கனடாவில் மாணவர்களுக்கு அமுல்படுத்தப்பட்ட புதிய கட்டுப்பாடுகள்
29 சித்திரை 2024 திங்கள் 09:31 | பார்வைகள் : 2349
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் இனி மாணவர்கள் பாடசாலைகளில் தொலைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி தடை மட்டுமின்றி இனி பாடசாலை வளாகத்தில் e-cigarette பயன்பாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் மழலையர் பள்ளி முதல் தரம் 6 வரை உள்ள மாணவர்கள் தங்கள் அலைபேசிகளை Silent mode-ல் வைத்திருக்கும்படி கோரப்படுவார்கள். மட்டுமின்றி, ஆசிரியர்களின் அனுமதி இல்லாமல் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தரம் 7 முதல் 12 வரையிலான மாணவர்கள் தங்கள் அலைபேசிகளை வகுப்பு வேளைகளில் மட்டும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறும் மாணவர்களிடம் இருந்து அலைபேசிகள் பறிமுதல் செய்யப்படுவதுடன், பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்படும்.
மேலும், பாடசாலையில் பயன்படுத்தப்படும் இணையத்தில் இனி சமூக ஊடகங்கள் அனைத்தும் நீக்கப்படும். அத்துடன் புகைப்படங்கள் அல்லது காணொளிகளை மாணவர்கள் பதிவு செய்வதும் உரிய அனுமதியின்றி அதை பகிர்வதும் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இதை எவ்வாறு கண்காணிப்பார்கள் அல்லது கட்டுப்படுத்துவார்கள் என்பது தொடர்பில் விளக்கப்படவில்லை. செப்டம்பர் முதல் மாணவர்கள் பாடசாலை வளாகத்தில் e-cigarette பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆசிரியர்களால் கண்டெடுக்கப்பட்டால் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். மட்டுமின்றி, ஒன்ராறியோ அரசாங்கம் சார்பில், மாணவர்களின் e-cigarette பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் சுமார் 30 மில்லியன் டொலர் செலவில் பாடசாலைகளில் வேப் டிடெக்டர்கள் மற்றும் பிற பாதுகாப்பு மேம்படுத்தல்களை நிறுவ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.