Paristamil Navigation Paristamil advert login

பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்

பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்

2 வைகாசி 2024 வியாழன் 05:27 | பார்வைகள் : 2243


தமிழ்த் திரையுலகில் தன் தேனினும் இனிய குரலால் பல சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்த பின்னணிப் பாடகி உமா ரமணன் (69) காலமானார்

பின்னணி பாடகி உமா ரமனண் சென்னை அடையாறு காந்தி நகரில் உள்ள இல்லத்தில் கணவருடன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்றிரவு உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 69.

உமா ரமணன் தமிழில் பல நூறு பாடல்களைப் பாடி ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொண்டவர். முதல் வாய்ப்பு இந்திப் படத்தில் 1977-ல் அமைந்தாலும், அவருக்குத் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது இளையராஜாவின் இசையில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நிழல்கள் திரைப்படமே…

நிழல்கள் படத்தில் “பூங்கதவே தாழ்திறவாய்” பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். நிழல்கள் படத்தின் பாடல்களின் வெற்றியைத் தொடர்ந்து இளையராஜாவின் இசையில் ஏராளமான பாடல்களை பாடி ஹிட் கொடுத்தவர் உமா ரமணன். அந்த வரிசையில் 1981-ல் நடிகர் சுரேஷ் அறிமுகமான பன்னீர் புஷ்பங்கள் திரைப்படத்தில் உமா ரணமன் குரலில் இடம்பெற்ற “ஆனந்த ராகம் கேட்கும் நேரம்” பாடல் இளையராஜாவின் எவர்க்ரீன் ஹிட்கள் ஒன்றாக திகழ்கிறது.

மூடுபனி, கர்ஜனை என இளையராஜாவின் இசையில் ஏராளமான திரைப்படங்களில் பாடல்களைப் பாடி ஹிட் கொடுத்தார்.

உமா ரமணன், இளையராஜா மட்டுமின்றி, எம்.எஸ். விஸ்வநாதன், சங்கர் கணேஷ், டி,ராஜேந்தர், தேவா, சிற்பி, வித்யாசாகர், மணி ஷர்மா என ஏராளமான இசையமைப்பாளர்களின் இசையில்  பாடல்களை பாடி அசத்தியுள்ளார்.

கணவரும், இசையமைப்பாளரும், மேடை இசைக் கலைஞருமான எஸ்.வி ரமணனுடன் இணைந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடை இசைக் கச்சேரிகளில் பங்கேற்று உலகெங்கிலும் உள்ள தமிழ் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர் உமா ரமணன். அவரது பாடல்கள் ரசிகர்கள் நெஞ்சில் என்னென்றும் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்