Paristamil Navigation Paristamil advert login

யாழில் நகையை குப்பைகளோடு வீசிய வீட்டார் - கண்டெடுத்து உதவிய சுகாதார தொழிலாளிகள்

யாழில் நகையை குப்பைகளோடு வீசிய வீட்டார் -  கண்டெடுத்து உதவிய சுகாதார தொழிலாளிகள்

22 ஆவணி 2023 செவ்வாய் 02:52 | பார்வைகள் : 3137


நகைகளை கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில் பழைய துணி ஒன்றில் கட்டி குப்பைகள் போல வீட்டிலேயே பாதுகாத்து வந்த நகைகளை குப்பைகளோடு வீசிய நிலையில் அவற்றை குப்பை மேட்டில் இருந்து சுகாதார பிரிவினர் மீட்டு உரியவரிடம் கையளித்துள்ளனர். 
சாவகச்சேரி மண்டுவில் வட்டாரத்தில் வேலுப்பிள்ளை வீதியில் வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர் தனது வீட்டில் உள்ள சுமார் 8 பவுண் பெறுமதியான நகைகளை கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில் பழைய துணி ஒன்றில் கட்டி குப்பைகள் போல வீட்டிலேயே பாதுகாத்து வந்துள்ளார்.

அண்மையில் அவரது வீட்டை சுத்தம் செய்கின்ற பொழுது குறித்த நகைகளும் குப்பைகளோடு குப்பைகளாக கட்டப்பட்டு வீதியில் கொட்டப்பட்டிருந்தன.

இந்நிலையில் நேற்றை தினம் திங்கட்கிழமை மண்டுவில் வட்டாரத்தில் வழமையான கழிவகற்றும்  நடவடிக்கையில் சாவகச்சேரி நகராட்சி மன்ற சுகாதாரப் பகுதியினர் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது குறித்த வீட்டில் முன்னால் இருந்த குப்பைகளும் சுகாதார தொழிலாளர்களால் அகற்றப்பட்டு உழவியந்திரத்தில் நகராட்சி மன்றத்திற்கு சொந்தமான குப்பைகள் தரம் பிரிக்கின்ற இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கொட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் வீட்டிலிருந்த நகைகள் காணாமல் போனதையடுத்து நிலைமையை உணர்ந்த உரிமையாளர் குப்பைகளோடு நகைகளும் வீதியில் கொட்டப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வீதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரீவீ கேமராக்களை சோதனையிட்டுள்ளார்.

அப்பொழுது இன்று காலை அப்பகுதியில் நகராட்சி மன்ற கழிவகற்றும் வாகனம் மூலம் கழிவுகள் அகற்றப்பட்டிருந்தமை அவதானித்துள்ளார்.

இதை அடுத்து உடனடியாக சாவகச்சேரி நகராட்சி மன்றத்துக்கு சென்று நிலைமை தொடர்பாக தெரியப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து உடனடியாக செயற்பட்ட நகராட்சிமன்ற நிர்வாக அதிகாரி மற்றும் நகராட்சி மன்ற சுகாதார மேற்பார்வை உத்தியோகத்தர்கள், ஆகியோர்  நகராட்சி மன்ற கழிவு சேகரிக்கும் இடத்திற்கு வெளியிலிருந்து உள்ளேயும் உள்ளே இருந்து வெளியேயும் எவரையும் அனுமதிக்காத வண்ணம் செயற்பட்டு சுகாதார தொழிலாளர்களைக் கொண்டு தேடுதலை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த குடியிருப்பாளர் பழைய துணியில் கட்டி குப்பைகளோடு குப்பையாக வீதியில் வீசிய சுமார் 8 பவுண் நகைகள் குடியிருப்பாளரின் முன்னிலையிலேயே சுகாதார தொலிலாளியான சண்முகம் தமிழ்சனால் மீட்கப்பட்டு உடனடியாகவே உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நகராட்சி மன்ற சுகாதார பகுதினரின் நேர்மையான விரைந்த செயல்பாடு நகராட்சிமன்ற குடியிருப்பாளர்கள் மற்றும் நகர வர்த்தகர்கள் மத்தியில் வரவேற்பையும்  பாராட்டையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்