Paristamil Navigation Paristamil advert login

மெனோபாஸ் அறிகுறிகள் எப்படி இருக்கும்..?

மெனோபாஸ் அறிகுறிகள் எப்படி இருக்கும்..?

15 வைகாசி 2024 புதன் 07:22 | பார்வைகள் : 892


பல பெண்களுக்கு மெனோபாஸ் என்பது பிரவச தொல்லையிலிருந்தும் மாதாந்திர அசௌகர்யத்திலிருந்து கிடைத்த விடுதலை என நினைக்கிறார்கள். வாழ்க்கையில் புதிய அத்தியாயத்திற்கான வரவேற்புமிக்க மாற்றமாகவே அவர்கள் இதை கருதுகிறார்கள். ஆனால் சிலருக்கோ இந்த மாற்றம் கடுமையான சவாலையும் தூக்கமின்மை, பாலியல் குறைபாடு, உடல் வெப்பமாதல் போன்ற அறிகுறிகளையும் ஏற்படுத்துவதாக உள்ளது.

மெனோபாஸ் என்பது மாதவிடாயின் முடிவு மட்டுமல்ல; உடலநலக் கோளாறுகள் அதிகம் ஏற்படுவதற்கான காலகட்டமும் இதுவே. மெனோபாஸ் சமயத்தில் வரக்கூடிய ஹார்மோன் மாற்றம் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரித்து இதய நோய் வரும் ஆபத்தை அதிகமாக்குகிறது. மேலும் உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவு திடீரென உயர்வதால் எலும்பின் அடர்த்தி குறைந்து எலும்புப்புரை நோய் வருவதற்கு காரணமாக அமைகிறது.

மெனோபாஸ் அறிகுறிகளுக்கு போதுமான சிகிச்சைகள் இருந்தாலும் பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொள்வதேயில்லை. அதற்கு முக்கிய காரணம் மெனோபாஸ் மேலாண்மை குறித்து மருத்துவர்களிடமே போதிய பயிற்சிகள் இல்லை என்பதே உண்மை. இப்படி மருத்துவர்களிடமே பயிற்சிகள் இல்லை என்பதால் மெனோபாஸ் அறிகுறிகள் பற்றி விவாதிக்கவோ அல்லது அதை குணப்படுத்தவோ அவர்கள் தயாராக இல்லை.

குணப்படுத்தாத மெனோபாஸால் வரக்கூடிய உடல்நலப் பிரச்சனைகள்…

மெனோபாஸ் அறிகுறிகளை முறையாக கையாளுவது வாழ்க்கை தரம் மேம்படுவதற்கு மட்டுமின்றி நீண்ட கால உடல் ஆரோக்கியத்திற்கும் அவசியமானதாகும். குணபடுத்தாத மெனோபாஸ் அறிகுறிகள் டைப்-2 டயாபடீஸ் மற்றும் எலும்புப்புரை நோய் வரும் ஆபத்தை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இது விரைவாக முதுமையடைய வைப்பதோடு இதய நோய் மற்றும் அறிவாற்றல் குறைபாடு வருவதை அதிகரிக்கிறது.

இதில் ஹார்மோன் மாற்று சிகிச்சைக்கு (HRT) இருக்கும் பங்கு என்ன?

கடந்த அரை நூற்றாண்டுகளாக மெனோபாஸ் அறிகுறிகளுக்குமுதன்மை சிகிச்சையாக ஹார்மோன் மாற்று தெரபியே அளிக்கப்படுகிறது. முறையான மருத்துவரின் கண்காணிப்பில் ஹார்மோன் மாற்று சிகிச்சையை எடுத்துக்கொள்ளும் போது, சிறந்த முறையில் மெனோபாஸ் அறிகுறிகளை பராமரிக்க முடிவதோடு நீண்டகால உடல்நலப் பிரச்சனைகளையும் குறைக்க முடிகிறது. எனினும் சரியான மெனோபாஸ் மேலாண்மைக்கு, ஹார்மோன் மாற்றம் எவ்வாறு உடலை பாதிக்கிறது என்பது குறித்த முழுமையான புரிதல் இங்கு தேவையாக உள்ளது.

மெனோபாஸின் பொதுவான அறிகுறிகள்?

மெனோபாஸ் பல வகையான அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடியது. இது பெண்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை உண்டாக்குகின்றன.

வெப்ப தாக்குதல்

இரவு நேரம் அதிகமாக வியர்வை வருதல்

சீரற்ற மாதவிடாய் சுழற்சி

பிறப்புறுப்பில் வறட்சி

மனநிலை அடிக்கடி மாறுதல்

தூங்குவதில் சிரமம்

உடல் எடை அதிகரிப்பு

தலை முடி உதிர்வு அல்லது உடைந்து போதல்

பாலியல் நாட்டம் குறைவது

போன்றவை பொதுவான அறிகுறிகளாகும். இவை ஒவ்வொரு பெண்களுக்கும் இடையே மாறுபடும். சிலர் மிதமான அசௌகர்யத்தை அணுபவிப்பார்கள். இன்னும் சிலரோ தங்கள் தினசரி வாழ்க்கை மற்றும் ஒட்டுமொத்த உடல்நலனும் பாதிக்கும் வகையிலான சிரமங்களை சந்திப்பார்கள்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்