ஜி.எஸ்.டி.,யில் தவறான தகவல் தரும் திராவிட மாடல் அரசு
2 வைகாசி 2024 வியாழன் 00:46 | பார்வைகள் : 2353
ஜி.எஸ்.டி., வந்த பின், தமிழகத்தின் வருவாய் இரட்டிப்பாகியுள்ளது. ஆனால், வருவாய் குறைந்து விட்டதாக, திராவிட மாடல் அரசு, தவறான தகவலை தெரிவிக்கிறது,'' என, ஆடிட்டர் ஜி.சேகர் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலாகும் முன், 'வாட்' என்ற மதிப்பு கூட்டு வரி இருந்தது. தமிழகத்திற்கு, 2012 - 13ல் மதிப்பு கூட்டு வரியாக, 25,041 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.
கடந்த, 2013 - 14ல் மதிப்பு கூட்டு வரியாக, 25,875 கோடி ரூபாய்; 14 - 15ல், 27,783 கோடி ரூபாய்; 15 - 16ல், 29,786 கோடி ரூபாய்; 16 - 17ல், 31,304 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.
கடந்த, 2017 ஜூலை, 1ல் ஜி.எஸ்.டி., வரி அமல்படுத்தப்பட்டது. அதில், பெட்ரோல், டீசல், மது வகைகள் இடம்பெறவில்லை. அந்த ஆண்டில், ஒன்பது மாதங்களில் ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்ட பொருட்களில் இருந்து, 24,907 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., வருவாய் கிடைத்தது.
ஜி.எஸ்.டி., அமலாவதற்கு முந்தைய மூன்று மாதங்களில் மதிப்பு கூட்டு வரியாக, 7,359 கோடி ரூபாய் கிடைத்தது. எனவே, 2017 - 18ல் மொத்தம், 32,266 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. ஜி.எஸ்.டி., வாயிலாக, 2018 - 19ல், 41,767 கோடி ரூபாய்; 19 - 20ல், 41,369 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.
கொரோனா ஊரடங்கால், 2020 - 21ல் ஜி.எஸ்.டி., வருவாய், 37,910 கோடி ரூபாயாக குறைந்தது.
கடந்த, 2021 - 22ல், ஜி.எஸ்.டி., வாயிலாக, 48,916 கோடி ரூபாயும்; 2022 - 23ல், 58,194 கோடி ரூபாயும் வருவாய் கிடைத்தது. இது, 2023 - 24ல், 63,000 கோடி ரூபாயை தாண்டி விடும்.
ஜி.எஸ்.டி., அமலுக்கு பின் தமிழகத்தின் வருவாய் இரட்டிப்பாகியுள்ளது. ஆனால், வருவாய் குறைந்து விட்டது என்ற தவறான தகவலை தெரிவித்து, திராவிட மாடல் அரசு, மக்களை திசை திருப்புகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.