பிரித்தானியா செல்ல முயன்ற இலங்கை தமிழ் பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

29 சித்திரை 2024 திங்கள் 16:26 | பார்வைகள் : 3739
சட்டவிரோதமான முறையில் சிறுவன் ஒருவனை இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லும் முயற்சியை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.
இந்த கடத்தல் தொடர்பில் இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் எல்லை கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது மகனின் தகவல்களைப் பயன்படுத்தி போலி ஆவணங்களை தயாரித்து வேறு ஒரு பெண்ணைப் பயன்படுத்தி குறித்த சிறுவனை கடந்த 26ஆம் திகதி இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
17 வயதுடைய சிறுவனே இவ்வாறு கடத்தப்படவிருந்ததாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் குறித்த சிறுவனை அழைத்துக் கொண்டு சம்பவ தினத்தன்று மதியம் 1.30 மணியளவில் ஶ்ரீலங்கன் விமானத்தில் லண்டன் செல்வதற்காக கட்டுநாயக்கவிற்கு வந்துள்ளார்.
இதன்போது, விமான சேவை சாளர அதிகாரி ஒருவருக்கு, ஆவணங்கள் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இருவரும் விமான நிலைய குடிவரவு குடியகல்வு திணைக்கள எல்லை கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது, மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப சோதனையில் குறித்த ஆவணங்கள் போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
பின்னர், சிறுவனிடம் விசாரித்ததில், போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.
விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் தனது உண்மையான தாய் காத்திருப்பதாக சிறுவன் மேலும் கூறியுள்ளான்.
அதன்படி, திணைக்களத்தினர் அந்த பெண்ணையும் தங்கள் காவலில் எடுத்துக்கொண்டனர்.
பின்னர் குடிவரவு குடியகல்வு திணைக்கள எல்லை கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகளிடம் சந்தேகநபர்களை ஒப்படைத்துள்ளனர்.