தயானின் ‘தலையீடுகள்’
30 வைகாசி 2024 வியாழன் 09:04 | பார்வைகள் : 1035
கலாநிதி தயான் ஜயதிலக்கவின் ‘தலையீடுகள்: தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்’ (Interventions: Selected Political Writings) நூல் வெளியீட்டு நிகழ்வு வழக்கமான நூல் வெளியீட்டு நிகழ்விலிருந்து முழுவதும் மாறுபட்டதாக அமைந்திருந்தது.
கோட்டேயில் உள்ள மார்கா கல்வி நிறுவனத்தில் கடந்த 03ஆம் திகதி நடைபெற்றிருந்த இந்த நூல் வெளியீட்டு நிகழ்வானது கருத்துருவாக்கிகள் மற்றும் துறைசார்ந்த நிபுணர்களின் சமகால மற்றும் எதிர்கால அரசியல் நிலைவரங்களை அடியொற்றியதாக அமைந்திருந்தது.
ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிவிவகார கொள்கை வடிவமைப்புக்குழுவின் முக்கியஸ்தரும், சுயாதீன எழுத்தாளருமான குசும் விஜயதிலக்க கலந்துரையாடலுக்கான நடுவராகச் செயற்பட்டார். அவர் தன்னை அறிமுகப்படுத்தும்போது, அண்மைய இரண்டு வருடங்களாக மாற்றத்தை எதிர்பார்த்து ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பணியாற்றுகின்றேன் என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் இரண்டாம் நிலை செயலாளராக பணியாற்றியவரும் சர்வதேச சட்டங்கள் மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பான துறை சார்ந்த நிபுணருமான நடாஷா குணரத்ன நூல் பற்றி அறிமுக உரையை வழங்கியதோடு ‘ஒருதலைப்பட்சமான’ உலகளாவிய சிந்தனைகள் பற்றிய கருத்துக்களை பற்றிய விடயங்கள் சிலவற்றையும் ‘தேசிய ஒற்றுமை’ சம்பந்தமாகவும் குறிப்பிட்டிருந்தார்.
குறிப்பாக, அமெரிக்காவில் ரஷ்யா, சீனா ஆகியவற்றுக்கு எதிரான ஒருதலைப்பட்சமான சிந்தனைகளும், சித்தாந்த ரீதியான நிலைப்பாடுகளும் தீவிரமாக உள்ளன. அந்த நிலைமைகள் தேசிய ஒற்றுமையை பாதிக்கவில்லை என்றும் தேசமாக குறித்த விடயத்தில் பொதுப்படையக நேர்மறையான சிந்தனைகளே உள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், சீனா, ரஷ்யா போன்ற நாடுகளும் அமெரிக்கா உட்பட மேற்கத்தேய நாடுகள் பற்றிய சிந்தனைகளும் சித்தாந்த ரீதியாக மாற்றமடையாத ஒரு சூழல் இருக்கின்றது. அதுமட்டுமன்றி இந்த நாடுகளில் அவ்விதமான சிந்தனையானது தேசப்பற்றை வலுவாக கட்டியெழுப்புவதற்கும் அடிப்படையாக உள்ளது என்றும் நடாஷா குணரத்ன கூறினார்.
இதனையடுத்து தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெஹான் பெரேரா, ‘ஒருதலைப்பட்சம்’ என்ற விடயத்தினை இலங்கையுடன் ஒப்பீடு செய்து வினாவொன்றைத் தொடுத்திருந்தார்.
“இலங்கையில் சிங்களப் பெரும்பான்மையான அரசாங்கம் சிங்கள பெரும்பான்மை மக்களை மையப்படுத்தியே தீர்மானங்களை எடுக்கின்றது. இதன் காரணமாக வடக்கு, கிழக்கு மக்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருகின்ற நிலைமை நீடிக்கின்றது. இதுவொரு தேசிய பிரச்சினையாக இன்னமும் நீடித்துக்கொண்டிருக்கிறது” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு, “இலங்கையில் ஒருதலைப்பட்சம் என்ற கருத்தியலானது எதிர்மறையான நிலைமைகளே உருவாக்கியுள்ளது. அதுமட்டுமன்றி பெரும்பான்மை சமூகத்துக்குள் அது ஒன்றுபடுவதற்கான சூழலை ஏற்படுத்தினாலும் கூட வடக்கு, கிழக்கால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றதொரு தோற்றப்பாட்டையே கட்டியெழுப்பியுள்ளது. இந்த விடயத்தினை எவ்வாறு அணுக முடியும். தீர்வு நோக்கி உரையாட முடியும்” என்று ஜெஹான் பெரேரா கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த தயான் ஜயதிலக்க, “உள்நாட்டில் ஒருதலைப்பட்சம் என்பது ஒற்றைத் துருவவாதமாக மாறியுள்ளது. லிபியா போன்ற நாடுகளில் இவ்விதமான மாற்றமே துருவப்படுத்தலை கூர்ப்படையச் செய்ததோடு மோசமான விளைவுகள் ஏற்படவும் அடிப்படைக் காரணமானது. ஆகவே அதிகாரங்கள் பகிரப்படுதல் சம்பந்தமாக கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகள் பற்றிய சிந்தனைகளை ஏற்றுக்கொள்வதுதான் பொருத்தமானதாக இருக்கும்” என்றார்.
பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க சில கேள்விகளையும் தனது கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டார். அவர், “நான் பதவியை துறந்தபோது சஜித் பிரேமதாச என்னைத் தொடர்புகொண்டார் என்னை செல்லவேண்டாம் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அந்த ஒரு மனிதர் தான் என்னை தடுத்து நிறுத்த முயற்சித்தவராக இருந்தார். அது ஒருபுறமிருக்கையில், சஜித் பிரேமதாசவிடம் அத்தியாவசியமான கண்ணியம் இருந்தபோதிலும், அவரிடத்தில் வேறு மாற்றங்களை காண முடியாதவொரு நிலைமை உள்ளது” என்று ஆரம்பித்தார்.
தொடர்ந்து “தேசிய மக்கள் சக்தியின் கொள்கை குறைபாடுகள் பற்றிய கவலையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால் தமது கொள்கை நிலைப்பாட்டை ஆடம்பரமாக முன்வைப்பவர்கள், ஆட்சிக்கு வந்ததன் பின்னர் மீண்டும் மீண்டும் அவர்களிடத்தில் நடைமுறையில் உள்ள அரசியல் தத்துவம், ஆகியவற்றை முன்வைப்பதில்லை. அவர்கள் தாம் முன்வைத்த கொள்கைகளையே மீண்டும் புறக்கணிக்கின்ற நிலைமைகளே உள்ளன” என்றும் குறிப்பிட்டார்.
“உதாரணமாக கூறுவதாக இருந்தால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற தருணத்தில் போற்றத்தக்க நீண்ட பிரகடனத்தைக் கொண்டிருந்த ‘நல்லாட்சி’ அரசாங்கத்தைப் பற்றிய எனது அனுபவம், ஏறக்குறைய அனைத்து இலங்கை அரசியல்வாதிகள் அனைவரையும் வெறுக்காமல் இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதை எனக்கு உணர்த்தியது. தேர்தலுக்காக அவர்கள் கூறும் கொள்கைகள் பற்றி பதவிக்கு வந்ததன் பின்னர் யோசிக்கிறார்களா என்றால் இல்லை. அவர்களிடத்தில் அந்தக் கொள்கைகள் பற்றி யாரும் பின்னர் கேள்விகள் எழுப்புவதும் கிடையாது” என்று சுட்டிக்காட்டினார்.
அத்தோடு கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் வெளிப்படையான தோல்விக்குப் பின்னர், தாயனின் கருத்துக்களுக்கு மாற்றாக நான் வேறு திசையில் சிந்தத்ததோடு அந்தச் சிந்தனைகளில் உறுதியாக நகர்ந்தேன், அதில் இழைக்கப்பட்ட தவறுகளுக்கு ‘மன்னிப்பு’ என்ற விடயம் பொருத்தமாகுமா என்றும் கேள்வி எழுப்பினேன்.
“2021ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பணமதிப்பு நீக்கம், அந்த ஆண்டின் இறுதியில் எனக்கு ஏற்பட்ட கெரோனாவால் எனக்கு சக்தி இல்லாமல் போனது. அடுத்த வருடத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பமானது முரண்பட்ட அரசியல் கூட்டாண்மைகளுக்கு வழிவகுத்தது, ‘அன்னே ரணசிங்க’ கூறியது போல், புலம்புவதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று எனக்கு உணர்த்தியது” என்றும் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க கூறினார்.
அவரைத் தொடர்ந்து என்னிடத்தில் சிறியதொரு கேள்வி அல்லது பரிந்துரைதான் உள்ளது என்ற பீடிகையுடன் பேராசிரியர் சரித்த ஹேரத் தனது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு ஆரம்பித்தார். அவர் பொருளாதார, வெளிவிவகார கொள்கை சம்பந்தமான கேள்விகளை தொடுப்பதற்கே முனைந்தார்.
