தம்பதிகள் இருவரும் தனித்தனி படுக்கையில் உறங்குவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் பற்றித் தெரியுமா?
3 வைகாசி 2024 வெள்ளி 04:40 | பார்வைகள் : 1328
கணவனும், மனைவியும் தனித்தனி படுக்கையில் உறங்குவது உறவுமுறையில் தேவையில்லாத பிரச்சனைகளை உருவாக்கும் என காலம் காலமாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்கால தம்பதிகளிடம் இந்தப் போக்கு அதிகரித்துள்ளதை பார்க்க முடிகிறது.
பணி சூழல் காரணமாகவோ அல்லது நல்ல தூக்கத்திற்காகவோ தம்பதிகள் இருவரும் தனித்தனி அறைகளில் உறங்குகிறார்கள். இந்த நவீன டிரெண்ட்டை தற்போது இந்திய தம்பதிகளும் கூட பின்பற்றி வருகிறார்கள். உண்மையில் இப்படி தனித்தனியாக படுப்பது தம்பதிகளுக்கு இடையே நல்ல உறவை வளர்த்தெடுக்குமா என்று கேட்டால், ஆமாம். இது பலருக்கும் உதவியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இன்றைய நவீன வாழ்க்கை முறையில் கணவன், மனைவி என இருவருமே வேலைக்குச் செல்கிறார்கள். ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்தாலும் இரவு நேரத்தில் வீட்டிலிருந்தே வேலை பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், தேவையில்லாமல் இன்னொருவரின் தூக்கமும் பாதிக்கப்படும். இதை கருத்தில் கொண்டே நகரங்களில் வசிக்கும் பலர் இப்படி தனித்தனி அறைகளில் உறங்கும் பழக்கத்தை கொண்டுள்ளார்கள். நம்மால் அடுத்தவர்களின் தூக்கம் பாதிக்கப்படும் என்ற நல்லெண்ணம் தான் இதில் முக்கியமாக இருக்கிறது.
அறிவாற்றல் செயல்பாடு மேம்படுகிறது: மூளையின் செயல்பாடு சிறப்பாக இருப்பதற்கு நல்ல தூக்கம் அவசியமாகும். இது ஒருவரின் நியாபக சக்தி, கவனம், பிரச்சனையை தீர்க்கும் திறன், முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. நன்றாக தூங்குவதால் மூளைக்கு போதுமான ஓய்வு கிடைக்கிறது.
மன ஆரோக்கியம் மேம்படுகிறது: ஒருவரின் உணர்ச்சிகளையும் மனநிலையையும் ஒழுங்குபடுத்துவதில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒழுங்காக தூங்கவில்லை என்றால் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு மன அழுத்தம் அதிகரிக்கும். அடிக்கடி எரிச்சலாவீர்கள்.
சிறப்பான உடல்நலம்: உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தூக்கம் மிகவும் அவசியமாகும். நமது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதில் தூக்கத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது. தினமும் இரவு நன்றாக தூங்கினால் இதய நோய், டயாபடீஸ், உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் வரும் வாய்ப்பு குறைவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.
தம்பதிகள் இப்படி தனித்தனி அறைகளில் படுத்து உறங்குவது கூட இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட விஷயங்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடியதாக அமையும். உறவுமுறையில் இருவருக்கும் இடையே தனிப்பட விஷயங்களில் சிறு இடைவெளி இருப்பது நல்லதுதான்.
ஆனால் இது எல்லாருக்கும் ஏற்புடையதாக இருக்குமா எனக் கூற முடியாது. பல தம்பதிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். சில தம்பதிகள் இடையே தேவையில்லாத பிரச்சனையை ஏற்படுத்தும். உங்கள் இணையை கட்டிப்புடிக்காமலோ அல்லது முத்தம் கொடுக்கமாமலோ என்னால் தூங்க முடியாது என சொல்பவர்கள் இதை முயற்சி செய்யாதீர்கள். அதேப்போல் தனிமையாக உணர்பவர்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.