சர்ச்சையுடன் உருவாகும் 'பரதா'
28 சித்திரை 2024 ஞாயிறு 11:13 | பார்வைகள் : 1295
2021ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்ற தெலுங்கு படம் 'சினிமா பன்டி'. இப்படத்தின் இயக்குநர் பிரவீன் கந்த்ரேகுலா தற்போது அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் 'பரதா' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' படத்தில் கவனம் பெற்ற தர்ஷனா ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கோபி சுந்தர் படத்துக்கு இசையமைக்கிறார். மிருதுள் சுஜித் ஒளிப்பதிவு செய்கிறார். ஆனந்தா மீடியா சார்பில் பாக்யலட்சுமி போசா தயாரிக்கிறார்.
தெலுங்கு, தமிழில் உருவாகும் இந்த படம் பெண்கள் தலையில் அணியும் 'பரதா' பற்றியதாக உருவாகிறது. இந்தியாவில் முஸ்லிம்கள் மட்டும் அல்லாது ஹிந்து மதத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் குறிப்பாக வடநாட்டு ஹிந்து பெண்கள், பரதா அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பெண்கள் பரதா அணிவது என்பதே அவர்களை அடிமையாக சித்தரிக்க ஆண்கள் கொண்டு வந்தது என்பார்கள். இந்த பிரச்னையை மையமாக வைத்து இந்த படம் தயாராகுவதாக கூறப்படுகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக்கும் அதனையே தெளிவுபடுத்துகிறது.
“முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய கதை மற்றும் கதாபாத்திரத்துடன் உங்களை சந்திக்கிறேன். இப்படம் உங்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்பதை உறுதியளிக்கிறேன்” என அனுபமா தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.