்பவில்லை. 

குறிப்பாக, இஸ்ரேலின் முக்கிய அதிகாரிகளின் நிலைப்பாடுகளின் பிரகாரம், இலங்கை தவறானதொரு தெரிவினை நோக்கிச் செல்கின்றது. இதனால் பாரிய தவறை இழைக்கப்போகின்றது என்ற அடிப்படையில் தான் காணப்படுகின்றது.

இதன் காரணத்தினால் இஸ்ரேல் இலங்கைப் பணியாளர்களை மையப்படுத்தி வழங்கிவரும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை மட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றார்கள்.

குறிப்பாக, இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேல் அரசின் திட்டவட்டமான தொழிற்சந்தைத் துறைகளில் தற்காலிகமாக தொழிலில் அமர்த்துவதற்கு இஸ்ரேல் அரசுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கும், அதற்காக, இருதரப்பினருக்கும் இடையில் அடிப்படை ஆவணங்களில் கையொப்பமிடுவதற்கு 2020.02.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அதனடிப்படையில், குறித்த உடன்பாடு 2023ஆம் ஆண்டு நவம்பர் ஆறாம் திகதி இருநாடுகளுக்கும் இடையில் கையொப்பமிடப்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு அமைவாக, இதுவரையில் விவசாயத்துறையில் பணியாற்றுவதற்காக 602பேர் நாட்டிலிருந்து இஸ்ரேல் நோக்கிப் பயணித்துள்ளனர். அத்துடன் பத்தாயிரம் வரையிலான விண்ணப்பங்கள் கிடைத்துள்ள நிலையில் இலங்கையர்கள் மேலும் இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனைவிடவும், முதியோர் பராமரிப்பு, பொதுஊழியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. இதனைவிடவும். இஸ்ரேலின் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் மிரி ரெகே இலங்கைக்கு வருகை தந்திருந்த சந்தர்ப்பத்தில் விமான சேவைகளை அதிகரித்தல், விமான, கப்பல்துறை பிரிவுகளில் தொழில்வாய்ப்புக்களை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்களிலும் இணக்கம் காண்பிக்கப்பட்டுள்ளன.

ஆகவே, பொருத்தமற்ற தருணத்தில் இலங்கை அரசாங்கம் அளவுக்கதிகமாக ஈரானுடன் ஆதரவுக்கரத்தினை நீண்டுவது இஸ்ரேலுக்கு எதிர்மறையான மனோநிலையை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்;லை.

இலங்கை அரசாங்கம், ஈரானுடன் கிட்டிய உறவுகளைப் பேணுவதன் ஊடாக எரிபொருட்கள் உள்ளிட்ட விடயங்களில் நெருக்கடியற்றதொரு சூழலை ஏற்படுத்தலாம் என்றொரு இராஜதந்திரக் கணக்கினை போடலாம்.

ஆனால், இஸ்ரேல், ஈரான் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ள ஓரிரு நாட்களிலேயே மசகு எண்ணெயின் விலைகள் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டன. அந்த அதிகரிப்பு நிச்சயமாக இலங்கையிலும் தாக்கத்தைச் செலுத்தாது இருக்கப்போவதில்லை. 

அந்தத் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு ஈரானுடனான நெருக்கமான உறவுகள் கைகொடுக்கும் என்று எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத் தனமான நப்பாசையாகவே இருக்கும். 

இலங்கை அணிசேராக் கொள்கையை பின்பற்றுவதாக தன்னை அடையாளப்படுத்தி வருகின்றபோதும், கடந்த காலங்களில் சீன சார்பு நிலையால், அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பூகோளப் போட்டித்தளமாக தன்னை மாற்றிக்கொண்டது. அது தற்போது வரையில் நீடிக்கின்றது.

அதன்பின்னர் இஸ்ரேலுடன் உறவுகளை ஏற்படுத்தி பலஸ்தீனத்தின் அதிருப்திக்கு ஆளானது. எனினும், பலஸ்தீன் செல்வாக்குச் செலுத்தும் சக்தியாக இருக்கவில்லை என்பதால் நெருக்கடிகள் உருவாகவில்லை. இந்நிலையில் தற்போது ஈரானுடன் நேசக்கரம் நீட்டி இஸ்ரேலின் அதிருப்தியைச் சம்பாதிக்கிறது.

இஸ்ரேலின் அதிருப்தி என்பது அமெரிக்கா உட்பட மேற்குல நாடுகளின் அதிருப்தியை சம்பாதிப்பதற்கு நிகரானது என்பதை இலங்கை புரிந்துகொள்வதற்கு வெகுகாலம் நீடிக்காது.

நன்றி வீரகேசரி 

வர்த்தக‌ விளம்பரங்கள்