அஜித் படங்களில் 20 ஆண்டுகளாக வடிவேலு தலைகாட்டாதது ஏன்?
28 சித்திரை 2024 ஞாயிறு 11:19 | பார்வைகள் : 1908
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். எந்தவித சினிமா பின்புலமும் இன்றி சினிமாவில் முன்னுக்கு வந்தவர் தான் அஜித். தெலுங்கில் வெளிவந்த பிரேம புஷ்தகம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் அஜித். இதையடுத்து அமராவதி படம் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார் அஜித். எஸ்.பி.பி மகன் சரணும், அஜித்தும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், அஜித்தை அமராவதி படத்தில் ஹீரோவாக நடிக்க சிபாரிசு செய்ததே பாடகர் எஸ்.பி.பி தான்.
அமராவதியில் தொடங்கிய நடிகர் அஜித்தின் தமிழ் திரையுலக பயணம் பல்வேறு வெற்றி தோல்விகளை கண்டுள்ளது. இருப்பினும் விடாமுயற்சியால் விஸ்வரூப வெற்றி கண்ட அஜித் இன்று முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பதற்கு முக்கிய காரணம் அவரது ரசிகர்கள் தான். தமிழ்நாட்டில் அஜித்துக்கென மிகப்பெரிய ரசிகர் படையே உள்ளது. அவர்களை திருப்திபடுத்தும் வகையிலான கதைகளை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அஜித்.
நடிகர் அஜித்தும், நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் 2002-ம் ஆண்டுக்கு முன்பு வரை தொடர்ச்சியாக படங்களில் இணைந்து நடித்து வந்தனர். ஆனால் கடந்த 2002-ம் ஆண்டு எழில் இயக்கத்தில் வெளிவந்த ராஜா படம் தான் அஜித்தும் வடிவேலுவும் கடைசியாக இணைந்து நடித்த படம். அப்படத்தில் அவர்கள் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் வேறலெவலில் ஹிட்டாகின. ஆனால் அப்படத்துக்கு பின்னர் அஜித்தும் வடிவேலுவும் கூட்டணி சேர்ந்து நடிக்கவே இல்லை. 20 ஆண்டுகளாக இந்த கூட்டணி மீண்டும் இணையாததற்கு ராஜா படத்தின் போது ஏற்பட்ட மோதல் தான் காரணம் என கூறப்படுகிறது.
ராஜா படத்தின் கதைப்படி அஜித்தின் தாய்மாமாவாக வடிவேலு நடித்திருப்பார். அந்த கேரக்டரின் படி அவர் அஜித்தை படம் முழுக்க போடா வாடா என்று தான் அழைப்பார். அதே பாணியை வடிவேலு ஷூட்டிங் முடிந்த பின்னும் கடைபிடித்தது அஜித்துக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். இதனால் இயக்குனரிடம் இதுபற்றி அஜித் தனது அதிருப்தியை கூறி இருக்கிறார். இயக்குனரும் வடிவேலுவிடம் இந்த விஷயத்தை கூற, அவர் அதற்கெல்லாம் செவிசாய்க்காமல் மீண்டும் அஜித்தை மரியாதை இன்றி அழைத்திருக்கிறார்.
இதனால் அப்படத்தின் ஷூட்டிங் முடியும் வரை வடிவேலு உடன் பேச்சைக் குறைத்துக் கொண்ட அஜித், இனி உன் சாவகாசமே வேண்டாம் என்றும் முடிவெடுத்தாராம். அப்படத்துக்கு பின்னர் தன்னிடம் கதை சொல்ல வரும் டைரக்டர்கள் வடிவேலு பற்றி பேச்சை எடுத்தால் அவர்களுக்கு நோ சொல்லி திருப்பி அனுப்பிவிடுவாராம் அஜித். ராஜா படத்தின் போது நடந்த இந்த பிரச்சனையால் தான் அஜித் - வடிவேலு காம்போ கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இணைந்து பணியாற்றவே இல்லை என கூறப்படுகிறது.