ரூ 1,200 கோடி தொகையை தனதாக்கிய வடகொரியா - அதிர்ச்சி தகவல்
15 வைகாசி 2024 புதன் 13:19 | பார்வைகள் : 4551
கிரிப்டோகரன்சி நிறுவனங்களில் இருந்து திருடப்பட்ட கிரிப்டோகரன்சியால் வடகொரியா சுமார் 1200 கோடிக்கும் அதிகமான தொகையை சொந்தமாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு பல்வேறு கிரிப்டோகரன்சி நிறுவனங்களில் இருந்து வடகொரியா திருடிய கிரிப்டோகரன்சியை மார்ச் மாதம் டொலராக மாற்றியுள்ளது. மொத்தம் 147 மில்லியன் டொலர் மதிப்பிலான கிரிப்டோகரன்சியை விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்திய மதிப்பில் இது ரூ 1,227 கோடி என்றே கூறப்படுகிறது. கடந்த 2017 முதல் 2024 வரையில் கிரிப்டோகரன்சி நிறுவனங்கள் மீது வடகொரியா 97 சைபர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
அதில் அந்த நிறுவனங்கள் 3.6 பில்லியன் டொலர் அளவுக்கு இழப்பை எதிர்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் கடந்த ஆண்டு இறுதியில் HTX நிறுவனத்தில் இருந்து 147.5 மில்லியன் டொலர் மதிப்பிலான கிரிப்டோகரன்சி வடகொரியாவால் கொள்ளையிடப்பட்டது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் அந்த கிரிப்டோகரன்சிகளை வடகொரியா டொலராக மாற்றியுள்ளது. 2024ல் இதுவரை 11 கிரிப்டோகரன்சி கொள்ளை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 54.7 மில்லியன் டொலர் என்றே கூறப்படுகிறது.
இதில் பெரும்பாலான தாக்குதல் வடகொரியா முன்னெடுத்திருக்கலாம் என்றே கூறுகின்றனர். 2006ல் இருந்தே வடகொரியா ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொருளாதாரத் தடையில் இருந்து வருகிறது.
கடந்த பல ஆண்டுகளாக அந்த நாட்டின் மீதான தடைகள் இறுக்கமடைந்தே வந்துள்ளது. இதனிடையே வடகொரியாவுக்கு உதவுவதாக குறிப்பிட்டு 2022ல் Tornado Cash என்ற நிறுவனத்தின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது.
அதன் இணை நிறுவனர்கள் இருவர் மீது 2023ல் நிதி முறைகேடு வழக்கு பதியப்பட்டது. குறித்த நிறுவனமூடாகவே தற்போது திருடப்பட்ட கிரிப்டோகரன்சிகளை விற்பனை செய்து வடகொரியா 147 மில்லியன் டொலர் திரட்டியுள்ளது.