Paristamil Navigation Paristamil advert login

5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வர திட்டம்!

5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வர திட்டம்!

18 ஆவணி 2023 வெள்ளி 11:42 | பார்வைகள் : 4083


வருடாந்தம் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக நேற்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இந்த பணிப்புரையை விடுத்தார்.

சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடியதும், சிறந்த சுற்றுலா வசதிகளை கொண்ட இடமாகவும் இலங்கையை மாற்றுவதற்கான குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் தங்குமிட வசதிகளை மேம்படுத்தும் வகையில், தற்போது பயன்படுத்தப்படாத பாரம்பரிய தோற்றம் கொண்ட கட்டடங்கள் மற்றும் சொகுசு மனைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை தயாரிக்குமாறும், தற்போது வரையில் சுற்றுலாப் பயணிகளின் கவனத்திற்கு உட்படாத பகுதிகளை கண்டறியுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

புதிய முதலீடுகளுக்கு உகந்த சூழலை நாட்டிற்குள் உருவாக்குவதற்கான முதலீட்டு உட்கட்டமைப்பு கூட்டுத்தாபனம் ஒன்று நிறுவப்பட்டு, கொள்கை ரீதியிலான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான சபையொன்றை ஸ்தாபிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் முதலீட்டு வலயங்கள், சுற்றுலா வலயங்கள், தொழில்நுட்ப வலயங்கள் என்பவற்றை அதன் கீழ் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய 09 மாகாணங்களும் உள்ளடங்கும் வகையில், சுற்றுலாச் சபைகளை ஸ்தாபிக்கவும் ஒவ்வொரு மாகாண சபைகளின் கீழ் பிராந்திய குழுக்களை நிறுவ வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்