மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க மாட்டோம் என எழுதி கொடுக்க முடியுமா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி சவால்
2 வைகாசி 2024 வியாழன் 00:45 | பார்வைகள் : 1749
மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க மாட்டோம் என எழுதி கொடுக்கத் தயாரா?,” என, காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சவால் விடுத்துள்ளார்.
குஜராத்தில் உள்ள 26 லோக்சபா தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் 7ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து, அங்கு அரசியல் கட்சியினர் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இங்கு பனாஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தீசா நகரில், பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஓட்டு சேகரித்தார். லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு பின் முதன்முறையாக குஜராத் பிரசாரத்தில் பங்கேற்ற அவர் பேசியதாவது:
பட்டியலின, பழங்குடியின மற்றும் ஓ.பி.சி., மக்களுக்கு அரசியல் சாசனத்தில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதை யாரும் பறிக்க முடியாது. பா.ஜ., இருக்கும்வரை இட ஒதுக்கீடு பாதுகாக்கப்படும். நான் உயிருடன் இருக்கும் வரை மத அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற விளையாட்டை விளையாட விடமாட்டேன்.
காங்கிரசின் இளவரசருக்கும், அவரது கட்சிக்கும் நான் சவால் விட விரும்புகிறேன். அரசியல் அமைப்புடன் விளையாட மாட்டோம், மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க மாட்டோம் என எழுத்துப்பூர்வமாக உங்களால் அறிவிக்க முடியுமா? எஸ்.சி., - எஸ்.டி., - ஓ.பி.சி.,க்கான இட ஒதுக்கீட்டை ஒருபோதும் தொட மாட்டோம் என உறுதியாக சொல்ல முடியுமா? நிச்சயம் அவர்களால் அவ்வாறு நிச்சயமாக சொல்ல முடியாது.
ஏனென்றால், மதத்தின் பெயரால் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்குவதுதான் காங்கிரசின் எண்ணம். எந்த தொலைநோக்குப் பார்வையும் அக்கட்சியினருக்கு கிடையாது. நாட்டு மக்களுக்கு சேவை செய்வதற்கான ஆர்வமும் அக்கட்சியினரிடம் இல்லை. ஒட்டுமொத்த மோடி மற்றும் ஓ.பி.சி., சமூகத்தினரையும் திருடர்கள் என்று அழைத்தார் காங்கிரஸ் இளவரசர். தற்போது, பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீடு முடிவுக்கு வரும் என்ற புதிய பொய்யை காங்கிரசும், இண்டியா கூட்டணி கட்சியினரும் பரப்பி வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.