ஒலிம்பிக் முதல்நாள் நிகழ்வு! - இரவு முழுவதும் பயணிக்கும் மெற்றோக்கள்!!

2 வைகாசி 2024 வியாழன் 16:00 | பார்வைகள் : 9687
ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நாள் நிகழ்வின் போது, பரிஸ் மெற்றோக்கள் சில, 24 மணிநேரம் (இரவு முழுவதும்) இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 26 ஆம் திகதி ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகிறது. பெரும் கோலாகலத்திருவிழாவாக திட்டமிடப்பட்டுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நாள் நிகழ்வின் போது, 1 ஆம், 4 ஆம் மற்றும் 14 ஆம் இலக்க தானியங்கி மெற்றோக்கள் இரவு முழுவதும் தொடர்ச்சியாக இயக்கப்படும் என இல் து பிரான்ஸ் மாகாண முதல்வர் Valérie Pécresse தெரிவித்துள்ளார்.
ஆரம்ப நாள் நிகழ்வின் போது வான வேடிக்கைகளுக்கும் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகள் இரவு 11.15 மணிக்கு நிறைவுக்கு வரும். அனைத்து மெற்றோக்களும், RER சேவைகளும் அதிகாலை 2 மணிவரை இயக்கப்படும் எனவும், மேற்குறித்த மெற்றோ சேவைகள் மட்டும் மறுநாள் காலை வரை தொடர்ந்து பயணிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.