பா.ஜ., வேட்பாளரை புகழ்ந்ததால் திரிணமுல் காங்.,பொதுச்செயலர் பதவி பறிபோனது
2 வைகாசி 2024 வியாழன் 00:42 | பார்வைகள் : 1445
மேற்கு வங்க பா.ஜ., லோக்சபா வேட்பாளரை புகழ்ந்து பேசியதற்காக, திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த குணால் கோஷின் பொதுச்செயலர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இக்கட்சியின் மாநில பொதுச்செயலர் மற்றும் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் குணால் கோஷ். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதற்காக ஏற்கனவே இவர் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், மேற்கு வங்கத்தின் கோல்கட்டா வடக்கு லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் தபஸ் ரே உடன், நிகழ்ச்சி ஒன்றில் குணால் கோஷ் பங்கேற்றார். மேலும், அவரை புகழ்ந்து தள்ளினார். இவ்வாறு பேசிவிட்டு இறங்கிய அடுத்த சில மணி நேரங்களில் அவரை, கட்சியின் பொதுச்செயலர் பதவியில் இருந்து நீக்கி உள்ளனர்.
இது குறித்து திரிணமுல் காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில், 'குணால் கோஷ் வெளிப்படுத்திய கருத்துக்கள், கட்சியின் கொள்கைக்கு முரணாக உள்ளன. எனவே, அவர் பொதுச்செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்' என கூறப்பட்டுள்ளது.