Paristamil Navigation Paristamil advert login

இயற்கையை சீண்டியது போதும்

இயற்கையை சீண்டியது போதும்

22 வைகாசி 2024 புதன் 16:15 | பார்வைகள் : 593


காலம் மாறிவிட்டது. காலநிலையும் மாறவிட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியுடன், வேகமாக இயங்கும் உலகில், மனிதனின் தேவைகளும், நுகர்வு முறைகளும் மாறுபட்டுள்ளது. இதனால் சூழலுடன் ஒன்றித்து வாழும் வாழக்கை முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சூழலை மாசுபடுத்துவதில் ஆரம்பித்து, இயற்கையை சீண்டுமளவுக்கு மனிதச் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.

இவை தொடர்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வெளியாகியும், அவை தொடர்பில் மக்கள் மத்தியில் போதியளவு விழிப்புணர்வு இல்லையா அல்லது அவை தொடர்பில் அக்கறை இல்லையா என்பதைப் பற்றியே கேட்கத் தோன்றுகின்றது.

ஆம், அண்மைக் காலமாக உலகின் வெவ்வேறு பகுதிகளில் நடந்தேறும் இயற்கை அழிவுச் சம்பவங்களை எடுத்துப் பார்த்தால், மனிதன் இயற்கையை எந்தளவுக்கு சீண்டியுள்ளான் என்பது தெளிவாகின்றது.

சில உதாரணங்களாக டுபாயில் கடந்த மாதம் ஏற்பட்ட கடும் மழை, 1940 ஆம் ஆண்டு காலப்பகுதி முதல் அந்நாட்டில் மழைவீழ்ச்சி பதிவு செய்வது ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பதிவாகியிருந்த மிகவும் அதிகூடிய மழைவீழ்ச்சி 24 மணி நேரத்தினுள் பெய்திருந்தது. விமான நிலையம் உட்பட, நாட்டின் பிரதான வீதிகள், குடியிருப்புகள் அனைத்துமே வெள்ளத்தில் மூழ்கின. அந்நாட்டில் வடிகான் அமைப்பு முறையாக இன்மை இதற்கு ஒரு காரணமாக அமைந்திருந்தாலும், ஒரு வருடத்தில் பெறப்பட வேண்டிய மழைவீழ்ச்சி, ஒரே நாளில் பெய்துத் தீர்த்தமை உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்தது.

அதனைத் தொடர்ந்து, பிரேசிலின் தென்பகுதியில் தொடர்ச்சியாக ஒரு வார காலப்பகுதிக்கு மேலாக பெய்த அடைமழை காரணமாக அங்கும் பெருமளவு உயிர்ச் சேதம், பொருட் சேதம் ஏற்பட்டிருந்தன.

இவ்வாறு ஒரு பகுதியை அடை மழை வாட்டி எடுக்க, மறுபுறம், ஆசிய பிராந்திய நாடுகளில் கடும் வெயில் வறுத்தெடுத்து வருகிறது. இலங்கை உட்பட, வியட்நாம், தாய்லாந்து அடங்கலாக இந்த வெயிலின் கடும் வெப்பத் தாக்கத்தை உணர முடிந்தது. வெப்பநிலை மனித உடலுக்கு தாங்கிக் கொள்ள முடியாதளவு 45 பாகை செல்சியசுக்கு அப்பால் பதிவாகியிருந்தது.

இலங்கையிலும், வட பிராந்தியத்தில் அகோர வெயில் வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில், தென்பகுதியில் காலி முதல் அம்பலங்கொட வரையான கரையோரப் பகுதியில் கடல்நீர் நிலத்தினுள் ஊடுருவும் சம்பவங்களும் பதிவாகியிருந்தன. வருடாந்தம் இந்த காலப்பகுதியில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகின்றமை வழமையாக இருந்தாலும், இம்முறை அதன் தாக்கம் அதிகரித்திருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர். இவ்வாறு வெப்பத்தின் தாக்கம் வரலாறு காணாத வகையில் உச்சம் தொட்டுள்ள நிலையில், அடுத்து வரும் மாதங்களில் மழை வீழ்ச்சியும், அதனால் ஏற்படும் வெள்ளப் பெருக்கின் தாக்கமும், சேதங்களும் அதிகமாக இருக்கும். மலைநாட்டுப்பகுதியில் மண்சரிவுகள் தவிர்க்க முடியாத சம்பவங்களாக இருக்கும்.

இவ்வாறு தொடர்ந்து அசாதாரணமான முறையில் காலநிலையில் ஏற்படும் மாற்றம் காரணமாக, நீண்ட கால அடிப்படையில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஏன் இவ்வாறான அசாதாரண மாற்றம் ஏற்படுகின்றது? எல்-நினோ, லா-நினோ என பல காரணங்கள் தெரிவிக்கப்பட்டாலும், அவை ஏற்படவும் மனிதனின், இயற்கையை சீண்டும் செயற்பாடுகளே காரணமாகின்றன.

