ரஃபா நகர் மீதான இஸ்ரேலின் தாக்குதல்...! அமெரிக்கா கருத்து
29 வைகாசி 2024 புதன் 04:47 | பார்வைகள் : 2718
இஸ்ரேல் நாடானது ஹமாஸ் அமைப்பை முற்றாக அழிக்கும் வரை போரை நிறுத்த மாட்டோம் என சூளுரைத்துள்ளது.
இந்நிலையில் காசாவின் ரஃபா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது.
அதாவது இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காசாவின் ரஃபா நகர் மீது பயங்கர வான்வெளி மற்றும் தரைப்படைத் தாக்குதலை நடத்தி வருகிறது.
ஹமாஸ் அமைப்பின் சுகாதார அமைச்சகம் வழங்கிய தகவலின் படி, இஸ்ரேலின் வான் தாக்குதலில் குறைந்தது பெண்கள், குழந்தைகள் உட்பட 45 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் படுகாயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இஸ்ரேல் ஏவிய இந்த ராக்கெட்கள் கைவிடப்பட்ட மக்கள் தங்கியிருந்த கூடாரங்களை தாக்கி இருப்பதாக தகவல் வெளியானதை தொடர்ந்து இஸ்ரேலின் செயலுக்கு பல்வேறு உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போதைய தாக்குதல் "துக்ககரமான விபத்து” என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேலுடன் போர் நிறுத்தத்திற்கு தயாராக இல்லை என்று அறிவித்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதல் அமெரிக்காவின் எந்தவொரு சிவப்பு கோட்டையும் தாண்டிய மிகப்பெரிய தாக்குதல் இல்லை என்று அமெரிக்காவின் பைடன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் காசாவின் ரஃபா நகரில் இஸ்ரேல் நடத்தி வரும் தரை தாக்குதல் மற்றும், கைவிடப்பட்ட மக்களின் கூடார முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த விசாரணையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா பாதுகாப்பு கவுன்சிலர் ஜான் கிர்பி, பாலஸ்தீன மக்களின் மோசமான நிலையை அமெரிக்கா கண்முடித்தனமாக திரும்பிக் கொள்ளவில்லை என்று தெரிவித்தார், ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் இஸ்ரேலுக்கான ஆயுதங்களை நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போதைய இஸ்ரேலிய தாக்குதல் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் வாக்குறுதிகளை சோதித்துள்ளது.