தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்
18 வைகாசி 2024 சனி 15:41 | பார்வைகள் : 2504
வரும் மே 22 ம் தேதி வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு நாளை (மே 19) மற்றும் மே 20, 21 ஆகிய 3 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் மே 22 ம் தேதி வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. மே 24ம் தேதி மத்திய வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறக்கூடும். தமிழகத்திற்கு நாளை (மே 19) மற்றும் மே 20, 21 ஆகிய 3 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
18 மாவட்டங்களில் கனமழை
கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசியில் இன்று (மே 18) மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, திருச்சி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அரஞ்ச் அலர்ட்
தமிழகத்தில் நாளை (மே 19) திண்டுக்கல்,தேனி,தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மே 20 ம் தேதி விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.