அரசியலமைப்பு ஏழைகளின் ஆன்மா: ராகுல் பேச்சு
30 சித்திரை 2024 செவ்வாய் 10:19 | பார்வைகள் : 1925
அரசியலமைப்பு சட்டம் தான் ஏழைகளின் ஆன்மா என காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: தேர்தலில் வெற்றி பெற்றால் அரசியலமைப்பு சட்டம் மாற்றப்படும் என பா.ஜ., தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் நான் உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். அரசியலமைப்பு சட்டம் தான் ஏழைகளின் ஆன்மா எந்த சக்தியாலும் அதை அழிக்க முடியாது.
இண்டியா கூட்டணி
இன்று நாட்டில் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே சண்டை நடந்து வருகிறது. ஒருபுறம், அரசியலமைப்பை சட்டத்தை காப்பாற்றும் பணியில் காங்கிரஸ் கட்சி மற்றும் இண்டியா கூட்டணி ஈடுபட்டுள்ளது. இன்னொரு பக்கம், அரசியலமைப்பு சட்டத்தை பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அழிக்க முயற்சி செய்து வருகிறது.
தனியார்மயம்
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களின் பட்டியலை நாங்கள் தயார் செய்து, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண்ணுக்கு, ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்குவோம். காங்கிரசின் மகாலட்சுமி திட்டம் நாட்டில் பெண்களை லட்சாதிபதியாக மாற்றும். பா.ஜ., இடஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை என்றால், ஏன் ரயில்வே மற்றும் பிற பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குகிறது. இவ்வாறு ராகுல் பேசினார்.