Paristamil Navigation Paristamil advert login

உங்கள் காதல் ப்ரேக் அப் ஆகாமல் இருக்க 5 வழிகள்

உங்கள் காதல் ப்ரேக் அப் ஆகாமல் இருக்க 5 வழிகள்

18 ஆவணி 2023 வெள்ளி 10:42 | பார்வைகள் : 3489


காதல் இந்த வார்த்தை சிலருக்கு மந்திரம். காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் தகரம் கூட தங்கமாகுமே என்பதெல்லாம் காதலைப் பொருத்தவரையில் நூறு சதவிகிதத்திற்கும் மேலான உண்மை. அந்தக் காலத்துக் காதல் எஃகு போல உறுதியானது இன்றைய காதல் மேலோட்டமானது என்று சிலர் மலரும் நினைவுகள் பகிர்வதுடன் இந்தக் காலத்து காதலை டேமேஜ் செய்வார்கள். 

ஆனால் காதல் எக்காலத்திற்கும் காதல் மட்டுமே. காதலர்கள் வேண்டுமானால் நிறம் குணம் மாறலாம்.

எல்லா உறவுகளிலும் மேடு பள்ளங்கள் இருக்கவே செய்யும். எல்லா உறவுகளும் எப்போதும் நம் வாழ்க்கையின் இறுதிவரை தொடர்வதில்லை. ஆனால் எந்த ஆழமான காரணங்களும் இல்லாமல், சில சமயம் நாம் மிகவும் நேசித்தவர் நம்மை விட்டு ஒரேடியாக விலகிச் செல்ல முடிவெடுத்து விடலாம். அல்லது அத்தகைய முடிவுக்கு நாமே கூட காரணமாக இருக்கலாம். ஆனால் பிரிவின் அந்தக் கடைசி நொடியில்தான் அவரை எந்தளவு நாம் நேசித்திருக்கிறோம் என்று நாம் உணர்வோம்.

கடைசி முயற்சியாக அவர் நம்மை விட்டு ஒரேடியாக விலகாமல் இருக்க என்ன செய்யலாம். அந்தக் காதலை அல்லது அந்த நேசத்துக்குரியவரை எப்படி மீட்டெடுக்கலாம்? உங்கள் ஆழ் மனத்தில் காதலின் தீபத்தை ஒருமுறை ஏற்றிவிட்டால் அது ஒரு போதும் அணையாது என நீங்கள் உணர்ந்துள்ளீர்களா? எதாவது பிரச்னை ஏற்பட்டு அணைந்து போனால்? அணையாமல் பாதுகாப்பது எப்படி என்று சில வழிமுறைகள் உள்ளன. அவற்றுள் சிலவற்றைப் பார்க்கலாம்.

1. மனம் விட்டுப் பேசுங்கள்

நேசிப்பவரிடையே பிரச்னை ஏற்பட்டிருந்தால் அதன் காரணத்தை நன்றாக யோசித்து அதை சரி செய்ய இருவரும் சற்று நேரம் ஒதுக்குங்கள். அமைதியாக சண்டை போடும் நோக்கத்தை எல்லாம் ஓரமாக வைத்துவிட்டு, மனம் விட்டு பேசுங்கள். பேசித் தீர்க்க முடியாத பிரச்னைகள் இந்த உலகில் எதுவுமில்லை. அதற்கான மனம் உங்களுக்கு இருக்க வேண்டும். அல்லது உங்களால் எல்லாவற்றையும் பேச முடியவில்லை எனில், மனத்தில் நினைத்தவற்றை கடிதமாக உங்கள் கைப்பட எழுதுங்கள்.

இருவருக்குள் ஏதோ சரியில்லை, அவ்வுறவு முறிந்துவிடும் போலுள்ளது என்று நீங்கள் நினைக்கத் தொடங்கினால் உங்கள் துணையிடம் அதுப் பற்றி வெளிப்படையாக பேசுங்கள். அதற்கான நேரத்தை இருவரும் ஒதுக்கி மனம் திறந்து உங்கள் பிரியத்தை அவரைப் பிரிய விரும்பவில்லை என சொல்லுங்கள். உண்மையில் அது அவர் மனத்தில் உறைக்கும் விதமாக இருந்தால் நிச்சயம் இந்தப் பிரச்னையை நீங்கள் இருவரும் கடந்து செல்வீர்கள்.

2. சிறிய இடைவேளை தேவை

ஒரு சிறிய இடைவெளியை சில நாட்கள் இருவரும் எடுத்துக் கொள்ளுங்கள். அந்தச் சமயத்தில் நீங்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க வேண்டாம். ஆனால் எது பிசகியது, எந்த விஷயத்தில் சறுக்கினோம், அல்லது எது மற்றவரை காயப்படுத்திவிட்டது என யோசித்து அதை தவிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள். அடுத்து என்ன செய்யலாம் என்று நிதானமாக சிந்தியுங்கள். அது உங்கள் உறவை அதன் உன்னதத்தை உங்களுக்குள் உரத்துச் சொல்லும்.

உங்களால் தொடர்ந்து இத்தகைய யோசனைகளுக்குள் இருக்க முடியவில்லை என்றால் நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் உங்கள் பிரச்னையை எடுத்துச் சொல்லுங்கள். அவர்கள் உங்களுக்காக யோசித்து நல்ல தீர்வை சொல்வார்கள்.

