Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் - பாலத்தீனம் பிரச்னையின் முழு விவரம்

இஸ்ரேல் - பாலத்தீனம் பிரச்னையின் முழு விவரம்

24 வைகாசி 2024 வெள்ளி 11:51 | பார்வைகள் : 1349


இஸ்ரேல், பாலத்தீனம், ஹமாஸ் மற்றும் காஸா. இந்த வார்த்தைகளை நீங்கள் அடிக்கடி சமீப நாட்களில் செய்திகளில் பார்த்திருக்கக் கூடும்; கேட்டிருக்கக் கூடும்.

கடந்த அக்டோபர் 7-ம் திகதி ஹமாஸ் ஆயுதக் குழு இஸ்ரேலில் ஊடுருவி தாக்குதல் நடத்தியதில் இருந்து, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆயுதக் குழுக்களுக்கு இடையே நடைபெற்றுவரும் சண்டை நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது.

150-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளது ஹமாஸ். இஸ்ரேலில் அழுகுரல் தொடர்கிறது.

ஆனால், இந்த போருக்கான பின்னணியும், இந்த பகுதியில் நடக்கும் பிரச்னையும் மிகவும் சிக்கலானவை. இஸ்ரேல், பாலத்தீனம், ஹமாஸ், காஸா வரலாறு எல்லாவற்றையும் சுருக்கமாக இந்த கட்டுரைத் தொகுப்பின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

தவிர, இந்தியாவுக்கும் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்துக்கு இடையேயான உறவுகள் குறித்தும் பார்க்கலாம்.

1914-க்கு முன்பு வரை பாலத்தீன பகுதியை ஓட்டோமான் பேரரசு ஆண்டு வந்தது. பாலத்தீனத்தில் அரேபியர்கள் பெரும்பான்மையாகவும், யூதர்கள் சிறுபான்மையினராவாகவும் இருந்தனர்.

முதலாம் உலகப்போரில் ஒட்டோமான் பேரரசு வீழ்ந்தது. பிரிட்டன் ஆளுகையின் கீழ் பாலத்தீனம் வந்தது. அப்போது சர்வதேச சமூகம் பிரிட்டனிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்தது. அது பாலத்தீனத்தில் யூதர்களுக்கு அவர்களுக்கான ‘தேசியத் தாயகத்தை’ தோற்றுவிப்பதே.

ஜெருசலேம் மிகவும் பழமையான நகரம் என்பது தொல்லியல் வரலாறு. இது யூத, கிறித்துவ மற்றும் இஸ்லாமிய மதத்தினருக்கு மிக மிக முக்கியமான பகுதி.

யூதர்களை பொறுத்தவரை இந்த பகுதி அவர்களுடைய பூர்வீக மண்ணாக இருக்கிறது. பாலத்தீன அரபிகளை பொறுத்தவரையில் இது அவர்களது நிலம் என கோரி, யூதர்களை குடியேற்றம் செய்வதை எதிர்த்தனர்.

1920 முதல் 1940 வரை பாலத்தீன பகுதியில் யூதர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்தது. அதற்கு காரணம். ஐரோப்பாவில் அவர்களுக்கு நடந்த கொடுமைகள். குறிப்பாக ஹிட்லர் காலத்தில் ஜெர்மனியில் பெருந்துயரத்தை யூத மக்கள் எதிர்கொண்டனர்.

ஜெர்மானிய சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் யூதர்களை படுகொலை செய்ய சபதமெடுத்தார். இரண்டாம் உலகப்போரின் போது ஆஷ்விட்ச் உள்ளிட்ட இனப்படுகொலைகளில் இருந்து தப்பியோடிய யூதர்கள் சிலர் இங்கே தஞ்சமடைந்தனர்.

அப்போது பாலத்தீனத்தில் யூதர்களுக்கும் பாலத்தீன அரபிகளுக்கும் இடையே வன்முறை பெரிதானது. அதே சமயம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகவும் கோபம் எழுந்தது.

