Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் பிறந்த குழந்தையை காணவில்லை: பரிதவிக்கும் தாய் தந்தை!

இலங்கையில் பிறந்த குழந்தையை காணவில்லை: பரிதவிக்கும் தாய் தந்தை!

27 வைகாசி 2024 திங்கள் 12:06 | பார்வைகள் : 1340


மாத்தறை - புதிய மாவட்ட பொது வைத்தியசாலையில் பிறந்த குழந்தை ஒன்று மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவிந்தியா மதுஷானி என்ற 23 வயதுடைய பெண்ணுக்கு கடந்த 24 ஆம் திகதி சுகப்பிரசவத்தில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

ஆனால், குழந்தை பிறந்து சில நிமிடங்களிலேயே இறந்துவிட்டதாகவும் சரீரத்தை பிரேத அறையில் வைத்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.

உயிரிழந்த குழந்தையை அதன் தந்தையிடம் கூட காண்பிக்கவில்லை எனவும் தற்போது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

கடந்த 10 மாதகாலமாக குறித்த வைத்தியசாலைக்குத்தான் காவிந்தியா மதுஷானி கர்ப்பகால பரிசோதனைக்கு சென்றுள்ளார்.

இதன்போது, குழந்தைக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருக்கின்றதா என்பது தொடர்பில் காவிந்தியா மதுஷானிக்கு எவ்வித அறிவுறுத்தலும் வழங்கியிருக்கவில்லை எனவும் அவரின் உறவினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குழந்தை பிறப்பதற்கு முதல்நாள் (23) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காவிந்தியாவுக்கு பிரசவ வலி ஏதும் ஏற்படவில்லை. அதனால் ஏதோ ஒரு மருந்தை கொடுத்து வலியை ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து 24ஆம் திகதி குழந்தை பிறந்துள்ளது. ஆனால் இறந்தே தான் பிறந்தது என குறிப்பிட்டனர்.

குழந்தையின் சரீரம் பிண அறையில் வைக்கப்பட்டுள்ளதாக முதலில் கூறப்பட்டுள்ளது. ஆனால், உயிரிழந்த குழந்தையின் சரீரத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமேயானால் நகரசபையில் பணம் செலுத்தி பற்றுச்சீட்டு பெற்றுக்கொண்டு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் 2500ரூபாய் பணம் செலுத்தி பற்றுச்சீட்டை கொண்டுவந்து சமர்ப்பித்தபோதிலும் குழந்தையின் சரீரத்தை கண்ணால் கூட பார்க்க முடியவில்லை. மாறாக சரீரம் இங்கு இல்லை என தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து கொழும்புக்கு பரிசோதனைக்காக சரீரம் கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் இது தொடர்பில் தொடர்ந்தும் குடும்ப உறுப்பினர்கள் வினவி வருகின்ற போதிலும் சரியாக பதில் எதுவும் கிடைக்கவில்லை என உறவினர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குழந்தை பிறந்து இறந்துவிட்டதாக குறித்த தாயிடம் கூறியதையடுத்து, ”தந்தையிடம் குழந்தையின் முகத்தை காட்டவேண்டும் என கூறினேன். குழந்தை நலமுடன் பிறந்ததை நான் பார்த்தேன். ஆனால் என் குழந்தைக்கு என்ன ஆனது என எனக்கு தெரியவில்லை” என கண்ணீருடன் குழந்தையின் தாய் தெரிவிக்கின்றார்.

தொடர்ந்து எங்கள் குழந்தை உயிரிழந்திருந்தால் மரண சான்றிதழை தாருங்கள் என உயிரிழந்த குழந்தையின் தந்தை கோரியுள்ளார்.

ஆனால், வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கடந்த 19ஆம் திகதியிலிருந்து எந்தவொரு குழந்தையும் பிறந்து இறந்தமைக்கான சான்றுகள் எதுவும் பதிவாகவில்லை.

அப்படியிருக்கையில் எப்படி மரண சான்றிதழ் தர முடியும் என வைத்தியசாலை மரண பதிவு அதிகாரி தெரிவித்துள்ளதாக குழந்தையின் தந்தை குறிப்பிடுகின்றார்.

எங்களுடைய குழந்தையின் இறப்புக்கு ஒரு நியாயம் வேண்டும், குழந்தை இறந்துவிட்டதைகூட எங்களால் நம்ப முடியாமல் இருக்கின்றது. அல்லது குழந்தையை யாருக்கேணும் விற்பனை செய்துவிட்டார்களா? என தெரியவில்லை என மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், குழந்தையின் மரணபரிசோதனையில் குழந்தை ஏன் இறந்தது எனக்கூட கூறவில்லை. சுடுகாட்டில் வீசிவிட்டார்களா எனவும் குழந்தையின் தந்தை புலம்பி தவிக்கின்றார்.

இது தொடர்பாக வைத்தியர்கள் எவரும் அதிகாரபூர்வமாகப் பதிலளிக்கவில்லை. சாதாரண ஊழியர்களைக் கொண்டே பதில் வழங்கப்பட்டிருப்பதாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்