3. குற்றம் சுமத்தாதீர்கள்

உன்னால தான் இப்படி ஆச்சு, நீங்க தான் சரியில்லை, என்று ஒருவர் மீது மற்றவர் குற்றம் சுமத்தாதீர்கள். உண்மையில் யார் மீது தவறு இருந்தாலும் அதை மன்னிக்கும் மனப்பக்குவத்தை இருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். காலம் முழுவதும் அந்த உறவு நீடிக்க வேண்டும் எனில் மன்னிக்கும் பண்பு அவசியம். பேசும் போது, குத்திக் காட்டுவது, அல்லது பழி சொல்லும் விதத்தில் இல்லாமல் ஒருவருக்கு மற்றவர் மீது இருக்கும் சங்கடங்களை அல்லது பிடிக்காத விஷயங்களை மென்மையாக எடுத்துக் கூறுங்கள்.

உதாரணமாக உங்கள் துணை எப்போதும் ஃபோனில் பேசிக் கொண்டும், நீங்கள் சந்திக்கும் சமயத்தில் உங்களை விட வேறொரு விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக நீங்கள் உணர்ந்தீர்கள் எனில் அதை அவர்களிடம் மென்மையாக எடுத்துச் சொல்லுங்கள். அதுவே பெரிய சண்டையாகி இந்தப் பிரிவு ஏற்பட்டிருந்தால், எப்படி இந்தப் பிரச்னைகளிலிருந்து மீண்டு வரலாம் என்று சில வழிமுறைகளையும் கோடிட்டு காட்டுங்கள். நமக்கானவர்கள் செய்த சிறிய பெரிய தவறுகளை எல்லாம் மன்னிக்க மட்டுமல்ல, மறக்கவும் பழகுங்கள்.

4. குடும்பநல ஆலோகர்களை அணுகுங்கள்

உங்கள் வரையறைக்குள் பிரச்னையைத் தீர்க்க முடியவில்லை எனில் தேவைப்பட்டால் அதற்கான கவுன்சிலர்களை அணுகுங்கள். சில தீர்க்க முடியாத உளவியல் சிக்கல்களையும் மன அழுத்தப் பிரச்னைகளையும் அதற்குரிய ஆலோசகர்களிடம் வெளிப்படையாக மனம் திறந்து பேசும் போது தெளிவு கிடைக்கும்.

தேவைப்படும் எனில் உளவியல் மருத்துவர்களின் உதவியையும் நாடலாம். பிரச்னையின் வேரினை அவர்கள் கண்டறிந்து உங்களுக்கு பரிந்துரை செய்பவற்றை நீங்கள் கடைப்பிடித்தால் போதும். படிப்படியாக உங்கள் பிரச்னை எதுவாக இருந்தாலும் சரி அடையும்.

5. அடிக்கடி சந்தித்துப் பேசுங்கள்

Out of sight, out of mind என்று சொல்வார்கள். உங்கள் கண் பார்வையில் இல்லாத எதுவொன்றையும் உங்கள் மனது எளிதில் மறந்துவிடும். நீங்கள் உங்கள் பிரச்னைகளை பேசி தீர்க்கவும் உங்கள் உறவை முன்பு போல் மகிழ்ச்சி உடையதாகவுமாக்க அடிக்கடி ஒருவரை ஒருவர் சந்திப்பது அவசியம்.

முதல் முதலில் சந்தித்துப் பேசியது, முதல் முத்தம், முதல் அணைப்பு என ஒவ்வொன்றையும் நினைத்து புத்தக் புதியதாக நினைத்து உங்கள் உறவை மீண்டும் தொடருங்கள். காதலர் தினம், பிறந்த தினம், பண்டிகை போன்ற நாட்களில் அதிக நேரம் செலவழித்து உங்கள் எதிர்காலம் பற்றி நிறைய பேசுங்கள்.

இறுதியாக இது எதுவுமே நடைபெறவில்லை அல்லது என்ன செய்தால் இந்த உறவு உடைந்த கண்ணாடிதான் ஒட்டாது என நீங்கள் நினைத்தீர்கள் எனில் உங்கள் மனத்தை தேற்றிக் கொண்டு அப்பிரிவை ஏற்றுக் கொள்ளுங்கள். எக்காரணத்தை கொண்டும் அன்பை யாசிக்காதீர்கள். உங்கள் சுயத்தை அதிகளவில் நீங்கள் இழக்க நேரும் உறவுகளிலும் ஒரு வழிப் பாதை போல நீங்கள் மட்டுமே அன்பு செலுத்திக் கொண்டு இருக்கிறீர்கள், உங்கள் துணை சிறிதும் அதை மதிப்பவராக இல்லாவிட்டால் அதிலிருந்து நீங்கள் விடுபடுவதே மேல். உங்கள் முடிவு எதுவாக இருந்தாலும் நன்கு யோசித்து எடுப்பது நல்லது. வாழ்க்கை வாழ்வதற்கே! அழுது புலம்பி வீழ்வதற்கு இல்லை என்பதை உணர்ந்து உற்சாகமாக உங்களை முன்னெடுத்துச் செல்லுங்கள். காதலை விட வாழ்க்கை பெரிது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்