நிலக்கரி எரிப்பில் ஆரம்பித்து, காடழிப்பதுடன், நீரோடைகளை மறித்து, அவற்றை நிரப்பி கட்டிடங்களை அமைப்பது முதல், பிளாஸ்ரிக் கழிவுகளை உருவாக்குதல் வரை என பல விடயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். புவி வெப்படைவது அதிகரிப்பதன் காரணமாக இந்த மாற்றம் ஏற்படுகின்றது. புவியின் துருவங்களில் காணப்படும் பனிப்பாறைகள் உருகி, அவை கடல் நீருடன் கலந்து, கடல் நீர்மட்டம் அதிகரிப்பதும், புவி வெப்பச் சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

அதிகாரத்திலுள்ளவர்களும், தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, இவ்வாறான இயற்கையுடன் சீண்டும் செயற்பாடுகளில் ஈடுபடுவதை காண முடிகின்றது. அண்மைக்காலத்தில் அவ்வாறு நடந்தேறிய ஒரு சம்பவத்துக்கான உதாரணமாக, மரம் வெட்டுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சூழல்சார் செயற்பாட்டு அதிகாரி ஒருவர் கருத்து வெளியிட்ட போது, அமைச்சருக்கு நெருக்கமான நபர் ஒருவர் “ஒட்சிசனை உண்ண முடியுமா?” என கேள்வி கேட்டிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் பரவி, பலர் மத்தியில் பரவலாக பேசப்பட்டது. இவ்வாறு உயர் மட்டத்திலிருக்கும் அதிகாரிகள் முதல் இந்த சூழல் மாசு, இயற்கையுடன் சீண்டுதல் போன்ற விடயங்கள் பற்றி போதிய அறிவின்மை தெளிவாகின்றது.

சுற்றாடல் அமைச்சர் என ஒருவர் காணப்பட்டாலும், அந்த அமைச்சினால் சூழலை பாதுகாக்க எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது கேள்விக்குறியாக அமைந்துள்ளது. வெறுமனே இங்கு குப்பை கொட்டினால் அபராதம், இது வனாந்தரப் பகுதி, உட்பிரவேசிக்கக் கூடாது, எதிர்கால சந்ததிகளுக்காக இந்த வளங்களை பாதுகாக்க வேண்டும் என ஆங்காங்கே அறிவுறுத்தல் பதாதைகள் மாத்திரம் நிறுவுவது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த போதுமானதாக இல்லை.

ஒவ்வொரு தடவையும் வெள்ள அனர்த்தம் ஏற்படும் போது, மனித உடலினால் தாங்கிக் கொள்ள முடியாத வெப்பநிலை நிலவும் போது, உயர்ந்த பகுதிக்கு செல்வது, தற்காலிகமாக தஞ்சமடைவது, வாயு குளிரூட்டிகளை பயன்படுத்துவது, நகரங்களை அண்மித்து வசிப்பவர்களாயின் அருகாமையிலுள்ள வாயு குளிரூட்டப்பட்ட அங்காடிக்கு அல்லது பல்பொருள் விற்பனை நிலையத்துக்கு சென்று குளிர் காற்று வாங்குவது போன்ற பாதிப்புகளிலிருந்து தம்மை உடனடியாக பாதுகாத்துக் கொள்ளும் விடயங்களில் கவனம் செலுத்துகின்றனறே தவிர, இவ்வாறான மாற்றம் ஏற்படக் காரணம் என்ன என்பதை உணர்ந்து செயலாற்ற மறுக்கின்றனர்.

மறுபக்கத்தில் வியாபார நிறுவனங்கள். இலாபமீட்டும் நோக்கில் இயங்குகின்றனவே தவிர, பெயருக்காக தாம் சூழலில் அக்கறை காண்பிக்கின்றோம், சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகள் என தெரிவித்து செயற்பட்டாலும், உண்மையில் உற்பத்திச் செயற்பாடுகளில் ஈடுபடும் நிறுவனங்களினால் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் இல்லை என்பதே உண்மை. இதை எந்த பல்தேசிய நிறுவனமும் பகிரங்கமாக மறுத்ததாக இல்லை. அவ்வாறு வியாபார செயற்பாடுகளில் ஈடுபடும் நிறுவனங்களினால் ஏற்படும் சூழல் பாதிப்பை கண்காணிப்பதற்கு விதிமுறைகள் உறுதியானதாக இல்லை. குறிப்பாக இவ்வாறான நிறுவனங்களிலிருந்து வெளியேறும் கழிவுகள், வெப்ப வெளியேற்றம், அபிவிருத்தி எனும் பெயரில் முன்னெடுக்கப்படும் விஸ்தரிப்புகள் போன்றன நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ காலநிலை தாக்கத்துக்கு காரணமாக அமைந்துவிடுகின்றன.

நெருப்பை தீண்டினால் சுடும் என்பது தெரியும். அதனால் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு எச்சரிக்கையாக இருக்கின்றனர். அதுபோலத்தான் இயற்கையும், நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயற்பாடும், சூழலில் தாக்கம் செலுத்தி, இயற்கையின் சீற்றத்துக்கு வித்திடுகின்றது. தொழில்நுட்ப விருத்தி எனும் பெயரில், மனிதன் ஏற்படுத்தியுள்ள அபிவிருத்தி, இயற்கையுடன் ஒன்றித்துப் போவதாக தெரியவில்லை. இதில் துரிதமாக மாற்றம் ஏற்படாவிடின், எதிர்வரும் காலங்களில் இதை விட மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

நன்றி Tamilmirror

வர்த்தக‌ விளம்பரங்கள்