Paristamil Navigation Paristamil advert login

சிங்கப்பூரின் நவீனமயமாக்கத்துக்கு தந்தை வழியில் தன்னை அர்ப்பணித்த பிரதமர் லீ சியென் லூங்!

சிங்கப்பூரின் நவீனமயமாக்கத்துக்கு தந்தை வழியில் தன்னை அர்ப்பணித்த பிரதமர் லீ சியென் லூங்!

20 வைகாசி 2024 திங்கள் 11:41 | பார்வைகள் : 331


சிங்கப்பூர் என்றாலே பலருக்கும் அது ஒரு சொர்க்காபுரியாகவே தெரியும். அதற்கான காரணம், அந்த நாட்டின் சட்டம், ஒழுங்கு மக்களின் பழக்கவழக்கம் மற்றும் தூய்மை என்று கூறலாம். முன்னர் ஒரு காலத்தில் பொருளாதார ரீதியாக நமது நாட்டை விடவும் மோசமாக இருந்த சிங்கப்பூர், இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது. இதற்கு அந்த நாட்டை பொறுப்பேற்ற அரசியல் தலைமைகளே காரணம். அவர்களின் ஊழலற்ற ஆட்சி அர்ப்பணிப்புடன் கூடிய சிந்தனை, பன்மைத்துவத்தை  ஏற்றுக்கொண்டமை என அனைத்தையும் கூறலாம்.  

சிங்கப்பூரின் வரலாற்றை சுருக்கமாகப் பார்த்தால், இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர்,  சிங்கப்பூர் மீண்டும் பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. எனினும் அங்கு சுயாட்சி நிலவியது. பின்னர், 1963இல் சிங்கப்பூர் மலாயக் கூட்டமைப்பில் இணைந்தது. எனினும், சிங்கப்பூரின் மக்கள் செயல் கட்சிக்கும், மலேசிய கூட்டணி கட்சிக்கும் இடையே உருவான பிணக்குகளினாலும் உள்நாட்டுக் கலகங்களாலும் மலேசியக் கூட்டமைப்பில் இருந்து சிங்கப்பூர் வெளியேறியது. அதனைத் தொடர்ந்து 1965 ஆகஸ்ட் 9ஆம் திகதி சிங்கப்பூர் சுதந்திரக் குடியரசானது.

சிங்கப்பூர் தீவு

மேலும், சிங்கப்பூர் இறையாண்மை கொண்ட குடியரசின் அங்கமாகும். இது மலாய் தீபகற்பத்தின் தெற்கு முனையில், மலாக்கா  நீர்நிலை மற்றும் தென் சீனக் கடலுக்கு இடையில் அமைந்துள்ளது. இந்த தீவு பரப்பளவு, மக்கள் தொகை மற்றும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் அமைகிறது. ஏனெனில், நாட்டின் சிறிய தீவுகளில் அமைந்துள்ள பகுதிகள் இராணுவ அல்லது தொழில்துறை பகுதிகளைக் கொண்டிருக்கிறது. சிங்கப்பூரின் மக்கள் தொகை சுமார் ஆறு மில்லியனாகும். 730 சதுர கிலோமீற்றர் பிரதான நிலப்பரப்பைக் கொண்டது. இங்கு சீன இனக்குழுக்கள், மலாய் மக்கள், இந்திய மக்கள் மற்றும் யூரேசியன்கள் வாழ்கின்றனர். 

இதேவேளை, ஒரு கட்டத்தில், கடுமையான வேலையில்லாப் பிரச்சினையையும், வீட்டு வசதி பற்றாக்குறையையும் எதிர்கொண்ட சிங்கப்பூர் 1960 தொடக்கம் 1970 வரை நவீனமயமாக்கத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டது. 

1990ஆம் ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்த சுதந்திர சந்தைப் பொருளாதாரம், வலுவான சர்வதேச வணிகத் தொடர்புகள் என்பவற்றால் ஆசியாவில் மிகக்கூடிய தனிநபர் வருமானம் மற்றும் உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றுடன் உலகின் மிகவும் வளம் பொருந்திய நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் தன்னை அடையாளப்படுத்தியது. 

