Paristamil Navigation Paristamil advert login

15 வருடகால உளவியல் போராட்டம் : காயம் ஆற்றும் 'நினைவுகூரல்'

15 வருடகால உளவியல் போராட்டம் : காயம் ஆற்றும் 'நினைவுகூரல்'

18 வைகாசி 2024 சனி 08:52 | பார்வைகள் : 579


'முப்பது வருடகாலப் போரின் பின்னர் இலங்கையில் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. நினைவுகூரல் என்பது நல்லிணக்க செயன்முறையின் மிகமுக்கிய அம்சமாகும். எனவே இலங்கையில் அனைத்து சமூகங்களும் தமது அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கான இடைவெளியைக் கொண்டிருக்கவேண்டும். போரில் உயிரிழந்த இராணுவ வீரர்களை நினைவுகூரும் வகையில் நாடளாவிய ரீதியில் பல்வேறு நினைவுச்சின்னங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அவ்வாறிருக்கையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் அவர்களது அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்குக் கொண்டிருக்கும் உரிமையை மறுதலிப்பதற்கு, உயிரிழந்தவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதை ஓர் காரணமாகப் பயன்படுத்துவது ஏற்புடையதன்று. நினைவுகூரலைத் தடுப்பதும், அதற்கான வாய்ப்பை மறுப்பதும் இனங்களுக்கு இடையிலான பிளவுகள் வலுவடைவதற்கும், நல்லிணக்க முயற்சிகள் தோல்வியடைவதற்குமே வழிவகுக்கும்.'

2017ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்குத் தடைவிதிக்கப்பட்ட வேளையில், அதனை எதிர்த்து அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் கலாநிதி தீபிகா உடகமவினால் அனுப்பிவைக்கப்பட்டிருந்த கடிதத்தில் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

போரினால் பிளவடைந்த இனங்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பப்போவதாகக்கூறி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் இதே நாட்டில் தான், போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வட, கிழக்கு சிறுபான்மையின தமிழ் சமூகம் யுத்தகாலத்தில் தம் உயிர்காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சியைப் பகிர்வதற்கும், போரில் உயிரிழந்த தமது அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கும் தடைவிதிக்கப்பட்டு, இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டுவருகின்றன.

நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர்மாத கூட்டத்தொடரை இலக்காகக்கொண்ட நாடகம் எனவும், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான நீதியை வழங்கி, பொறுப்புக்கூறலை உறுதிசெய்து, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை நேர்மையான முறையில் கட்டியெழுப்பும் உத்தேசம் எதுவும் அரசுக்கு இலங்கை எனவும் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுவந்த விமர்சனங்களை நினைவுகூரல் மீதான தடைகள் உண்மை எனும் தீர்மானத்துக்கு வரச்செய்கின்றன.  

2009இல் மூன்று தசாப்தகாலப்போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட மேமாதம் 18 ஆம் திகதி அதன் பின்னரான ஆண்டுகளில் தெற்கில் யுத்தவெற்றி நாளாகவும், வட-கிழக்கில் போரில் உயிர்நீத்த தமது அன்புக்குரியவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளாகவும் இருவேறு வடிவங்களில் அனுட்டிக்கப்பட்டுவருகின்றது. ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதோர் தினத்தை 'யுத்தவெற்றி' நாளாகக் கொண்டாடுவது எவ்வகையில் ஏற்புடையது? எனக் கிளம்பிய விமர்சனக்குரல்களை அடுத்து 2015 இன் பின்னரான காலகட்டத்தில் அச்சொற்பதப் பிரயோகமும், கோலாகலக்கொண்டாட்டங்களும் முடிவுக்குவந்தன. இருப்பினும் மே 18ஆம் திகதி போரில் உயிரிழந்த இராணுவவீரர்கள் நினைவுகூரப்படுகையில், அதே உரிமை இலங்கை ஜனநாயக சோசலிஸ குடியரசின் பிறிதொரு மக்கள் பிரிவுக்கு மாத்திரம் மறுக்கப்படுவதேன் என்ற கேள்வி போர் முடிவடைந்தும் பதிலின்றித் தொடர்கிறது.

முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப்போர் உக்கிரமடைந்திருந்த காலப்பகுதியில் உணவின்றித் தவித்த மக்களுக்கு உயிரளித்தது உப்பில்லாத (சொற்பளவு உப்பு இடப்பட்ட) அரிசிக்கஞ்சி தான். அதனை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் (மே 11 - மே 18) வட, கிழக்கு தமிழ்மக்கள் 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என அழைக்கப்படும் அரிசிக்கஞ்சியைப் பகிர்வதும், நினைவேந்தல் நாளான மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தில் ஒன்றுகூடியோ அல்லது தமது வீடுகளில் இருந்தவாறோ போரில் உயிரிழந்த தமது சொந்தங்களை நினைவுகூருவதும் வழமை. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (12) முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தமைக்காக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர் உள்ளடங்கலாக நால்வர் திருமலை, சம்பூர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அதுமாத்திரமன்றி இதுகுறித்து மூதூர் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தடையுத்தரவில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோரை நினைவுகூருவதும், முள்ளிவாய்க்கால் கஞ்சியைப் பகிர்வதும் சட்டவிரோதமானது எனவும், அதன்விளைவாக பொதுமக்களின் சுகாதார நலனுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக, முள்ளிவாய்க்கால் கஞ்சியைப் பகிர்வதும், போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதும் நோய்த்தொற்றுப்பரவலை ஏற்படுத்தக்கூடுமெனில், இதே மேமாதம் முதலாம் திகதி அரசியல் கட்சிகள் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டு தமது மக்கள் பலத்தைக் காண்பித்த 'மேதினக்கூட்டத்துக்கு' பொலிஸார் தடையுத்தரவு கோராதது ஏன்? எனும் நியாயமான கேள்வியை எழுப்புகிறார் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் நிதியத்தின் உறுப்பினரும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன். அதுமாத்திரமன்றி எதிர்வரும் வெசாக் போயா தினத்தன்று 'தன்சல்' வழங்கப்படும்போதும், அதற்கு அடுத்தகட்டமாக அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரப்பணிகளை ஆரம்பிக்கும்போதும் நோய்த்தொற்றுப்பரவல் அச்சுறுத்தலைக் காரணங்காட்டி பொலிஸார் தடையுத்தரவு கோருவார்களா? எனவும் அவர் வினவுகிறார்.

'நினைவுகூரலைத் தடுப்பதன் பிரதான நோக்கம் வரலாற்றை அழிப்பதும், கொல்லப்பட்ட பொதுமக்கள் சார்ந்து அரசு கொண்டிருக்கும் கடப்பாட்டைப் புறக்கணிப்பதுமேயாகும். அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளினாலேயே உண்மை, நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான முயற்சிகள் அடுத்துவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கூட்டத்தொடரில் புதிய தீர்மானம் கொண்டுவரப்படுவதைத் தடுப்பதையே நோக்காகக்கொண்டிருப்பதாக தமிழர்கள் கருதுகின்றனர்' எனச் சுட்டிக்காட்டுகிறார் அம்பிகா சற்குணநாதன்.

அதேவேளை நீதிக்காக நெடுங்காலம் காத்திருக்கும் தமக்கு தமது அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கான குறைந்தபட்ச உரிமை கூட இல்லையா? எனும் தழுதழுக்கும் குரலிலான கேள்வி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளிடமிருந்து வெளிப்படுகிறது.

'மூன்று தசாப்தகாலப்போரில் எமது எண்ணற்ற சொந்தங்கள் பலியாகியிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கானோர் காணாமல்போயிருக்கிறார்கள். அவர்கள் பற்றிய உண்மையையும், நீதியையும் கோரி உடலை வருத்தும் தொடர் போராட்டங்களுடன் 15 வருடங்களாகக் காத்திருக்கிறோம். இங்கு நாம் நாளாந்தம் அனுபவிக்கும் உளவியல் சித்திரவதையைப் பற்றிய புரிதல் யார்க்குமில்லை. இறுதிக்கட்டப்போரில் மாண்ட எமது உறவுகளின் சடலங்களை எம்முடைய முறைப்படி தகனம்செய்யவில்லை. மேலும் பல உறவுகள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா? என்பதையே அறியாமல் காத்திருக்கிறோம். இவ்வாறு எமக்குள் புதைந்து கிடக்கும் வேதனைகளை அழுது வெளிக்காட்டி, எமது அன்புக்குரியவர்களை நினைவுகூர்ந்து ஆறுதல்தேட முற்படும் வேளையில், அக்குறைந்தபட்ச உரிமைக்குக்கூடத் தடைவிதிக்கும் இவ்வரசாங்கத்திடம் எவ்வாறு நீதியை எதிர்பார்க்கமுடியும்? எனக் கேட்கிறார் போரில் தனது கணவனையும், பிள்ளையையும் பறிகொடுத்து, நீதிவேண்டிக் காத்திருக்கும் தாய்.

இதே விடயத்தை நிலைமாறுகால நீதியை அடிப்படையாகக்கொண்டு வலியுறுத்துகிறார் அம்பிகா சற்குணநாதன். 'நினைவுகூரல் என்பது நிலைமாறுகால நீதிப்பொறிமுறையின் மிகமுக்கிய அங்கமாகும். தமிழர்களின் பாரம்பரிய கலாசாரமானது உயிரிழந்த தமது குடும்ப உறுப்பினர்களுக்கு வருடாந்தம் திதி வழங்கி, அவர்களை நினைவுகூரும் சடங்குகளை உள்ளடக்கியிருக்கின்றது. அவ்வாறிருக்கையில் மிகக்கொடிய போரில் ஒருவர் கொல்லப்படுகின்றபோது, அதனால் அவரது உறவுகளுக்கு ஏற்படும் தாக்கம் வழமையைக் காட்டிலும் பன்மடங்கு உயர்வானதாகும். அதுமாத்திரமன்றி இலங்கையைப் பொறுத்தமட்டில் இவ்விடயம் தொடர்பான ஏற்புடைமையோ அல்லது மன்னிப்புக்கோரலோ இல்லாத நிலையில், பாதிக்கப்பட்ட தரப்பினர் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்கும், இத்துயரத்தைக் கடப்பதற்கும் நினைவுகூரல் என்பது இன்றியமையாததாகும்' என்கிறார் அவர்.