1947-ம் ஆண்டு பிரிட்டன் பாலத்தீனத்தை விட்டு வெளியேற முடிவு செய்தது. அப்போது பாலத்தீனத்தை இரண்டாக பிரித்து யூதர்களுக்கு ஒரு நாடும், பாலத்தீன அரபிகளுக்கு ஒரு நாடும் தோற்றுவிக்கவும், இரு சமூகத்துக்கும் புனித நகரமாக கருதப்படும் ஜெருசலேமை சர்வதேச நகரமாக மாற்றவும் ஐநா ஆதரவளித்தது.

இந்த திட்டத்தை யூத தலைவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் பாலத்தீன அரபிகள் நிராகரித்தார்கள்.

1948-ல் இந்த பிரச்னையை தீர்க்க முடியாத பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். அதன்பின்னர் 1948-ம் ஆண்டு மே மாதம் 14-ம் திகதி

யூத தலைவர்கள் இஸ்ரேல் எனும் தனி நாடு தோற்றுவிக்கப்பட்டதாக அறிவித்தனர். அதே தினத்தில் இஸ்ரேலை தனி நாடாக அமெரிக்க அதிபர் ஹேரி ட்ரூமேன் அங்கீகரித்தார்.

அந்த அறிவிப்புக்கு பாலத்தீனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மறுநாளே போர் மூண்டது. அண்டை அரபு நாடுகள் படையெடுத்தன.

இந்த போரில் மட்டும் சுமார் 7,50,000 பாலத்தீன அரபிகள் தங்களது வீட்டை விட்டும், தாயகத்தை விட்டும் தப்பி ஓடினர் அல்லது வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இதனை பாலத்தீனர்கள் ‘அல் நக்பா’ அதாவது பேரழிவு என குறிப்பிடுகின்றனர்.

இந்த போர் 1949 வரை நீடித்தது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டபோது இந்த பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதியை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

ஜோர்டான் ஆக்கிரமித்த பகுதி வெஸ்ட் பேங்க் (West bank) அதாவது ‘மேற்கு கரை’ என அறியப்படுகிறது. எகிப்து ஆக்கிரமித்த பகுதிதான் காஸா.

ஜெருசலேமும் இரண்டாக பிரிந்தது. மேற்கு ஜெருசலேமை இஸ்ரேலிய படைகளும், கிழக்கு ஜெருசலேமை ஜோர்டானிய படைகளும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன.

ஆனால், ஒரு அமைதி ஒப்பந்தம் ஏற்படவே இல்லை. அனைத்து தரப்பும் ஒருவருக்கொருவர் மீது பழி போட, தொடந்து நிறைய போர்களும் சண்டைகளும் நீடித்தன.

1967-ல் நடந்த ஆறுநாள் போரில் இஸ்ரேல் கிழக்கு ஜெருசலமேயும் மேற்கு கரையையும் ஆக்கிரமித்தது. மேலும், சிரியன் கோலன் குன்றுகள், காஸா மற்றும் எகிப்தின் சினாய் தீபகற்பத்தின் பெரும் பகுதிகளையும் இஸ்ரேல் ஆக்கிரமித்தது.

பாலத்தீன அகதிகள் பலரும் அவர்களது சந்ததியினரும் காஸா, மேற்கு கரை மற்றும் அண்டை நாடுகளான ஜோர்டான், சிரியா மற்றும் லெபனானில் வாழ்கின்றனர்.

அந்த அகதிகளோ அல்லது அவர்களது சந்ததியினரோ தத்தமது வீடுகளுக்குத் திரும்ப இஸ்ரேல் அனுமதிக்க மறுத்தது. அப்படி அனுமதிக்கப்பட்டால் அதனை கையாள முடியாது என்றும், அது யூத தேசம் என ஒன்று இருப்பதற்கே அச்சுறுத்தலாக அமையும் என்கிறது இஸ்ரேல்.

இஸ்ரேல் இன்னமும் மேற்கு கரையை ஆக்கிரமித்துள்ளது. எனினும் 2005-ல் காஸாவில் இருந்து விலகியது. ஆனால் இந்த சிறிய கடற்கரையோர துண்டு பகுதியான காஸாவை ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியமாக ஐநா கருதுகிறது.

இஸ்ரேல் மொத்த ஜெருசலேமையும் தனது தலைநகர் என கூறுகிறது. அதே சமயம் பாலத்தீனம் கிழக்கு ஜெருசலேமை தனது எதிர்கால பாலத்தீன நாட்டின் தலைநகர் என கூறுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 2017-ம் ஆண்டு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தார். பிரிட்டன், ஜப்பான், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்க அதிபரின் முடிவுக்கு ஐநாவில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.