சிங்கப்பூரின் பிரதமர் பதவி

சிங்கப்பூரின் பிரதமர் பதவி 1959ஆம் ஆண்டு தொடக்கம் இருந்து வருகிறது. பிரித்தானியப் பேரரசின் தனிநாடாக தன்னாட்சி பெற்ற பின்னர் அப்போதைய சிங்கப்பூர் ஆளுநரால் லீ குவான் யூ பிரதமராக நியமிக்கப்பட்டார். 

சிங்கப்பூரின் பிரதமராக லீ குவான் யூ 1959 முதல் 1990 வரை பதிவியிலிருந்தார். இவரைத் தொடர்ந்து கோ சொக் தொங் பதவியேற்றார். கோ ஆகஸ்ட் 12, 2004இல் ஓய்வு பெற்றார். இவரைத் தொடர்ந்து லீ குவான் யூவின் மகன் லீ சியன் லூங் பதவியேற்றார். புதிய பிரதமருக்கு உதவி புரிய கோ மூத்த அமைச்சராகவும் தந்தை லீ மதியுரை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர். இருவரும் 2011இல் பதவி விலகினர். லீ சியன் லூங் 2004 தொடக்கம் 2024 வரை இரு தசாப்தங்கள் சிங்கப்பூரின் பிரதராக விளங்கிய பெருமைக்கு கூறியவர். 

கடந்த 20 ஆண்டுகளாக சிங்கப்பூரின் பிரதமராக இருக்கும் லீ சியென் லூங் (Lee Hsien Loong) பதவியிலிருந்து விலகினார். அவர் வகித்துவந்த பொறுப்புகள் அனைத்தையும் துணை பிரதமரும், நிதி அமைச்சருமான லோரன்ஸ் வோங்கிடம் ஒப்படைப்பதற்கு அந்நாட்டு ஜனாதிபதி தர்மன் ஷண்முகரத்தினம் பரிந்துரை செய்தார்.

இந்த நிலையில், அந்நாட்டின் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லோரன்ஸ்    வோங்கிடம் (Lawrence Wong) கடந்த 15ஆம் திகதி புதன்கிழமை, லீ முறைப்படி ஆட்சியை ஒப்படைத்தார். இதன் மூலம் சிங்கப்பூரின் வரலாற்றில் 59 ஆண்டுகள் நீடித்த ஓர் அரசியல் சகாப்தத்தின் முடிவைக் குறிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 

புதிய பிரதமர் லோரன்ஸ் வோங் 

சிங்கப்பூரின் 59 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் 45 ஆண்டுகள் லீ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவராக இருந்திருக்கிறார். "அடுத்து பிரதமராகக் காத்திருக்கும் லீ குடும்பத்தைச் சாராத முதல் பிரதமர் வோங் ஆவார். இது சிங்கப்பூர் சாதாரணமாக ஒரு ஜனநாயகமாக மாறும் அறிகுறி என்று கூறப்படுகிறது. 51 வயதான வோங் வெளிப்படையான ஒரு தெரிவாக இருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 

கொவிட் தொற்று சிங்கப்பூரைத் தாக்கியபோது, வோங் முக்கிய பொறுப்பில் இருந்தார். அரசாங்க பணிக்குழுவின் இணைத் தலைவராக இருந்த அவர், சிங்கப்பூர் மக்களுக்குப் பரிச்சயமான முகமாக மாறினார். பெரும்பாலான சிங்கப்பூர் மக்களைப் போலவே, அவர் ஒரு பொது வீட்டுக் குடியிருப்பில் வாழ்ந்தவர். மேலும், சிங்கப்பூரின் மேல்தட்டுப் பாடசாலையில் பயிலாமல் உள்ளூர்  பாடசாலையில் பயின்ற முதல் பிரதமரும் வோங் தான்.

