அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கடிவாளம்!
17 வைகாசி 2024 வெள்ளி 02:24 | பார்வைகள் : 2358
மணி லாண்டரிங் எனப்படும், கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் மோசடி தொடர்பாக, யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்ற அமலாக்க துறையின் அதிகார நடைமுறைக்கு, சுப்ரீம் கோர்ட் கடிவாளம் போட்டுள்ளது.
ஈ.டி., என்ற அமலாக்க துறையின் செயல்பாடுகளை மட்டுப்படுத்தும், இந்த முக்கியமான உத்தரவு நேற்று வெளியான தீர்ப்பில் இடம் பெற்றுள்ளது. மணி லாண்டரிங் தடுப்பு சட்டத்தில் கைதாகி சிறைவாசம் அனுபவிக்கும் பலர், குறிப்பாக அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் இத்தீர்ப்பால் பலன் பெறலாம் என, சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர்.
எனினும், வெவ்வேறு சட்டங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை நீக்கவும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் உரிமைகளை நிலைநாட்டவுமே, சுப்ரீம் கோர்ட் இந்த தீர்ப்பை வழங்கிஇருக்கலாம் என, அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மாற்ற முடியாது
அமலாக்க துறை கைது செய்ததை எதிர்த்து, தர்சம் லால் என்பவர் தொடர்ந்த வழக்கில், நீதிபதிகள் அபய் ஓகா, உஜ்ஜல் புய்யான் அடங்கிய அமர்வு இத்தீர்ப்பை அளித்தது.
சம்மன் அனுப்பிய சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், அமலாக்க துறை எப்படி தன்னை கைது செய்ய முடியும் என்று தர்சம் லால் கேட்டிருந்தார். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
சிறப்பு நீதிமன்ற பொறுப்பில் ஒரு வழக்கு வந்து விட்டால், அதன்பின் அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரை, அமலாக்க துறை கைது செய்ய முடியாது. மணி லாண்டரிங் தடுப்பு சட்டத்தின், 19வது பிரிவின் கீழ், கைது செய்ய அதிகாரம் இருப்பதாக அமலாக்க துறை கூறுவதை ஏற்க முடியாது.
குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை, கைது செய்து விசாரிக்க அமலாக்க துறை விரும்பினால், அதற்கு அனுமதி கேட்டு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பும்.
அதன்படி அவர் ஆஜராகும் போது, அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கருத முடியாது. சம்மன் அனுப்புவதால் மட்டுமே அவர் கைதியாகி விட மாட்டார்.
சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகா விட்டால், நீதிமன்றம் வாரன்ட் பிறப்பிக்கலாம். குற்றவியல் நடைமுறை சட்டத்தின், 70வது பிரிவின் கீழ் இந்த நடவடிக்கை வருகிறது.
அதன்படி, முதல் வாரன்ட் என்பது ஜாமினில் விடுவிக்கக்கூடியதாக இருக்கும்; அடுத்த வாரன்ட் ஜாமினில் விட முடியாததாக இருக்கும். இந்த நடைமுறையை மணி லாண்டரிங் தடுப்பு சட்ட விதிகளை காட்டி அமலாக்க துறை மாற்ற முடியாது.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்க அமலாக்க துறை ஆட்சேபம் தெரிவிக்கும் போது, அந்த ஆட்சேபம் அதிகாரிகள் வசமுள்ள ஆவணங்கள், ஆதாரங்கள் அடிப்படையிலும், அந்த நபரை ஜாமினில் விட்டால், அதே குற்றத்தை தொடர்ந்து செய்வார் என நம்பக்கூடிய வாதத்தின் அடிப்படையிலுமே இருக்க வேண்டும்.
வெறும் சந்தேகத்தின் அடிப்படையில், ஜாமின் மனுவை ஆட்சேபிக்க முடியாது.
சம்மனை ஏற்று ஆஜராகும் நபரை கைதானவராக கருத முடியாது என்பதால், அவர் ஜாமின் கேட்க வேண்டிய அவசியம் எழவில்லை.
புகார் பதிவு செய்யப்படுவதற்கு முன்னதாகவே அமலாக்க துறை ஒருவரை கைது செய்திருந்தாலும், ஜாமின் பெறுவதற்காக மணி லாண்டரிங் தடுப்பு சட்டத்தின் இரட்டை நிபந்தனைகளை அவர் பூர்த்தி செய்ய தேவையில்லை.
அதேநேரத்தில், விசாரணைக்கு அவர் ஆஜராவதை உறுதி செய்யும் குற்றவியல் நடைமுறை சட்ட விதிகளின் கீழ், பத்திரம் தாக்கல் செய்யும்படி சிறப்பு நீதிமன்றம் கேட்கலாம்.
பிரமாண பத்திரம் என்பது, ஒரு உறுதிமொழி தான். அதை நீதிமன்றம் ஏற்பதை, ஜாமின் வழங்கியதாக எடுத்துக் கொள்ள முடியாது.
அவர் குற்றம் செய்திருக்க மாட்டார் என்றும், ஜாமினில் விட்டால் அதே குற்றத்தை தொடர்ந்து செய்ய மாட்டார் என்றும் நீதிபதி நம்பினால் மட்டுமே, ஜாமின் வழங்கலாம் என்ற மணி லாண்டரிங் தடுப்பு சட்டத்தின் ஷரத்து இதில் பொருந்தாது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.