இஸ்ரேல், கடந்த 50 ஆண்டுகளில் மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் பல குடியிருப்புகளை கட்டியது. இப்போது கிட்டதட்ட 6 லட்சத்துக்கும் அதிகமான யூதர்கள் இங்கே வாழ்கிறார்கள்.

சர்வதேச விதிகளின் படி இந்த குடியிருப்புகள் சட்டவிரோதமானவை. ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிலைப்பாடு இதுதான். ஆனால் இஸ்ரேல் இதனை நிராகரிக்கிறது.

மேற்கு கரையில் வசிக்கும் பாலத்தீனர்கள் இஸ்ரேல் தங்களை கொடுமைப்படுத்துவதாகவும், பணயக் கைதிகளாக வைத்திருப்பதாகவும் கூறுகிறார்கள். ஆனால், பாலத்தீனர்களின் வன்முறையில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கைகள் எடுப்பதாக இஸ்ரேல் கூறுகிறது.

மேற்கு கரையில் குடியேறியுள்ள யூதர்களிடமிருந்து, தினமும் குறைந்தது மூன்று தாக்குதல்களையாவது பாலத்தீனர்கள் எதிர்கொள்வதாக ஐநா சமீபத்தில் தெரிவித்திருந்தது. கடந்த சில மாதங்களில் குறைந்தபட்சம் மூன்று பாலத்தீன குடும்பங்களாவது தமது நிலத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.

அதே சமயம் இந்த பிராந்தியத்தில் பாலத்தீனர்களால் யூதர்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

கடும்போக்கு வலது சாரி இஸ்ரேலிய அரசாங்கத்தின் ஆளுகையின் கீழ் இருக்கும் மேற்கு கரை பகுதியில், சமீபத்தில் 19 வயது வாலிபர் ஒருவர் கொல்லப்பட்ட நிகழ்வு செய்திகளில் இடம்பிடித்தது. சந்தேக இஸ்ரேலிய நபர்களால் அந்த வாலிபர் கொல்லப்பட்ட நிகழ்வை ‘பயங்கரவாதச் செயல்’ என அமெரிக்கா கண்டித்தது.

உலகின் சிறந்த உளவு அமைப்புகளில் ஒன்றாகவும், மத்திய கிழக்கு நாடுகளில் உன்னிப்பாக கவனித்து பல்வேறு ஆபரேஷனை நடத்தியதாக அறியப்படும் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டை தற்போது ஏமாற்றியுள்ளது ஹமாஸ் அமைப்பு.

இஸ்ரேலின் கடும் பாதுகாப்பு அமைப்பை மீறி, அந்நாட்டுக்குள் ஊடுருவி கடந்த அக்டோபர் 7-ம் தேதி பல்வேறு கொடூரமான தாக்குதல்களை நடத்தியது ஹமாஸ் ஆயுதக்குழு.

ஒரே நாளில் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி இஸ்ரேல் நாட்டையே அதிரச் செய்தது. இஸ்ரேலில் கடும் சேதங்களையும், ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்புக்கும் ஹமாஸ் காரணமாகியுள்ளது. குறைந்தது 150 பேரை பணயக்கைதிகளாவும் பிடித்துச் சென்றுள்ளது.

பாலத்தீன பகுதிகளில் இயங்கிவரும் பல்வேறு ஆயுதக் குழுக்களில் மிகப்பெரியது ஹமாஸ். Harakat al-Muqawama al-Islamiya என்பதன் சுருக்கமே ஹமாஸ். இந்த பெயர் இஸ்லாமிய கிளர்ச்சி இயக்கம் எனும் அரேபிய சுருக்கத்தில் இருந்து பெறப்பட்டது.

1987-ல் உருவான ஹமாஸ் குழுவின் சாசனம் இஸ்ரேலை அழித்துவிட்டு இஸ்லாமிய அரசை நிறுவுவதே தங்களது நோக்கம் என கூறுகிறது.

