நியூயார்க் நகரில் பிரபல பல்கலைக்கழகம் மாணவர்கள் இடைநீக்கம்
30 சித்திரை 2024 செவ்வாய் 07:40 | பார்வைகள் : 3647
பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை நியூயார்க் நகரின் கொலம்பியா பல்கலைக்கழகம் இடைநீக்கம் செய்ய ஆரம்பித்துள்ளது.
பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து கலைந்து செல்ல விடுக்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்த நிலையில் நிர்வாகம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த 2 வார காலமாக பல்கலைக்கழக வளாகத்தில் குடில் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்களுக்கு காலக்கெடு விடுக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் ஒழுங்கு நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்றும் திங்களன்று கல்லூரி நிர்வாகத்தினரால் எச்சரிக்கப்பட்டனர்.
ஆனால் காலக்கெடு முடிவடைந்த பின்னரும் டசின் கணக்கான மாணவர்கள், பல்கலை வளாகத்தில் திரண்டனர்.
இதனிடையே டெக்சாஸில் ஆஸ்டின் பகுதியில் அமைந்துள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில்,
இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் டசின் கணக்கான மாணவர்களை பொலிசார் கைது செய்ததுடன் அவர்களது குடில்களையும் அகற்றினர்.
திங்களன்று ஆஸ்டின் வளாகத்தில் சுமார் 50 மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா முழுவதும் பல்வேறு பல்கலைக்கழக வளாகங்களில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் கடந்த சில வாரங்களாக தீயாக பரவி வருகிறது.
கொலம்பியா பல்கலைக்கழகத்தை பொறுத்தமட்டில் இளங்கலை பட்டதாரிகளுக்கான வருடாந்திர கல்வி மற்றும் இதர கட்டணங்கள் சுமார் 90,000 டொலர் என்றே கூறப்படுகிறது.
அமெரிக்காவில் கல்வி கட்டணம் அதிகம் வசூலிக்கும் பல்கலைக்கழகங்களில் ஒன்று கொலம்பியா.
இந்நிலையில், அதன் வளாகம் காஸா போர் மற்றும் இஸ்ரேலுக்கு அமெரிக்க ஆதரவு தொடர்பில் நாட்டின் விவாதத்தின் மையப் புள்ளியாக மாறியுள்ளது.
மட்டுமின்றி இந்த ஆர்ப்பாட்டங்கள் யூத மாணவர்களை ஆபத்தில் சிக்க வைக்கும் ஆபத்து உள்ளது என்றும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் 18 ஆம் திகதி, வளாகத்தின் மையத்தில் இருந்த பாலஸ்தீனிய ஆதரவு முகாமை பொலிசார் சோதனை செய்து 100க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.