பழமைவாதியான அவர், அண்மையில் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், சிங்கப்பூரின் குடிமக்கள் சிறுபான்மையினராக மாற மாட்டார்கள் என்றும், குடியேற்றம் தொடர்ந்து கட்டுப்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார். 

சிங்கப்பூர் அரசு எந்த வல்லரசு நாட்டுக்கும் சார்பாக இருக்காது என்று தெரிவித்தார்.

மேலும், அடுத்த வருடம் நவம்பர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

இது அவருக்கு அரசியல் அக்கினி பரீட்சையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

சிங்கப்பூரின் வளர்ச்சி வெற்றிகரமாக இருந்த போதிலும், ஒரு கட்சியே அங்கு ஆட்சி செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அதாவது இலங்கை, இந்தியா போன்று அரசியல் குளறுபடிகள் அங்கு பெரிதாக இல்லை என்று கூறலாம். 1965ஆம் ஆண்டு சுதந்திர நாடாக மாறியதில் இருந்து, சிங்கப்பூருக்கு மூன்று பிரதமர்கள் மட்டுமே இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஆட்சியில் இருக்கும் மக்கள் செயல் கட்சியைச் (People's Action Party - PAP) சேர்ந்தவர்கள்.

நவீன சிங்கப்பூரின் நிறுவனர் 

சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ (Lee Kuan Yew). நவீன சிங்கப்பூரின் நிறுவனராக பரவலாக கருதப்பட்டவர். 25 ஆண்டுகள் அந்நாட்டை வழிநடத்தியவர். அதனை தொடர்ந்து 20 ஆண்டுகள் அவரது மகன் லீ சியென் லூங் நிர்வகித்தார். தற்போது அவரும் விலகிய நிலையில், ஒரு மூத்த அமைச்சராக அமைச்சரவையில் நீடிப்பார் என்றாலும், இந்த மாற்றம், சிங்கப்பூரின் அரசியலில் அவரது குடும்பத்தின் நிழலில் இருந்து வெளியேறுகிறது என்பதைக் குறிக்கிறது என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

மேலும், லீ சியென் லூங் 1984இல் தனது தந்தை ஆட்சியில் இருக்கும்போதே பின்வரிசை உறுப்பினராக அரசியலில் சேர்ந்தார். சிங்கப்பூரின் இரண்டாவது பிரதமரான கோ சோக் டோங்க்கின் கீழ் அவரது பதவி உயர்ந்தது. 

2004இல் அவர் அரசுக்குத் தலைமையேற்றார். இந்த நிலையில், அரசியல் விமர்சகர்கள் லீ குடும்பத்தினர் குடும்ப அரசியல் செய்வதாகக் குற்றஞ்சாட்டினர். அவர்கள் ஒரு அரசியல் வம்சத்தை உருவாக்குவதாகக் கூறினர். அதை லீ குடும்பத்தினர் மறுத்தபோதிலும் அதுவே உண்மையாக இருந்தது. சில சிங்கப்பூர் மக்கள் லீ அரசியல் என்று கேலி செய்யவும் தவறவில்லை. ஆனால் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கப்பூரின் தலைவராக லீ சியென் லூங் இருந்த போதிலும் அதன் வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணித்தார் என்பதை மறுப்பதற்கில்லை. 

அவரது ஆளுமையின் கீழ், சிங்கப்பூரின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தது. அந்நாடு, ஒரு சர்வதேச நிதி அதிகார மையமாகவும், சிறந்த சுற்றுலாத்தலமாகவும் மாறியது. 

கடந்த 20 ஆண்டுகளில் அதன் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி இரு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. பல பொருளாதார மந்த நிலைக்கு, உலகளாவிய நிதி நெருக்கடி மற்றும் கொவிட் தொற்றின் போதெல்லாம் நாட்டை திறமையாக வழிநடத்திய பெருமை லீ சியென் லூங்கின் அரசாங்கத்துக்கு உண்டு என்று பாராட்டப்பட்டார். 