அந்த வகையில், “சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கும் தற்போதைய ரணில்-ராஜபக்ஷ கூட்டின் கொள்கைகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை பொதுவெளியில் எதற்காக தெளிவுபடுத்தாது அமைதி காக்கும் நிலைமைகள் நீடிக்கின்றன. அதற்கான காரணம் என்ன என்பதுதான் மிகப்பெரும் கேள்வியாக உள்ளது” என்றார்.
அதுமட்டுமன்றி, ஜனாதிபதி பிரேமதாச நிலைநிறுத்திய தேசிய இறையாண்மையை அடிப்படையாகக் கொண்ட பூகோளத்துடன் ஒத்திசைவான வெளியுறவுக் கொள்கையை உருவாக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியால் இயலவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
அதற்கு தயான் ஜயதிலக்க, “கட்சிக்குள் சஜித் கொண்டிருக்கும் முக்கூட்டு தான் அவரை இலட்சியங்களை பின்பற்றவிடாமல் தடுத்து நிறுத்தியது என்று பலமாக பதிலளித்தார். அதுமட்டுமன்றி, சஜித் பிரேமதாச தன்னையொரு மாற்றுத் தலைவராக தொடர்ச்சியாக காண்பித்தாலும் அவர் முன்னெடுக்க வேண்டிய பல்வேறு கருமங்கள் தொடர்பில் இன்னமும் ஆழமான கரிசனைகளைக் கொள்ள வேண்டியுள்ளது” என்றார்.
அத்துடன் மைய-இடது வாதக் கோட்பாட்டின் தோல்விகள் பற்றியும் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டார். அதன் அடிப்படையில், “எந்தவொரு இடதுசாரி இயக்கமும், குறிப்பாக முற்போக்கான நோக்கத்தை கொண்டதொன்றாகும். இளையோரை ஈர்க்க வேண்டும் என்பதில் உந்துதலுடன் தொடர்ச்சியாக செயற்படுவதில் பின்னடைவுகள் உள்ளன.
மத்திய-இடது சாரிகளின் தோல்விகளால் இளையோர் வாக்குகளில் கணிசமான பகுதிகள் அநாதையாகிவிட்டதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. ஆனால் அவர்களுக்கு ஒரு புதிய வீடும் புதிய ஆரம்பமும் அவசியமாக உள்ளதோ தெரியவில்லை.
இலங்கையில் மத்திய-இடதுசாரிகள் இன்னும் சமூக ரீதியாக பழமைவாதமாக உள்ளனர். அதேசமயம் வலதுசாரிகள் பிற்போக்குத்தனமான போக்குகளைக் கொண்டிருந்தாலும், காஸ்மோபாலிட்டனிசத்தின் அடியையே தக்கவைத்துக் கொள்கிறார்கள்.
சமூகப்-பொருளாதார விடயத்தில் ஒற்றைக் கொள்கை பயனுள்ளதாக இருக்கும். இலங்கையின் அரசியல் சமன்பாடுகள் குறிப்பாக இடது முற்போக்கு பார்வையாளர்களுக்கு இதுபோன்ற பல வாய்ப்புகளை வழங்குகின்றன.
2008இல் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சுகாதாரப் பாதுகாப்பை பயன்படுத்தினார். சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பெர்னி சாண்டர்ஸ் வேறொரு விதமாக இயங்கினார்.
மத்திய-இடதுசாரிகள் இலங்கையில் ஒருமுற்போக்கான காரணத்தை வரையறுக்கலாம். அது சுகாதாரம், கல்வி போன்றவற்றில் நிலையானதொரு விடயப்பரப்பை வெளிப்படுத்தினால் அதிருப்தியடைந்த வாக்காளர்கள் மத்தியில் தொடர்புகளையும் ஒருமித்த கருத்தையும் உருவாக்குவதற்கு ஆரம்பமாக அமையும்” என்று சுட்டிக்காண்பித்தார்.
இதனையடுத்து கலாநிதி சரத் அமுனுகம, அணிசேராக் கொள்கையின் கடந்த கால அனுபவத்தையும், இலங்கை அக்கொள்கையை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
அவர் கூறுகையில், “இந்து, சீன முரண்பாடுகள் எழுந்தபோது பண்டாரநாயக்க அணிசேராக் கொள்கையில் உறுதியாக இருந்தார். இதனால் இந்திய, சீன முரண்பாடுகளுக்குள் அவர் பக்கம் சார்ந்து சிக்கிக்கொள்ளவில்லை. இது அக்காலத்தில் இலங்கையின் மீதான நன்மதிப்பை ஏற்படுத்தியதோடு இருதரப்புக்கும் நம்பிக்கைக்குரிய நாடாகவும் மாறியிருந்தது” என்றார்.
