ஈரான் துறைமுக ஒப்பந்தம்; இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
15 வைகாசி 2024 புதன் 00:56 | பார்வைகள் : 2247
ஈரானின், சாபஹர் துறைமுகத்தை 10 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்திட்டுள்ள நிலையில், 'ஈரானில் முதலீடு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும்' என, அமெரிக்கா எச்சரித்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரானில் உள்ள சாபஹர் துறைமுகத்தை, 2018 முதல் குத்தகை அடிப்படையில் இந்திய அரசு நிர்வகித்து வருகிறது. இந்த குத்தகை ஆண்டுக்கொரு முறை புதுப்பிக்கப்பட்டு வந்தது.
தற்போது, நீண்ட கால குத்தகைக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்படி சாபஹர் துறைமுகத்தை, அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்திய அரசு நிர்வகிப்பதுடன் விரிவுபடுத்த உள்ளது. இந்த குத்தகை, தொடர்ந்து புதுப்பிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஈரான் சென்ற நம் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் சர்பானந்த சோனவால், இந்த ஒப்பந்தத்தில் நேற்று முன்தினம் கையெழுத்திட்டார்.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேல் நேற்று கூறுகையில், “ஈரானுடன் வியாபார ஒப்பந்தம் மேற்கொண்டு அங்கு முதலீடுகளை செய்வது யாராக இருந்தாலும், பொருளாதார தடைகளை எதிர்கொள்ள வேண்டிய ஆபத்து உள்ளது என்பதை உணர வேண்டும்,” என்றார்.
எரிசக்தி வளம் மிகுந்த ஈரானின் தெற்கு கடற்கரையில் சிஸ்தான் - பலுாசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஓமன் வளைகுடாவில் சாபஹர் துறைமுகம் உள்ளது. கடல், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து வசதியை உள்ளடக்கிய சர்வதேச வடக்கு - தெற்கு போக்குவரத்து வழித்தடத்தை பயன்படுத்தி, நிலத்தால் சூழப்பட்ட ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து சரக்குகளை எடுத்து செல்வதற்கான நுழைவாயிலாக சாபஹர் துறைமுகம் அமைந்துள்ளது.
இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வழியாக, மத்திய ஆசிய நாடுகளுக்கு சாலை மார்க்கமாக சரக்குகளை அனுப்ப முடியும். ஆனால் பாகிஸ்தான் மோதல் போக்கை கடைப்பிடிப்பதால் ஈரானின் சாபஹர் துறைமுகம் வழியாக மத்திய ஆசிய நாடுகள், ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சரக்குகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
அந்த நாடுகளில் இருந்து இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. சாபஹர் துறைமுகத்தை பயன்படுத்துவதால் போக்குவரத்து செலவும் கணிசமாக குறைகிறது. எனவே, மத்திய ஆசிய நாடுகளுடனான வர்த்தகத்தை விரிவுபடுத்த இந்த துறைமுக ஒப்பந்தம் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
அணு ஆயுதம் தயாரிப்பு தொடர்பாக ஈரான் மீது, அமெரிக்கா ஏற்கனவே பொருளாதார ரீதியாக பல தடைகளை விதித்துள்ளது. தற்போது சாபஹர் துறைமுக விஷயத்தில் ஈரானுடன், இந்தியா மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் காரணமாக, அமெரிக்கா எரிச்சல் அடைந்து, பொருளாதார தடை குறித்து பேசியுள்ளது.