மேலும், அவரது அரசாங்கம் சர்ச்சைக்குரிய ஓரினச் சேர்க்கை எதிர்ப்புச் சட்டத்தை இரத்து செய்தது. லீ சியென் லூங் பொதுவாக சிங்கப்பூர் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டவர். சிங்கப்பூரின் மிகவும் பிரபலமான அரசியல்வாதிகள் தொடர்பான கணக்கெடுப்பில் அவர் முதலிடத்தைப் பிடித்ததாக கூறப்படுகிறது. 

கேலிக்குள்ளான குடும்ப ஆட்சி!

மறுபுறம், குடும்ப ஆட்சி என்னும்போது அது கடுமையாக மக்கள் விமர்சனத்துக்குள்ளாவது இயற்கையாகும். அந்த வகையில் இலங்கையில் கூட குடும்ப ஆட்சி கடும் விமர்சனத்துக்குள்ளானது. மக்கள் அதனை வெறுத்தனர். இந்தியாவை எடுத்துக்கொண்டால் ஆளும் பாரதீய ஜனதா கட்சி இரண்டு தடவைகள் ஆட்சி செலுத்திய நிலையில் தற்போது கடுமையான விமர்சனத்துக்குள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால், சிங்கப்பூரில் வெறுக்கும் அளவுக்கு இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஒரு வகையில் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவும் செய்தனர். காரணம், அங்கு  நிலவிய வெளிப்படைத் தன்மையாகும். அவர்கள் இலங்கையைப் போன்று மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கவோ, தங்கள் சகோதரர்கள், உறவினர்களை ஆட்சியில் இணைத்துக்கொள்ளவோ இல்லை. இலங்கையில் நிலவிய குடும்ப ஆட்சியில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தந்தைக்கும் மகனுக்குமான இடைவெளி 

குடும்ப சண்டை மற்றும் சொத்துப் பிரிப்பு என்பவற்றில் லீ சியென் லூங்கும் விதிவிலக்கில்லை என்று கூறப்படுகிறது. தனிப்பட்ட முறையில், லீ சியென் லூங்கின் தந்தை லீ குவான் யூ இறந்த ஒரு வருடத்துக்குப் பின்னர், அங்கு நடந்த ஒரு குடும்பச் சண்டை 2016இல் பொதுவெளிக்கு வந்தபோது மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஒரு கட்டத்தில், லீ சியென் லூங்கின் உடன்பிறப்புகள் அவரை கடுமையாக விமர்சித்தனர். 

மேலும், அவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும், 'அரசின் நிர்வாக அமைப்புகளை' தங்களுக்கு எதிராக பயன்படுத்துகிறார் என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். அவரது சகோதரர் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த சிலர் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறி, சுயமாக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டில் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் லீ சியென் லூங் மறுத்துள்ளார். 

மேலும், இந்த விவகாரம் அரசியலுக்கு அப்பாற்பட்டதாக விளங்கிய போதிலும் அவரது தந்தைக்கும் அவருக்கும் இடையில் பெரும் இடைவெளியை காட்டுவதாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான பிரச்சினைகளுக்கு மத்தியிலும் சியென் லூங், தனது அரசியல் ரீதியான முடிவுகள் மற்றும் இதர நாடுகளுடனான உறவுகளை பேணுவதில் கடைப்பிடித்து வந்த கொள்கைகளிலிருந்து தளம்பவில்லை. சிங்கப்பூரை சீராக வழிநடத்தியதுடன் எதற்காகவும் சிங்கப்பூரையோ மகளையோ அவர் விட்டுக்கொடுக்கவில்லை. அவரது தூர நோக்குடனான பொருளாதாரக் கொள்கைகள் உலகை திரும்பிப் பார்க்க வைத்தன. அதுவே அவரது சிறந்த ஆட்சிக்கு கட்டியம் கூறுவதாக இருந்தது என்பதை மறுக்க முடியாது.   

நன்றி வீரகேசரி

வர்த்தக‌ விளம்பரங்கள்