தேவதை
29 சித்திரை 2024 திங்கள் 15:18 | பார்வைகள் : 938
மாலைப்பொழுது வானத்துக்கு மஞ்சள் கலந்த இளஞ்சிவப்பு நிறத்தைக் கொடுத்து திரும்ப வாங்கிய வண்ணம் கதிரவன் மேற்குத் தொடர்ச்சி மலைக்குள் புகுந்து கொண்டிருக்கிறது.
ஆறாம் வகுப்புப் படிக்கும் கணேஷ் பள்ளியில் இருந்து வந்தவுடன் புத்தகப்பையை இறக்கிவிட்டு அடுப்படியில் கண்ணாடி டப்பாவில் போட்டு வைத்திருந்த பொரிகடலையை இரண்டு வாய் அள்ளிப்போட்டுக் கொண்டு தெருவின் முற்றத்தில் விளையாடப் போய்விட்டான்.
இருள் ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது.
“ஏய்…கணேஷ்! விளையாடியது போதும், வந்து படிடா” என்று அம்மா கூவ, ஓடிவந்தான்.
“போய் கை, கால் அலம்பிட்டு மாடி மேலே போயி படி”
கணேஷ் நெடுநேரம் மும்முரமாகப் படித்துக்கொண்டிருந்தான்.
“கணேஷ் நேரமாயிடுச்சு. சாப்பிட்டு தாத்தா கூடப் போய்ப்படு. காலையில் படிக்கலாம்” என்றாள் அம்மா.
சாப்பிட்டுவிட்டு தாத்தாவுடன் படுத்தான். தூக்கம் வரவில்லை. “தாத்தா ஒரு கதை சொல்லுங்க தாத்தா” என்றான்.
பேரக்குழந்தை கேட்கிறதே என்று தாத்தாவும் கதை கூற ஆரம்பித்தார்:
ஒரு ஊர்ல ஒரு ராஜா. அவரு ஆட்சியில மாதம் மும்மாரி பொழிந்தது. அந்த ராஜாவுக்கு மீனான்னு ஒரு ராஜகுமாரி. தேவதை போல கொள்ளை அழகு. குருகுலத்துல நல்லா பாடம் படிச்சும் வீர, தீர வித்தைகளை கத்துகிட்டும் இருந்தது. அழகும் அறிவும் இணைந்த பொக்கிஷம் என்று நாட்டு மக்கள் இளவரசியைப் புகழ்ந்தார்கள்.
மீனாவுக்காகவே வனம் போன்ற அழகுடன் அரண்மனைக்குப் பக்கத்தில் நந்தவனம் அமைத்துக் கொடுத்தார் ராஜா. மாதம் ஒரு தடவை அரண்மனையை விட்டு வெளியே வரும் மீனா, நந்தவனம் வந்து உலவிவிட்டுப் போவாள்.
அந்த ஊர் மக்கள் எல்லாம் மகிழ்ச்சியா இருக்கிற நேரத்துல அந்த ஊருக்குள்ள ஒரு வேதாளம் புகுந்தது. அந்த வேதாளம் ராத்திரி நேரம் ஊருக்குள் வந்து கல்யாணம் ஆகாத பொண்ணுங்க யாரு வந்தாலும் அடிச்சி ரத்தம் குடிச்சு கொன்னு போட்டுடும். கல்யாணம் ஆகாத பெண்களை விட்டுட்டு வேற யாரையும் தொடுறதும் இல்லை. கண்ணுக்குத் தட்டுப்படறதும் இல்லை.
இந்த விஷயம் ராஜாவுக்குத் தெரிஞ்சி, வேதாளத்தைக் கொல்ல ஆட்களை அனுப்பினார். ஆனாலும் அதைக் கொல்ல முடியவில்லை. ராஜா குழம்பிப் போய் சோர்வாக இருந்தார்.
ராஜாவின் மனக்கவலையை மீனா அறிந்தாள்.
ஒரு நாள் ராஜகுமாரி ரொம்ப தைரியமாக ராத்திரி நேரம் அரண்மனைப் பின்பக்க வாசல் வழியா வேதாளத்தைப் பார்க்க கிளம்பினாள். கொஞ்சதூரம் போயி ஊரைக் கடந்ததும் வெள்ளிக்கொலுசை மாட்டி “ஜலக் ஜலக்” -னு சத்தம் வர்ற மாதிரி நடக்க ஆரம்பிச்சா.
உடனே பக்கத்துல இருக்குற ஒரு மரத்துல இருந்த அந்த வேதாளம் பாய்ந்து வந்து நின்றது. ராஜகுமாரி மீனாவுக்கு அதைப் பார்த்ததும் பயமாகிவிட்டது. இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு வேதாளத்தைப் பார்க்காத மாதிரி உட்கார்ந்திருந்தாள்.
அந்த நேரம் ராஜகுமாரியின் கண்ணைப் பார்த்த வேதாளம் மின்னல் தாக்கின மாதிரி தடுமாறியது. அதே வேளையில் ராஜகு‘ரி சுதாரித்தபடி, தனது இடுப்பில் இருந்த கத்தியைத் தூக்கி வேதாளத்தின் நெஞ்சில் எறிந்தாள். வேதாளத்தின் நெஞ்சு பிளந்து ரத்தம் பீறிட்டது.
வேதாளம் சாகப்போற நேரத்துல ராஜகுமாரியை கூப்பிட்டுச் சொன்னது, “தேவியாரே! நான் வேதாளம் இல்லை. பக்கத்து நாட்டு அரக்க வம்சத்தவன். உங்கள் ஊரில் செல்வச் செழிப்போடு மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதை சீர்குலைக்க எங்கள் ராஜாவால் வேதாளம் வேஷம் போட்டு அனுப்பப்பட்டவன் நான்” என்று சொன்னான். இதைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவன் உயிர் பிரிந்தது.
நாடே ராஜகுமாரியைப் புகழ்ந்தது. வீரத்திருமகள்னு அவளை முடிசூட்டி இளவரசி ஆக்கினார்கள்.
“என்னடா பேரப்புள்ள அந்த ராஜகுமாரி மாதிரி நீயும் நல்லா படிச்சி வீரமா, நல்ல தைரியத்தோடு, எதுக்கும் பயப்படாம இருக்கணும் என்ன!” என்று தாத்தா கேட்க, “கொர்…கொர்” என்ற குறட்டையுடன் கணேஷ் தூங்கிக் கொண்டிருந்தான்.
விடியற்காலை ஐந்து மணிக்கு படிப்பதற்காக கணேஷை எழுப்பி விட்டார். கணேஷூம் எழுந்து முகம் கழுவிவிட்டு வந்து புத்தகத்தை எடுத்தவாறு தாத்தாவிடம் கேட்டான்:
“என்ன தாத்தா! ராத்திரி நீங்க ஏதோ ராஜா, ராஜகுமாரி, வேதாளம்னு சொன்னீங்க. ஆனா எனக்கு முழுக்கதையும் ஏன் சொல்லலை?” என்று கேட்டான்.
தாத்தா கலகலவென்று சிரித்து விட்டார்.