தற்போது “இந்து சமுத்திரம் மிகவும் கரிசனைக்குரிய பகுதியாக மாறியுள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட செல்வாக்கு மிக்க நாடுகள் தமது கடற்பயணம் பற்றிச் சிந்திக்கின்றார்கள். ஜப்பான், தென்கொரியா உள்ளிட்டவை ஆர்வமாக இருக்கின்றன. அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் எல்லை தாண்டலை தடுப்பதற்காக எல்லைப் பாதுகாப்பு விடயத்தில் ஈடுபடுகின்றன. சீனா ஆய்வுகள் மற்றும் கடற்போக்குவரத்துக்கான எதிர்பார்க்கின்றன? என்றும் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்து கருத்துக்களை முன்வைத்திருந்த தயான் ஜயதிலக்க, “அணிசேராக் கொள்கையை மீளுறுதி செய்வதைப் பார்க்கிலும் தெற்கு உலகம் (குளோபல் சௌத்) என்கிற புதிய ஆடையை அணிவது பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது. இந்த ஆடையானது தனிப்பட்ட அல்லது ஓரங்கப்பட்ட ஒரு விடயமாக இருக்காது. சர்வதேச தரப்புக்களுடன் ஒன்றிணைக்கப்பட்ட பொதுப்படைய நிலைப்பாடுகள், அடையாளங்கள், கோட்பாடுகள் உள்ளிட்ட பலவற்றைக் கொண்டதாக அமையும். இலங்கை போன்ற நாடுகள் குழுக்களாக வகைப்படும் வரையறைகளுக்குள் இருந்து வெளிவந்து பரந்துபட்ட கூட்டாண்மையை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். ஐக்கிய மக்கள் சக்தியோ, தேசிய மக்கள் சக்தியோ இந்த விடயத்தினை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உச்சரித்தது கிடையாது. ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தினை கையிலெடுத்துள்ளார்” என்றார்.
இறுதியாக, இடதுசாரிச் சிந்தனையாளரான டி.யு.குணசேகர, தயான் ஜயதிலக்க இளைஞராக இருந்தபோது அவருடன் நிகழ்த்திய முதலாவது சந்திப்பை நினைவுகூர்ந்தார்.
“பேராதனை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக விக்கிரமபாகு கருணாரத்த இருந்தபோது சர்வதேச உறவுகள் பற்றிய உரையாற்றுவதற்காக நான் சென்றிருந்தேன். உரையின் இறுதியில் உயரமான இளைஞன் ஒருவர் சரளமான வார்த்தைகளுடன் கேள்விகளைத் தொடுத்தார். உரை முடிவடைந்தவுடன் யார் அந்த இளைஞன் என்று ஆராய்ந்தேன். தேடிச் சென்று பேசினேன். அவர் தான் தயான் ஜயதிலக்க. இப்போது அரசியல் ஆய்வாளராகிவிட்டார். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.
அத்தோடு, “பண்டாரநாயக்க, ஜே.ஆரிடம் அரசாங்கத்தினை ஒப்படைக்கின்றபோது நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 24 சதவீதம் அரசாங்கத்தின் வருமானமாக இருந்தது. ராஜபக்ஷக்களின் காலத்தில் குறிப்பாக பஷில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக இருந்த காலத்தில் அந்த வருமான சதவீதம் 6ஆக மாறிருக்கின்றது. இதற்கான காரணத்தினை நான் பாராளுமன்றத்திலும் கேள்வியாக எழுப்பியிருந்தேன். ஆனால், பதில் கிடைக்கவில்லை. அதற்கு காரணம் நாட்டின் வரிக்கொள்கை தான். மேற்குலகின் சித்தாந்தத்தில் வரிக்கொள்கையை வரித்துக்கொண்டமையால் தான் இந்த பரிதாப நிலைமை ஏற்பட்டது என்பதை ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.
அதனைத் தொடர்ந்து இலங்கை, ரஷ்ய, சீன உறவுகள் சம்பந்தமான விடயங்களும், பொருளாதார மேம்பாடுகள் தொடர்பான கொள்ளைகள் பற்றியும் உரையாடல்கள் இடம்பெற்றிருந்தன. அத்துடன் தயானின் ‘தலையீடுகள்’ நூல் வெளியீடு நிறைவுக்கு வந்திருந்தாலும் மார்கா கல்வி நிறுவனத்தின் வளாகம் எங்கும் அன்று மாலை முழுவதும் நீண்ட உரையாடல்கள் தொடரத்தான் செய்தன.
நன்றி வீரகேசரி