பாலத்தீனர்களின் பிரதிநிதியாக கருதப்பட்டு வந்த பாலத்தீன விடுதலை இயக்கத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையான அமைதி உடன்பாட்டை எதிர்த்த முக்கியமான இயக்கம் எனும் வகையில் 90களில் கவனம் பெற்றது.

ஹமாஸ் இரு வேறு பணிகளை செய்துவருகிறது. ஒன்று தனது ராணுவ பிரிவின் மூலம் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்துவது. மற்றொன்று நலத்திட்டங்கள் மூலம் சமூக பணிகளை செய்வது. பல பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் கட்டியுள்ளது ஹமாஸ்.

2005-ல் இஸ்ரேலிய படைகள் காஸாவில் இருந்து விலக்கிக்கொல்லப்பட்ட பின் அரசியல் நடவடிக்கையில் இறங்கியது. 2006 தேர்தலில் வென்று பாலத்தீன கூட்டணி அரசிலும் இடம்பெற்றது. ஆனால் பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸின் ஃபதா இயக்கத்தை பகைத்துக்கொண்டு அரசில் இருந்து வெளியேறி காஸாவுக்குள் முடங்கியது.

ஹமாஸ் காஸாவில் 2007-ல் இருந்து ஆட்சி செய்கிறது. பாலத்தீனத்தின் ஃபதா ஆதரவு படைகளையும் காஸாவில் இருந்து வெளியேற்றியது.

இதுவரை ஹமாஸ் பலமுறை இஸ்ரேலுடன் போர் புரிந்துள்ளது. வேறு சில ஆயுதக்குழுக்கள் இஸ்ரேலை தாக்க ராக்கெட்டுகளை ஏவுவதற்கும் அனுமதிக்கறது அல்லது ஹமாசே ராக்கெட்டுகளை ஏவுகிறது. தவிர, தற்கொலைப்படை தாக்குதல்களையும் நடத்தியிருக்கிறது.

2014-ம் ஆண்டில் இஸ்ரேலுடன் 50 நாட்களுக்கு சண்டை போட்டது. அதில், 2251 பாலத்தீனர்கள் மற்றும் 73 இஸ்ரேலியர்கள் இறந்தனர்.

2014-ம் ஆண்டில் இருந்து ஹமாஸ் - இஸ்ரேல் இடையே அவ்வப்போது சண்டைகள் தொடங்குவதும் எகிப்து, கத்தார், ஐநா தலையீட்டில் நிறுத்தப்படுவதுமாக இருந்தது.

காஸா பகுதியைச் சுற்றி இஸ்ரேல் கடுமையான தடைகளை ஏற்படுத்தினாலும், ஹமாஸ் குழு காஸாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ராக்கெட் வலிமையையும் அதிகரித்துள்ளது.

ஹமாஸை இரான் ஆதரிக்கிறது. ஹமாஸுக்கு நிதி, ஆயுதம் மற்றும் பயிற்சிகளை இரான் வழங்குகிறது. ஹமாஸை லெபனானின் ஹிஸ்புல்லா ஆயுத குழுவும் ஆதரிக்கிறது.

அதேசமயம், ஹமாஸை ஒட்டுமொத்தமாகவோ அல்லது சில சமயங்களில் அதன் ராணுவ பிரிவை மட்டுமோ பயங்கரவாத குழுவாக இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் உள்ளிட்டவை அறிவித்துள்ளன.

இஸ்ரேல், எகிப்து மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிக்கு இடையே 41 கிமீ நீளமும், 10 கிமீ அகலமும் கொண்ட சிறிய பகுதிதான் காஸா.

இதனை காஸா கரை என்றும் காஸா துண்டு நிலப்பகுதி என்றும் குறிப்பிடுகிறார்கள். ஆனால் இப்போது இதுதான் 23 லட்சம் பேருக்கு தாயகம். உலகிலேயே மிகக்குறைந்த நிலப்பரப்பில் அதிக மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிகளில் முக்கியமானது காஸா.

முதலில் எகிப்துதான் இந்த பகுதியை ஆக்கிரமித்திருந்தது. பின்னர் 1967-ல் இஸ்ரேல் கைப்பற்றியது. ஆனால் 2005ல் தனது படையினரை விலக்கிக்கொண்டது. பின்னர் தற்போதுவரை ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ளது.

