இஸ்ரேலின் போர் நிறுத்த ஒப்பந்தம்.... ஹமாஸ் அமைப்பின் கருத்து என்ன...?
28 சித்திரை 2024 ஞாயிறு 06:07 | பார்வைகள் : 2842
பாலஸ்தீனத்தின் காசாமுனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 6 மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகின்றது.
ஹமாஸ் அமைப்பினர் குறிவைத்து நடத்தி வரும் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காசாவின் வடக்கு, மத்திய பகுதிகளில் தரைவழித் தாக்குதல் நடத்தியதுபோல் தற்போது தெற்கில் உள்ள ரபா நகரில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.
காசா மீதான தாக்குதலால் வடக்கு, மத்திய பகுதிகளில் இருந்து மக்கள் பெரும்பாலானோர் ரபா எல்லையில் தஞ்சமடைந்துஉள்ளனர். அங்கு தரைவழி தாக்குதல் நடத்துவது மிகப்பெரிய அளவில் உயிர் சேதத்தை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா, எகிப்து உள்ளிட்ட நாடுகள் எச்சரித்து உள்ளன.
ஆனால் ரபா மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தீவிரம் காட்டி வருகிறது.
இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை மீட்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில், பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாசுக்கு இதுவே கடைசி வாய்ப்பு என்று இஸ்ரேல் தெரிவித்து போர் நிறுத்த முன்மொழிவை அளித்துஉள்ளது.
இந்த நிலையில் போர் நிறுத்தம் குறித்து ஹமாஸ் தரப்பு கூறும்போது, இஸ்ரேலின் சமீபத்திய போர்நிறுத்த முன்மொழிவை பெற்றோம்.
அதற்கு பதிலைச் சமர்ப்பிப்பதற்கு முன் அதை ஆய்வு செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் நிபந்தனையை ஹமாஸ் அமைப்பு ஏற்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட போர் நிறுத்தத்தின் போது 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.