மனித mini நுரையீரல்களை ஆய்வகத்தில் தயாரித்து சாதனை
22 வைகாசி 2024 புதன் 09:24 | பார்வைகள் : 2699
மனித mini நுரையீரல்களை ஆய்வகத்தில் தயாரித்து சாதனை படைத்துள்ளார்கள் பிரித்தானிய அறிவியலாளர்கள்.
இந்த கண்டுபிடிப்பு மருத்துவ உலகில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பாகும்.
மருத்துவ உலகில் Stem cell சிகிச்சை மிகப்பெரிய அற்புதங்களைச் செய்துவருகிறது.
மனித ஸ்டெம் செல்களைக் கொண்டு பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முயற்சியில் மருத்துவ உலகம் தீவிரமாக இறங்கியுள்ளது.
அவ்வகையில், தற்போது ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி, மனித mini நுரையீரல்களை ஆய்வகத்தில் தயாரித்துள்ளார்கள் மான்செஸ்டர் பல்கலை அறிவியலாளர்கள் சிலர்.
அதாவது, மனிதர்களுக்கு ஏற்படும் சில நோய்களுக்கு மருந்துகள் மற்றும் புதிய சிகிச்சை முறைகளைக் கண்டுபிடிக்கும்போது, அவற்றை நேரடியாக மனிதர்கள் மீது பயன்படுத்துவதில்லை. மாறாக ஆய்வகத்தில் சில குறிப்பிட்ட விலங்குகள் மீது அவற்றைப் பயன்படுத்தி, அவை எவ்வாறு செயல்படுகின்றன, எந்த அளவுக்கு பலன் கொடுக்கின்றன, என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை அறிவியலாளர்கள் கண்காணித்து, அவற்றை குறித்துவைத்துக்கொண்டு, அதற்கேற்ப அடுத்த கட்ட ஆய்வுகளுக்குச் செல்வார்கள்.
தற்போது, ஆய்வகத்தில் ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி, சிறிய அளவிலான நுரையீரல்களை அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளதால், இனி நுரையீரலை பாதிக்கும் புற்றுநோய், cystic fibrosis மற்றும் கோவிட் போன்ற நோய்கள் தொடர்பிலான சோதனைகளை, ஆய்வக விலங்குகள் மீது நடத்துவதற்கு பதிலாக, இந்த ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட சிறிய நுரையீரல்களிலேயே அந்த சோதனைகளை செய்துபார்க்க பெரிய வாய்ப்பு உருவாகியுள்ளது.
இதனால், விலங்குகளை ஆய்வுகளுக்காக பயன்படுத்துதல் குறையும் அதே நேரத்தில், ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட மனித நுரையீரல்களிலேயே சோதனைகள் செய்யப்படுவதால், முன்னை விட துல்லியமான விளைவுகளும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.