காஸாவின் வான்பரப்பு மற்றும் கடற்கரை பகுதியை இஸ்ரேல் கட்டுப்படுத்துகிறது. எல்லையை தாண்டி மக்கள் செல்வதையும் பொருட் பண்டங்கள் செல்வதையும் கடும் கண்காணிப்பில் வைத்துள்ளது.

காஸாவின் 80% மக்கள் சர்வதேச உதவிகளை நம்பிதான் இருக்கின்றனர் என ஐநா கூறுகிறது. 10 லட்சம் பேருக்கு தினசரி உணவே உதவிகள் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

ஹமாஸ் தற்போது எதிர்பாராதவிதமாக தாக்குதல் நடத்தியதில் காஸாவுக்கு வழங்கப்படும் மின்சாரம், எரிபொருள், தண்ணீர் ஆகியவற்றை இஸ்ரேல் துண்டித்துவிட்டது. உணவும், பிற பொருட்களும் உள்ளே செல்லமுடியாது.

காஸாவில் இப்போது மின்சார சப்ளை இல்லை; எரிபொருள் இன்றி மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாது. கழிவு நீர் அமைப்புகளும் முடங்கவுள்ளது.

இஸ்ரேலும் ஹமாஸும் காஸாவுக்காக பல முறை சண்டையிட்டுள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் வெடித்த மோதலில் பலர் கொல்லப்பட்டனர்.

இதுவரையிலான மோதல்களில் அதிக உயிர்சேதங்களை எதிர்கொண்டது பாலத்தீனர்கள் என்பது அதிகாரபூர்வ தகவல். இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலில் காஸாவில் பல குடும்பங்கள் நிலைகுலைந்துள்ளன. சில பகுதிகள் பேய் நகரம் போல காட்சியளிக்கின்றன.

முப்பது ஆண்டுகளாக இஸ்ரேல் மற்றும் பாலத்தீனம் இடையே பல்வேறு சுற்று பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளன. ஆனால் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை. அதற்கு குறைந்தது 2-3 முக்கிய விவகாரங்கள் காரணம்.

முதல் கேள்வி பிற நாடுகளில் தஞ்சமடைந்துள்ள பாலத்தீன அகதிகளை என்ன செய்வது? இதற்கு இஸ்ரேல் - பாலத்தீன தரப்பில் தீர்வு எட்டப்படவில்லை.

இரணடாவது கேள்வி, மேற்கு கரையில் இஸ்ரேல் கட்டியுள்ள குடியிருப்புகள் அப்படியே இருக்க வேண்டுமா அல்லது அகற்றப்படவேண்டுமா?

மூன்றாவது கேள்வி, இரு தரப்பும் ஜெருசலேமை பகிர்ந்து கொள்வதா இல்லையா?

இன்னொரு மிக முக்கியமான, அதி சிக்கலான கேள்வி - இஸ்ரேலுடன் பாலத்தீனம் சுதந்திரமான தனி நாடாக கருதப்படுமா இல்லையா?

தற்போது நடக்கும் மோதல்களை கருத்தில் கொள்கையில் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனம் இடையே தற்போதைக்கு உடன்பாடு எட்டப்படுவது மிகவும் கடினம் தான்.

பாலத்தீனத்தை பொறுத்தவரையில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்கள் பலரும் தனி நாடாக அங்கீகரித்துள்ளனர். ஆனால் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் அங்கீகரிக்கவில்லை. ஆனால், இந்தியா 1988-லேயே பாலத்தீனத்தை அங்கீகரித்துவிட்டது.

உண்மையில் இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் இருந்து

பிரதமர் நேரு முதல் பிரதமர் மோதி வரை பாலத்தீனத்துக்கு வெளிப்படையாக இந்தியா ஆதரவளிக்கிறது.

பாலத்தீன பிரச்னைக்கு இந்தியாவின் ஆதரவு நாட்டின் வெளியுறவு கொள்கையின் ஒரு பகுதி என இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறுகிறது.

1974-ல் பாலத்தீன விடுதலை அமைப்பை பாலத்தீன மக்களின் ஒரே மற்றும் நியாயமான பிரதிநிதியாக அங்கீகரித்த முதல் அரபு அல்லாத நாடு இந்தியா தான்.