பல வருடகால ஒடுக்குமுறை, சமூக ஏற்றத்தாழ்வு, தொடர் அநீதி போன்றவற்றால் துருவமயப்படுத்தப்பட்ட சமூகத்தில், இனப்பிளவு மற்றும் மோதல் சூழ்நிலைகளைக் கையாள்வதற்கான சிறந்த கருவியே நினைவுகூரல் என மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தினால் 'இலங்கையில் நிலைமாறுகால நீதியை உறுதிசெய்வதில் நினைவுகூரல்' எனும் தலைப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை நினைவுக்குவருகிறது. நினைவுகூரலானது காயத்தை ஆற்றுவதுடன் கலந்துரையாடலுக்கும், புரிந்துணர்வுக்கும், மன்னிப்புக்கோரலுக்கும், ஏற்புடைமைக்கும் வாய்ப்பேற்படுத்துவதுடன், அதன்மூலம் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்குத் துணைபுரிவதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.

இதிலிருந்து சற்று மாறுபட்ட கருத்தை முன்வைக்கும் சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த், தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் நீதிகோரிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அப்போராட்டங்களுக்கு மேலும் வலுச்சேர்க்கும் ஒரு நாளாகவே நான் இதனைப் பார்க்கிறேன் என்கிறார். அதுமாத்திரமன்றி இலங்கையில் பாதிக்கப்பட்ட சமூகமாக எப்போதும் அதிகாரத்துக்கு வரமுடியாத சிறுபான்மையின தமிழ், முஸ்லிம் சமூகம் இருப்பதாகச் சுட்டிக்காட்டும் அவர், எனவே தமிழர்களுக்கான தீர்வும், மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஏற்புடைமை மற்றும் மன்னிப்புக்கோரலும், நல்லிணக்கமும் சிறுபான்மையின சமூகத்தை நோக்கி பெரும்பான்மையின சமூகத்திடமிருந்தே பிறக்கவேண்டுமென அவர் வலியுறுத்துகிறார்.

ஆக, இன்னமும் இனங்களுக்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கையும், புரிந்துணர்வும், நல்லிணக்கமும் முழுமையாகத் துளிர்விடாத - பிளவுண்ட சமூகக்கட்டமைப்பைக் கொண்டிருக்கும் இலங்கையில், போரினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டதோர் சிறுபான்மையின சமூகத்தின் நினைவுகூரல் உரிமைக்கு மாத்திரம் பாரபட்சமாகத் தடைவிதிப்பது இப்பிளவுகளை மேலும் ஆழப்படுத்துமே தவிர, காயங்களை ஆற்றுப்படுத்தாது என்பதை பேரினவாத அரசாங்கங்கள் புரிந்துகொள்வது அவசியம்.

அரசாங்கத்திடம் இவ்விடயம் சார்ந்து கேட்க ஏராளம் கேள்விகள் உண்டு. உண்மை, நல்லிணக்கம் பற்றித் தொடர்ந்து பேசுகிற நீங்கள் (அரசாங்கம்) 'நினைவுகூரல்' போன்ற உணர்வுரீதியான தளங்களில் அந்நல்லிணக்கத்துக்கு செயல்வடிவம் கொடுக்கத் தயங்குவதேன்? அரசியலமைப்பின் பிரகாரம் இந்நாட்டின் சகல உரிமைகளுக்குமான உரித்தைக் கொண்டிருக்கும் சிறுபான்மையின தமிழ் சமூகத்தின் நினைவுகூரல் உரிமையை மறுப்பதற்கு நீங்கள் கற்பிக்கும் நியாயப்பாடு என்ன? இத்தகைய பின்னடைவான மனநிலையுடன் நீங்கள் ஸ்தாபிக்க விளையும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின்மீது பாதிக்கப்பட்ட தரப்பினர் உள்ளடங்கலாக தமிழ்மக்கள் நம்பிக்கைகொள்ளவேண்டுமென எதிர்பார்ப்பதற்கு உங்களுக்கு இருக்கும் தார்மீக உரிமை என்ன? பாதிக்கப்பட்ட மக்களின் நினைவுகூரல் உரிமையை மறுதலிக்கும் அரசாங்கம் அந்நொடியிலேயே நல்லிணக்கம் மற்றும் நிலைமாறுகாலநீதி பற்றிப் பேசுவதற்குத் தாம் அருகதை இழப்பதைப் புரிந்துணரவேண்டும். 

நன்றி வீரகேசரி

வர்த்தக‌ விளம்பரங்கள்