Paristamil Navigation Paristamil advert login

இங்க நான்தான் கிங்கு -காமெடியில் கலக்கினாரா சந்தானம்?

இங்க நான்தான் கிங்கு -காமெடியில் கலக்கினாரா சந்தானம்?

17 வைகாசி 2024 வெள்ளி 10:01 | பார்வைகள் : 2658


நகைச்சுவைப் படங்கள் எடுப்பது என்பது சாதாரணமானது அல்ல. படம் முழுவதும் இரண்டு மணி நேரம் அல்லது இரண்டரை மணி நேரம் சிரிக்க வைத்தால் மட்டுமே அப்படியான படங்கள் ஓடும். தொடர்ந்து நகைச்சுவைப் படங்களைத் தவிர வேறு படங்களில் நடிக்காத சந்தானம் இப்படியான படங்களைக் கொடுப்பது பெரிய விஷயம்தான்.

புதிய கூட்டணியான இயக்குனர் ஆனந்த் நாராயணன், சந்தானம் ஒரு சிம்பிளான கதையை எடுத்துக் கொண்டு இரண்டு மணி நேரமும் நம்மை சிரிக்க வைத்துவிடுகிறார்கள். எந்த ஒரு லாஜிக்கையும் நீங்கள் பார்க்காமல் இருந்தால் சிரித்துவிட்டு வரலாம்.

சென்னையில் வெடிகுண்டு வைப்பதற்காக தீவிரவாத கும்பல் திட்டமிடுகிறது. குண்டு வைக்க வந்த தீவிரவாதியான விவேக் பிரசன்னா, சந்தானத்தின் வீட்டில் கரண்ட் ஷாக் அடித்து சந்தானம் குடும்பத்தினரால் காப்பாற்ற முயற்சிக்கப்பட்டு கொல்லப்படுகிறார். எப்படியாவது பிணத்தை அகற்ற திட்டமிட்டு அதைச் செய்துவிட்டு வீடு திரும்புகிறார்கள். வீட்டிற்குள் விவேக் பிரசன்னா உயிரோடு உட்கார்ந்து இருக்கிறார். அப்போது டிவியில் தீவிரவாதியான விவேக் பிரசன்னா பற்றிய செய்தி வருகிறது. அவரை பிடித்துக் கொடுத்தால் 50 லட்சம் பரிசு என்று காவல் துறை அறிவிப்பு செய்கிறது. உயிரோடு இருக்கும் விவேக் பிரசன்னா, சந்தானத்தின் நண்பர். 50 லட்சம் பணத்திற்காக தீவிரவாதி விவேக் பிரசன்னா பிணத்தை ஹாஸ்பிடலலிருந்து கடத்தி போலீசிடம் கொடுக்க சந்தானம் திட்டமிடுகிறார். இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரு பிணத்தை மையமாக வைத்து படம் முழுவதையும் நகர்த்தியிருக்கிறார்கள். இதற்கு முன்பும் இப்படி சில படங்கள் வந்திருப்பதால் அந்தப் படங்களைப் பற்றியும் வசனத்தில் குறிப்பிட்டு அந்தப் படங்கள் போல இந்தப் படமல்ல என சொல்லிவிடுகிறார்கள். படத்தின் முதல் பாதி போவதே தெரியவில்லை, ஆனால், இரண்டாம் பாதி மட்டும் தட்டுத் தடுமாறி நகர்கிறது.

சந்தானம் வழக்கம் போல காமெடிக்கு உத்தரவாதம் தந்துவிடுகிறார். அதே ஒன் லைன் நகைச்சுவையை படம் முழுவதும் தந்திருப்பதால் ரசிக்க முடிகிறது. ஆரம்பத்தில் பெண் பார்க்கும் படலம் என கொஞ்சம் 'டிராமா' போடுகிறார்கள். சந்தானத்திற்கு ஒரு அருமையான டூயட்டையும் வைத்திருக்கிறார்கள். கொஞ்சம் காதல், நிறைய காமெடி என காமெடியில் கிங்குதான் என நிரூபித்திருக்கிறார் சந்தானம்.

சந்தானத்தின் ஜோடியாக பிரியலயா. ஒரு டூயட்டைத் தவிர அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான வேடமில்லை. முகம் கூட மனதில் பதிய மறுக்கிறது. அவருக்கென கொஞ்சம் 'ஸ்பேஸ்' கொடுத்திருக்கலாம்.

தம்பி ராமையா தேவையில்லாமல் கூச்சல் போட்டு நடிப்பதை எப்போது நிறுத்துவார் எனத் தெரியவில்லை. தான் நடிப்பது 'டிராமா' அல்ல, 'சினிமா' என யாராவது அவரிடம் சொன்னால் நன்றாக இருக்கும். சந்தானத்தின் மச்சானாக பால சரவணன். சந்தானத்துடன் புதிதாக கூட்டணி சேர்த்திருக்கிறார். தனது பங்கிற்கு அவரும் சிரிக்க வைத்திருக்கிறார்.

சந்தானத்தின் நண்பன், வெடிகுண்டு வைக்க வந்த தீவிரவாதி என இரண்டு வேடங்களில் விவேக் பிரசன்னா. பிணங்களை வைத்து பிழைப்பு நடத்தும் திருட்டுப் பேர்வழியாக முனிஷ்காந்த். மாறன், சுவாமிநாதன், சேஷு என சந்தானத்தின் கம்பெனி ஆர்ட்டிஸ்ட்களும் படத்தில் உண்டு. மாறனை சரியாகப் பயன்படுத்தவில்லை.

சந்தானம், பிரியலயா பாடும் டூயட் பாடலான 'மாயோனோ' பாடல், வேறு ஹீரோவுக்காகப் போட வேண்டிய பாடல். சந்தானத்திற்குப் போட்டு அழகு பார்த்திருக்கிறார்கள். இமான் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே.

வெடிகுண்டு வைப்பது எல்லாம் 'அவுட்டேட்டட்' சினிமாவாகிவிட்டது. படத்தில் லாஜிக்கை எந்த இடத்திலும் பார்க்கக் கூடாது. ஒரு ஹாஸ்பிட்டலில் இருந்து பிணத்தையே கடத்துகிறார்கள். அங்கு சிசிடிவி எல்லாம் இல்லவே இல்லை. பிணத்துடன் செல்லும் வண்டியை போலீசார் ஒரு இடத்தில் கூட சோதனை செய்யவில்லை. கிளைமாக்சில் திடீரென ஆக்ஷன் ஹீரோவாகி சண்டை போடுகிறார் சந்தானம். இப்படி எந்த கேள்விகள் எழுந்தாலும் அவற்றையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு தமாஷாய் சிரித்துவிட்டு வரலாம்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்