ஐக்கிய நாடுகள் சபையில் பாலத்தீனத்துக்கு உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடு அந்தஸ்து வழங்கவும், ஐநா வளாகத்தில் பாலத்தீன கொடியை நிறுவவும் இந்தியா ஆதரவளித்துள்ளது.

2017-ல் பாலத்தீன அரசின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் இந்தியா வந்தார். 2021-ல் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் பாலத்தீனத்துக்கு ஆதரவாக நிற்பதை இந்தியா உறுதிப்படுத்தியது.

பாலத்தீன மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை வழங்கிவந்துள்ளது இந்தியா.

1947-ல் இஸ்லாமியர்களுக்கு என தனி தேசம் கோரி, பாகிஸ்தான் பிரிந்ததில் இருந்து, சகோதரத்துவத்தை பேணவும் மத்திய கிழக்கு நாடுகளுடன் நல்லுறவை பேணவும் பாலத்தீனர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுத்துள்ளது.

1947-ல் ஐநா சபையில் பிரிட்டிஷ் ஆளுகையில் இருந்த பாலத்தீனத்தை பிரித்து யூதர்கள் மற்றும் பாலத்தீனர்களுக்கு தனி நாடு உருவாக்கும் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியது.

ஆனால், யூதர்களுக்கு தனி தேசம் உருவாக்கப்படுவதற்கு எதிராக வாக்களித்த 13 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

பாலத்தீனத்தை இந்தியா கைவிடாத அதே சமயம் இஸ்ரேலுடனான உறவும் வலுப்பெற்றுள்ளது.

1950-ல் இஸ்ரேலை இந்தியா அங்கீகரித்தது.அதைத்தொடர்ந்து இஸ்ரேல் பம்பாயில் குடிபெயர்வு அலுவலகத்தை திறந்தது. 1992-ல் இரு நாடுகளிடையே முழுமையான ராஜீய உறவுகள் தொடங்கியது. இரு நாடுகளிலும் தூதரங்கள் திறக்கப்பட்டன.

பாகிஸ்தானுக்கு எதிரான போர்களில் இந்தியாவுக்கு இஸ்ரேல் ஆயுதம் வழங்கியது. இந்தியா ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக இஸ்ரேலிடம் இருந்துதான் ராணுவ உபகரணங்களை வாங்குகிறது.

நரேந்திர மோதி தான் முதல்முறையாக இஸ்ரேலுக்கு அரசுமுறை பயணம் சென்ற முதல் இந்திய பிரதமர். 2017-ல் நரேந்திர மோதி சென்ற பிறகு 2018-ல் இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாகுவும் இந்தியாவும் வந்தார்.

கடந்த அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் இஸ்ரேலில் ஊடுருவி தாக்குதல் நடத்திய பின்னர் ட்வீட் செய்த இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இஸ்ரேலில் நடந்த பயங்கரவாத தாக்குதல் செய்தியை அறிந்து அதிர்ச்சியடைந்ததாகவும் அப்பாவி குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்வதாகவும் எழுதியிருந்தார். இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலுடன் நிற்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஒரு முக்கியமான விஷயம் இங்கே குறிப்பிடவேண்டியது என்னவெனில் இரு தரப்பில் இருந்தும் வன்முறை நடக்கும்போது மூன்றாம் தரப்பினர் அதில் யார் சரி, யார் தவறு என முடிவெடுப்பது மிகவும் கடினமானது.

போர் மற்றும் இனப்படுகொலையில் இருந்து தப்பி இந்த பகுதியில் குடியேறி தமக்கென தனி தேசம் உருவாக்கிய யூதர்கள், அல்லது வாழ்ந்துவந்த மண்ணை பறிகொடுத்து வீட்டுக்கு திரும்பமுடியாமல் அகதிகளான பாலத்தீனர்கள் என இரு தரப்பில் யார் சரி, யார் தவறு? எங்கே, எது பாதிக்கப்பட்ட தரப்பு என்றெல்லாம், ஒரு சில ட்வீடுகளை வைத்தோ, சமூக ஊடக பதிவுகளை மட்டும் வைத்தோ விவரிக்கவோ புரிந்துகொள்ளவோ முடியாது.

நன்றி BBC செய்தி


 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்